கர்ப்பிணி உட்கொள்ளும் மருந்துகள் கருவில் உள்ள குழந்தையை சென்றடையுமா? புதிய ஆய்வு தந்த படிப்பினைகள்

பட மூலாதாரம், DEEPAK MODI
- எழுதியவர், ஓம்கார் கரம்பேல்கர்
- பதவி, பிபிசி மராத்தி செய்தியாளர்
- பிரசுரிக்கப்பட்டது
- வாசிக்கும் நேரம்: 6 நிமிடங்கள்
கருத்தரித்தல், கர்ப்பம் மற்றும் பிரசவம் ஆகிய நுட்பமான மற்றும் அதே சமயம் சமமான கவனிப்பு தேவைப்படும் நிலைகளைப் பற்றி பல ஆண்டுகளாக உலகம் முழுவதும் ஆராய்ச்சிகள் நடந்து வருகின்றன.
ஒரு குழந்தை பிறக்கும் வரை அதைப் பாதுகாப்பது என்பது மிகவும் உணர்வுப்பூர்வமான மற்றும் கவனிப்புடன் கூடிய ஒரு செயல்முறையாகும்.
கர்ப்ப காலத்தில் கர்ப்பிணித் தாய்மார்களுக்கு பல மருந்துகள் வழங்கப்படுகின்றன.
இந்த நேரத்தில் அவை உட்கொள்வதற்கு பாதுகாப்பானவையா என்பது பற்றி மருத்துவர்கள் மற்றும் ஆராய்ச்சியாளர்களுக்குப் போதிய அளவில் தெளிவில்லை.
கர்ப்ப காலத்தில் நஞ்சுக்கொடியை நேரடியாக ஆய்வு செய்வது கடினம் என்பது தான் இதற்கான முக்கியக் காரணமாகக் கருதப்படுகின்றது.
இந்தப் பிரச்னைக்குத் தீர்வு காண, ஐசிஎம்ஆர் பெண்கள் ஆரோக்கியத்திற்கான தேசிய ஆராய்ச்சி நிறுவனம் மற்றும் ஐஐடி பாம்பே ஆகிய நிறுவனங்களின் ஆராய்ச்சியாளர்கள், மனித நஞ்சுக்கொடியின் முக்கிய செயல்பாடுகளை ஆய்வகத்தில் மறுஉருவாக்கம் செய்யும் 'பிளாசன்டா ஆன் எ சிப்' என்ற தொழில்நுட்ப அமைப்பை உருவாக்கியுள்ளனர்.
இந்த ஆராய்ச்சியின் கண்டுபிடிப்புகள் 'பயோஃபேப்ரிகேஷன்' என்ற சர்வதேச இதழில் வெளியிடப்பட்டுள்ளன.
இந்த ஆராய்ச்சியில் அன்ஷுல் பைடே, சௌரவ் முகர்ஜி, மருத்துவர் கிஞ்சல்கா கோஷ், பேராசிரியர் அபிஜித் மஜும்தார் மற்றும் பேராசிரியர் தீபக் மோதி ஆகியோர் பங்கேற்றனர்.
'பிளசென்டா ஆன் எ சிப்' என்பது மனித நஞ்சுக்கொடியின் முக்கிய செயல்பாடுகளை மறு உருவாக்கம் செய்யும் ஒரு நுண்நோக்கி ஆய்வக அமைப்பாகும் .
இந்த சிப்பின் உதவியுடன், ஊட்டச்சத்துக்கள், ஹார்மோன்கள், மருந்துகள் மற்றும் கழிவுப் பொருட்கள் ஆகியவை தாய்க்கும் கருவிற்கும் இடையே எவ்வாறு நகர்கின்றன என்பதை ஆராய்ச்சியாளர்களால் ஆய்வு செய்ய முடியும்.
ஆராய்ச்சியாளர்கள் மனித ட்ரோபோபிளாஸ்ட் மற்றும் எண்டோடெலியல் செல்களைப் பயன்படுத்தி இரண்டு அறைகளைக் கொண்ட அமைப்பை உருவாக்கியுள்ளனர்.
இதன் மூலம் ஹார்மோன் உற்பத்தி, ஊட்டச்சத்து கடத்தல், கழிவுப் பரிமாற்றம் மற்றும் தேர்ந்தெடுக்கப்பட்ட தடுப்புச் செயல்பாடு ஆகியவற்றை வெற்றிகரமாக நிரூபித்துள்ளனர்.
இந்த ஆராய்ச்சியாளர்களின் கூற்றுப்படி, "எதிர்காலத்தில், கர்ப்ப காலத்தில் மருந்துகளின் பாதுகாப்பைச் சோதிக்கவும், கர்ப்பம் தொடர்பான கோளாறுகளை ஆய்வு செய்யவும் மற்றும் விலங்கின சோதனைகளைச் சார்ந்திருப்பதைக் குறைக்கவும் இந்தத் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தலாம்."
நஞ்சுக்கொடி என்பது என்ன?

பட மூலாதாரம், Getty Images
இப்போது நஞ்சுக்கொடி என்றால் என்ன ? அதன் செயல்பாடு என்ன என்பது குறித்துத் தெரிந்து கொள்வோம்.
நஞ்சுக்கொடி என்பது கர்ப்ப காலத்தில் தாயின் கருப்பையில் உருவாகும் ஒரு தற்காலிகமான, ஆனால் மிக முக்கியமான உறுப்பாகும். இது தாய்க்கும் கருவுக்கும் இடையே ஒரு இணைப்பாகச் செயல்படுகிறது.
கருவுக்குத் தேவைப்படும் ஆக்ஸிஜன், ஊட்டச்சத்துகள் மற்றும் பிற முக்கியமான கூறுகளை தாயிடமிருந்து கருவுக்கு நஞ்சுக்கொடி எடுத்துச் செல்கிறது.
அதே நேரத்தில், கருவில் உற்பத்தியாகும் பொருட்களை மீண்டும் தாயின் ரத்த ஓட்டத்திற்குள் அனுப்பும் வேலையையும் இது செய்கிறது. நஞ்சுக்கொடி ஒரு ஊட்டமளிக்கும் உறுப்பு மட்டுமல்ல, அது பாதுகாப்பும் அளிக்கிறது.
சில தீங்கு விளைவிக்கும் கூறுகள் கருவை அடைவதைத் தடுக்க இது உதவுகிறது. கர்ப்பத்தைத் தக்கவைக்கத் தேவையான சில முக்கியமான ஹார்மோன்களையும் உற்பத்தி செய்கிறது.
எளிமையாகச் சொன்னால், நஞ்சுக்கொடி என்பது தாய்க்கும் குழந்தைக்கும் இடையிலான ஒரு "உயிருள்ள பாலம்" ஆகும்.
இது கருவின் வளர்ச்சி மற்றும் முன்னேற்றத்திற்குத் தேவையான அனைத்துப் பரிமாற்றங்களையும் ஒழுங்குபடுத்துகிறது.
சிப்பில் உள்ள நஞ்சுக்கொடி எப்படி வேலை செய்கிறது?
தாய்க்கும் குழந்தைக்கும் இடையே ஓர் இணைப்பாகச் செயல்படுவதோடு மட்டுமல்லாமல், நஞ்சுக்கொடி கருவையும் பாதுகாக்கிறது.
இருப்பினும், நெறிமுறை மற்றும் தொழில்நுட்பக் கட்டுப்பாடுகள் காரணமாக, கர்ப்ப காலத்தில் நஞ்சுக்கொடியை ஆய்வு செய்வது கடினம்.
இந்தத் பிரச்னைக்குத் தீர்வு காண, ஆராய்ச்சியாளர்கள் ஆய்வகத்தில் நஞ்சுக்கொடியின் செயல்பாடுகளைப் பிரதிபலிக்கும் ஒரு சிறிய அமைப்பை உருவாக்கியுள்ளனர்.
இது தாய்க்கும் கருவுக்கும் இடையிலான உயிரியல் ரீதியான தொடர்பின் நிலைமைகளை மறுஉருவாக்கம் செய்கிறது.
ஆராய்ச்சியாளர்கள் உருவாக்கிய இந்தச் சாதனம், துளைகள் கொண்ட ஒரு சவ்வினால் பிரிக்கப்பட்ட இரண்டு தனித்தனி அறைகளைக் கொண்டுள்ளது.
இந்தச் சவ்வின் ஒரு பக்கத்தில் ட்ரோபோபிளாஸ்ட் செல்களும், மறுபக்கத்தில் எண்டோதீலியல் செல்களும் வளர்க்கப்படுகின்றன. இது மனித நஞ்சுக்கொடி தடையை செயற்கையான முறையில் மறுஉருவாக்கம் செய்ய உதவுகிறது.

பட மூலாதாரம், DEEPAK MODI
குறிப்பிட்ட வகை சிறப்பு செல்களான ட்ரோபோபிளாஸ்ட்கள், கர்ப்பத்தின் ஆரம்ப கட்டங்களில் உருவாகி, பின்னர் நஞ்சுக்கொடியின் முக்கியப் பகுதியாக மாறுகின்றன. இந்தச் செல்கள் தாய்க்கும் கருவிற்கும் இடையே தொடர்பை ஏற்படுத்துகின்றன.
இவை கருவுக்கு ஊட்டச்சத்துகள் மற்றும் ஆக்ஸிஜனை வழங்குவதிலும், கர்ப்பத்தைத் தக்கவைக்கத் தேவையான ஹார்மோன்களை உற்பத்தி செய்வதிலும் முக்கியப் பங்கு வகிக்கின்றன.
'பிளாசன்டா-ஆன்-எ-சிப்'பில் நஞ்சுக்கொடியின் வெளிப்புற அடுக்கை மறுஉருவாக்கம் செய்ய ஆராய்ச்சியாளர்கள் இந்தச் செல்களைப் பயன்படுத்தினர்.
எண்டோதீலியல் செல்கள் என்பவை ரத்த நாளங்களின் உட்சுவர்களை வரிசைப்படுத்தும் செல்கள் ஆகும். உடல் முழுவதும் ரத்த ஓட்டத்தை ஒழுங்குபடுத்துவது, ரத்தத்தில் உள்ள பொருட்களின் பரிமாற்றத்தை அனுமதிப்பது மற்றும் ரத்த நாளங்களின் ஆரோக்கியத்தைப் பராமரிப்பது ஆகியவை இவற்றின் முக்கிய செயல்பாடுகளாகும்.
நஞ்சுக்கொடியில், இந்தச் செல்கள் கருவின் ரத்த நாளங்களின் உட்புற அடுக்கை உருவாக்குகின்றன.
'பிளாசன்டா-ஆன்-எ-சிப்'பில், கருவின் பக்கத்தை உருவாக்க ஆராய்ச்சியாளர்கள் இந்தச் செல்களைப் பயன்படுத்தினர்.
பரிசோதனைகளில், இந்த சிப் கர்ப்ப காலத்தில் முக்கியமான ஹார்மோன்களை உற்பத்தி செய்தது, குளுக்கோஸ் போன்ற ஊட்டச்சத்துக்களைக் கடத்தியது, கழிவுப் பொருட்களின் பரிமாற்றத்தை நிரூபித்தது மற்றும் ஒரு தடையை உருவாக்குவதன் மூலம் பெரிய மூலக்கூறுகளைத் தேர்ந்தெடுத்து கடத்தும் திறனை வெளிப்படுத்தியது.
ஆராய்ச்சியாளர்கள் அதிக குளுக்கோஸ் அளவுகள் கொண்ட சூழலையும் உருவாக்கி, இந்த அமைப்பு அதற்கு எதிர்வினையாற்றக் கூடியது என்பதை வெளிப்படுத்தினர்.

பட மூலாதாரம், DEEPAK MODI
இந்தத் தொழில்நுட்பம் ஏன் நமக்கு தேவை?
தற்போது, கர்ப்ப காலத்தில் மருந்துகளின் பாதுகாப்பைச் சோதிப்பது பெரும்பாலும் விலங்கின ஆராய்ச்சிகளையே பெரிதும் சார்ந்துள்ளது.
இருப்பினும், விலங்குகளின் நஞ்சுக்கொடிக்கும் மனித நஞ்சுக்கொடிக்கும் இடையே முக்கியமான உயிரியல் வேறுபாடுகள் உள்ளன. எனவே இந்தக் கண்டுபிடிப்புகள் மனிதர்களுக்கும் அதேபோல பொருந்தும் என்பதற்குப் பெரும்பாலும் உத்தரவாதம் அளிக்க முடிவதில்லை.
கூடுதலாக, கர்ப்பம் தொடர்பான கோளாறுகள், தாய்-சேய் இடையேயான தொடர்புகள், கருவுக்கு மருந்துகளைக் கொண்டு சேர்த்தல் மற்றும் நஞ்சுக்கொடி தொடர்பான பிரச்னைகளை ஆய்வு செய்வதற்கு நம்பகமான மனித மாதிரிகளின் தேவை அதிகரித்து வருகிறது.
ஆராய்ச்சியாளர்களின் கூற்றுப்படி, 'பிளாசன்டா-ஆன்-எ-சிப்' அமைப்பு அந்தத் திசையில் ஒரு முக்கியமான படியாக அமையக்கூடும்.
இது விலங்கின சோதனைகளுக்கு ஒரு மாற்றுத் தீர்வை வழங்குவதோடு, எதிர்காலத்தில் பாதுகாப்பான மருந்துகள் மற்றும் தாய்-சேய் ஆரோக்கியம் பற்றிய ஆழமான புரிதலுக்கு வழிவகுக்கும்.

பட மூலாதாரம், Getty Images
இந்தச் சிப்பின் பின்னணியில் இருக்கும் ஆராய்ச்சியாளர்களில் ஒருவரான பேராசிரியர் தீபக் மோடி பிபிசி மராத்தியிடம் கூறுகையில், "இதுவரை உருவாக்கப்பட்ட பல மாதிரிகள் மிகவும் சிக்கலானவையாக இருந்தன. மனித நஞ்சுக்கொடி உண்மையில் எவ்வாறு செயல்படுகிறது என்று நாங்கள் முதலில் எங்களிடமே கேட்டுக்கொண்டோம்." என்றார்.
தாயின் ரத்தம் ரத்த நாளங்கள் வழியாக நஞ்சுக்கொடிக்குள் பாய்வதில்லை, மாறாக நஞ்சுக்கொடி திசுக்களைச் சுற்றி சுழன்று, ஊட்டச்சத்துக்கள் மற்றும் ஆக்ஸிஜனைப் பரிமாறிக்கொள்கிறது என்பது அப்போது உணரப்பட்டது.
எனவே, மிகவும் சிக்கலான ஒரு பொறிமுறையை உருவாக்குவதற்குப் பதிலாக, நஞ்சுக்கொடியின் இயற்கையான செயல்பாட்டைப் பிரதிபலிக்கும் ஒரு எளிய வடிவமைப்பை அவர்கள் உருவாக்கினர்.
"இந்த எளிய அமைப்பு நஞ்சுக்கொடியின் முக்கிய செயல்பாடுகளைச் செய்ய முடியும் என்பதை நிரூபிப்பது ஒரு பெரிய சவாலாக இருந்தது. சோதனைகளில், இந்தச் சிப் ஹார்மோன்களை உற்பத்தி செய்யவும், ஊட்டச்சத்துகளைக் கடத்தவும், கழிவுப் பொருட்களை அகற்றவும் மற்றும் நோய் போன்ற சூழ்நிலைகளுக்கு எதிர்வினையாற்றவும் தன் திறனை வெளிப்படுத்தியது. எளிமையைப் பேணிக்கொண்டே உயிரியல் ரீதியாக துல்லியமான அமைப்பை அடைய முடியும் என்பதை இது நிரூபித்தது." என்று அவர் கூறினார்.
நீரிழிவு நோய், ப்ரீ-எக்லாம்ப்சியா (கர்ப்பகால உயர் ரத்த அழுத்தம்) மற்றும் கரு வளர்ச்சித் தடை போன்ற சிக்கல்களைப் புரிந்துகொள்ள இந்த சிப் எவ்வாறு உதவும்?
இதற்குப் பேராசிரியர் மோதி பதில் கூறுகையில், "கர்ப்பம் தொடர்பான பல சிக்கல்கள் நஞ்சுக்கொடியில் தான் தொடங்குகின்றன. இருப்பினும், மனித உடலில் கர்ப்ப காலத்தில் நேரடியாக ஆய்வு செய்ய முடியாத ஒரு உறுப்பு அது.
எனவே, கர்ப்பகால நீரிழிவு, ப்ரீ-எக்லாம்ப்சியா மற்றும் கரு வளர்ச்சித் தடை போன்ற நிலைகள் நஞ்சுக்கொடியை எவ்வாறு பாதிக்கின்றன, அதன் விளைவாகக் குழந்தையை எவ்வாறு பாதிக்கின்றன என்பது பற்றி நமக்கு போதிய தெளிவு இல்லை" என்றார்.
அன்ஷுல் பைடே கூறுகையில், "எங்கள் பிளாசன்டா-ஆன்-எ-சிப் தொழில்நுட்பம் இந்த மறைக்கப்பட்ட உலகத்தைப் பற்றிய ஒரு பார்வையை வழங்குகிறது. ஆய்வகத்தில் நோய் போன்ற நிலைமைகளை உருவாக்கி, நஞ்சுக்கொடி அதற்கு எவ்வாறு பதிலளிக்கிறது என்பதை எங்களால் பார்க்க முடியும்." என்கிறார்.
"உதாரணமாக இந்த ஆய்வில், கர்ப்பகால நீரிழிவு நோயில் காணப்படும் அதிக ரத்த சர்க்கரை அளவைப் போன்ற சூழலை நாங்கள் உருவாக்கினோம்.
நஞ்சுக்கொடி தனது தடைச் செயல்பாட்டைத் தக்க வைத்துக் கொண்டே, தாயிடமிருந்து குழந்தைக்கு அதிக குளுக்கோஸ் கடந்து செல்ல அனுமதிக்கிறது என்பதைக் கண்டறிந்தோம்.
நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்ட தாய்மார்களின் குழந்தைகள் கூடுதல் குளுக்கோஸைப் பெற்று வேகமாக வளர்வதற்கு இது ஒரு சாத்தியமான வழிமுறையாக இருக்கலாம்." என்றும் அவர் கூறினார்.

பட மூலாதாரம், Getty Images
இந்த ஆராய்ச்சி எத்தகைய புதிய கண்ணோட்டங்களை வழங்கக்கூடும் என்று கேட்கப்பட்டபோது, அதனை விளக்கிய பேராசிரியர் தீபக் மோதி, "கர்ப்பம் தொடர்பான பல நிலைகளை ஆய்வு செய்ய இப்போது இதே முறையைப் பயன்படுத்தலாம். நோய்த்தொற்றுகள், ஊட்டச்சத்து குறைபாடுகள் அல்லது சுற்றுச்சூழல் மாசு நஞ்சுக்கொடியின் செயல்பாட்டையும் குழந்தைக்கு ஊட்டச்சத்துக்கள் கடத்தப்படுவதையும் எவ்வாறு பாதிக்கின்றன என்பதை நாம் ஆராயலாம்." என்றார்.
முக்கியமாக, இந்தச் சோதனைகள் மனித செல்களைப் பயன்படுத்தி முற்றிலும் கட்டுப்படுத்தப்பட்ட சூழ்நிலைகளின் கீழ் செய்யப்படுகின்றன. இது விலங்கின ஆய்வுகள் அல்லது உண்மையான கர்ப்பங்களிலிருந்து பெறுவதற்கு கடினமாக இருக்கும் தகவல்களை வழங்கக்கூடும்.
"சிக்கல்களுக்கான மருத்துவ அறிகுறிகள் தோன்றுவதற்கு முன்பே, நஞ்சுக்கொடியில் என்ன தவறு நடக்கிறது என்பதைப் புரிந்துகொள்வதே இதன் இறுதி இலக்காகும்.
இத்தகைய தகவல்கள் புதிய சிகிச்சைகளுக்கும், தாய் மற்றும் குழந்தையின் ஆரோக்கியத்தைப் பாதுகாப்பதற்கான மிகவும் பயனுள்ள தீர்வுகளுக்கும் வழிவகுக்கும்" என்று அவர் குறிப்பிட்டார்.
விலங்கு சோதனைகள் அல்லது கர்ப்பிணிகளுக்கான ஆய்வுகளை முதன்மையாக சார்ந்திராமல், கர்ப்ப காலத்தில் மருந்துகளின் பாதுகாப்பைச் சோதிக்க எதிர்காலத்தில் இந்த ஆராய்ச்சி உதவுமா என்று நாங்கள் ஆராய்ச்சியாளர்களிடம் கேட்டோம்.
அதுகுறித்து பேராசிரியர் தீபக் மோதி கூறுகையில், "கர்ப்ப காலத்தில் பயன்படுத்தப்படும் மருந்துகள் பிறக்காத குழந்தைக்கு பாதுகாப்பானவையா என்பது பெரும்பாலும் உறுதியாகத் தெரிவதில்லை. அது மிகப்பெரிய பிரச்னை" என்றார்.
நெறிமுறைக் காரணங்களுக்காக பெரும்பாலான மருத்துவ சோதனைகளில் இருந்து கர்ப்பிணிகள் விலக்கி வைக்கப்படுகிறார்கள், எனவே கர்ப்ப காலத்தில் பல மருந்துகளின் செயல்பாடுகளைப் புரிந்துகொள்வதற்கான போதிய சான்றுகள் இல்லை.
"ஒரு மருந்து நஞ்சுக்கொடியைக் கடந்து குழந்தையை சென்றடைகிறதா என்பது மிகவும் முக்கியமான கேள்வி. தற்போது, இதற்கு முக்கியமாக விலங்கு மாதிரிகள் தான் பயன்படுத்தப்படுகின்றன.
இருப்பினும், மனித மற்றும் விலங்குகளின் நஞ்சுக்கொடிகளுக்கு இடையே பெரிய வேறுபாடுகள் இருப்பதால், விலங்கின கண்டுபிடிப்புகள் எப்போதும் மனித கர்ப்பத்திற்கு துல்லியமாகப் பொருந்துவதில்லை" என்று அவர் கூறுகிறார்.

பட மூலாதாரம், Getty Images
மனித செல்களை அடிப்படையாகக் கொண்ட 'பிளாசன்டா-ஆன்-எ-சிப்' தொழில்நுட்பம், இப்பிரச்னைக்குத் தீர்வுகாண ஒரு புதிய வழியை வழங்குகிறது.
இதன் மூலம், கட்டுப்படுத்தப்பட்ட ஆய்வக சூழ்நிலைகளில் தாயிடமிருந்து குழந்தைக்கு மருந்துகள் எவ்வாறு கடத்தப்படுகின்றன என்பதை நாம் ஆய்வு செய்ய முடியும்.
இது மருந்து உருவாக்கத்தின் ஆரம்ப கட்டத்திலேயே மனித சூழல்கள் பற்றிய முக்கியமான தகவல்களை வழங்கவும், அடுத்தகட்ட சோதனைகளுக்குப் பொருத்தமான மருந்துகளைத் தேர்ந்தெடுக்கவும் உதவும் என்று அவர் கூறுகிறார்.
"இந்தத் தொழில்நுட்ப அமைப்பு உடனடியாக விலங்கின ஆய்வுகளையோ அல்லது மருத்துவ ஆராய்ச்சிகளையோ மாற்றிவிடும் என்று நாங்கள் கூறவில்லை," என்று ஐசிஎம்ஆர்-என்ஐஆர்டபிள்யூஓஹெச் (ICMR-NIRWoH) நிறுவனத்தின் இயக்குநர் மருத்துவர் கீதாஞ்சலி சச்தேவா கூறினார்.
"மாறாக, தற்போதுள்ள முறைகளுக்குத் துணையாக மனிதர்களுக்கென பிரத்யேக சான்றுகளை வழங்குவதே இதன் இலக்காகும். எதிர்காலத்தில், விரிவாக சரிபார்த்த பிறகு, இந்தத் தொழில்நுட்பம் சில விலங்கின சோதனைகளின் தேவையைக் குறைக்கலாம் மற்றும் கர்ப்பிணிகளுக்கான பாதுகாப்பான சிகிச்சைகளின் வளர்ச்சியை விரைவுபடுத்தலாம்" என்றும் அவர் குறிப்பிட்டார்.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு






























