சென்னையில் அசத்திய சாய் சுதர்ஷன் - சூப்பர் கிங்ஸை வீழ்த்தியது குஜராத் டைட்டன்ஸ்

வாசிக்கும் நேரம்: 5 நிமிடங்கள்

ஐபிஎல் 2026 தொடரில் இன்று (ஏப்ரல் 26) சேப்பாக்கத்தில் நடந்த போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் குஜராத் டைட்டன்ஸ் வீழ்த்தியது.

இந்த வெற்றியின் மூலம் குஜராத் அணி 8 புள்ளிகளுடன் புள்ளிப் பட்டியலில் ஐந்தாவது இடத்துக்கு முன்னேறியது. 6 புள்ளிகளோடு இருக்கும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ஆறாவது இடத்துக்குத் தள்ளப்பட்டது.

டாஸ் வென்ற குஜராத் அணியின் கேப்டன் சுப்மன் கில் பந்து வீச்சை தேர்வு செய்தார்.

சிஎஸ்கே அணியில் இந்தப் போட்டிக்கான பிளேயிங் லெவனில் உர்வில் பட்டேல் சேர்க்கப்பட்டிருக்கிறார். டைட்டன்ஸ் அணியில் அர்ஷத் கான் சேர்க்கப்பட்டிருக்கிறார்.

முதலில் பேட்டிங் செய்த சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 20 ஓவர்களில் 7 விக்கெட்டுகள் இழப்புக்கு 158 ரன்கள் எடுத்தது. சிஎஸ்கே கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட் ஆட்டமிழக்காமல் 74 ரன்கள் எடுத்தார். குஜராத் டைட்டன்ஸ் பௌலர் ககிஸோ ரபாடா 3 விக்கெட்டுகள் வீழ்த்தினார்.

அடுத்து விளையாடிய குஜராத் டைட்டன்ஸ் 16.4 ஓவர்களில் அந்த இலக்கை எட்டியது. தமிழ்நாட்டை சேர்ந்த பேட்டர் சாய் சுதர்ஷன் 46 பந்துகளில் 87 ரன்கள் எடுத்து அணியின் வெற்றிக்கு முக்கியப் பங்காற்றினார்.

சிஎஸ்கே 158 ரன்கள்

சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு இந்தப் போட்டியின் தொடக்கம் அதிர்ச்சிகரமாக இருந்தது. பவர்பிளேவில் குஜராத் வேகப்பந்துவீச்சாளர்கள் மிகச் சிறப்பாகப் பந்துவீசியதால் அடுத்தடுத்து விக்கெட்டுகள் விழுந்தன. சஞ்சு சாம்சன் (11 ரன்கள்), உர்வில் பட்டேல் (4 ரன்கள்) இருவரையும் ஆட்டத்தின் நான்காவது ஓவரில் வெளியேற்றினார் ககிஸோ ரபாடா. அடுத்த ஓவரில் சிராஜ் பந்துவீச்சில் டக் அவுட் ஆனார் இம்பேக்ட் வீரராகக் களமிறக்கப்பட்ட சர்ஃபராஸ் கான்.

இப்படி அடுத்தடுத்து விக்கெட்டுகள் வீழ்ந்ததால் பவர்பிளேவில் 3 விக்கெட்டுகளை இழந்து 28 ரன்கள் மட்டுமே எடுத்தது சிஎஸ்கே. 9வது ஓவரில், 2 ரன்கள் எடுத்திருந்த டெவால் பிரெவிஸ் விக்கெட்டை வீழ்த்தினார் மானவ் சூதர். அதனால் 37/4 என்ற நிலையில் சூப்பர் கிங்ஸ் தடுமாறியது.

ஒருபக்கம் விக்கெட்டுகள் தொடர்ந்து வீழ்ந்துகொண்டிருக்க, கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட் மட்டும் நிதானமாக நிலைத்து நின்று ஆடினார். அவர் ஒருபக்கம் நிலைத்து நிற்க, அதன்பிறகு வந்த ஷிவம் துபே (22 ரன்கள்), கார்த்திக் ஷர்மா (15 ரன்கள்), ஜேமி ஓவர்டன் (18 ரன்கள்) ஆகியோர் சிறு அதிரடி கேமியோக்கள் ஆடினார்கள். அதனால் சூப்பர் கிங்ஸ் ரன்ரேட் மெல்ல உயர்ந்தது.

ஆரம்பத்தில் நிதானம் காட்டிக்கொண்டிருந்த ருதுராஜ் கெய்க்வாட், அர்ஷத் கான் வீசிய 13வது ஓவரில் இருந்து மெல்ல தன் வேகத்தைக் கூட்டினார். டெத் ஓவர்களில் அவர் பவுண்டரிகளும் சிக்ஸர்களுமாக விளாசியதால் சூப்பர் கிங்ஸ் 150 ரன்களைக் கடந்தது.

ருதுராஜ் கெய்க்வாட் ஆடிய ஆட்டத்தால் 20 ஓவர்களில் 7 விக்கெட்டுகள் இழப்புக்கு 158 ரன்கள் எடுத்தது சென்னை சூப்பர் கிங்ஸ். 12 ஓவர்கள் முடிவில் 51/4 என்ற நிலையில் இருந்த சூப்பர் கிங்ஸ், கடைசி 8 ஓவர்களில் சிறப்பாக பேட்டிங் செய்து மேலும் 107 ரன்கள் சேர்த்தது.

கடைசி வரை ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்த கெய்க்வாட், 60 பந்துகளில் 74 ரன்கள் எடுத்தார். குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு அதிகபட்சமாக ககிஸோ ரபாடா 3 விக்கெட்டுகள் வீழ்த்தினார்.

குஜராத் டைட்டன்ஸ் வெற்றி

இன்னிங்ஸ் தொடக்கத்தில் சிஎஸ்கே தடுமாறியதுபோல், குஜராத் டைட்டன்ஸ் பேட்டர்கள் தடுமாறவில்லை. ஷுப்மன் கில் - சாய் சுதர்ஷன் இணை ஆரம்பம் முதலே அதிரடியாக விளையாடியது. அகீல் ஹொசைன் வீசிய முதல் ஓவரில் கில் ஒரு பவுண்டரி மற்றும் ஒரு சிக்ஸர் விளாச, 11 ரன்கள் கிடைத்தது.

இன்னொரு முணையில் வீசிய கம்போஜ் சற்று சிக்கனமாக வீசினாலும், மற்றொரு முணையில் பவுண்டரிகள் சென்றுகொண்டே இருந்தன. பவர்பிளேவின் கடைசி ஓவரில் கில் கொடுத்த வாய்ப்பை அகீல் ஹொசைன் தவறவிட, அந்த அன்ஷுல் கம்போஜ் ஓவரிலுமே அதிக ரன்கள் எடுக்கப்பட்டன. அதனால், பவர்பிளேவை 55/0 என்ற பலமான நிலையில் முடித்தது குஜராத் டைட்டன்ஸ்.

பவர்பிளே முடிந்த அடுத்த ஓவரிலேயே கில் விக்கெட்டைக் கைப்பற்றினார் நூர் அஹமது. பந்து வைடாக செல்ல, கில் கிரீஸுக்குள் திரும்புவதற்குள் சிறப்பாக ஸ்டம்பிங் செய்தார் சஞ்சு சாம்சன்.

கில் அவுட் ஆனாலும், சாய் சுதர்ஷன் தன் நல்ல ஃபார்மை தொடர்ந்தார். ஒவ்வொரு ஓவரிலும் ஒரு பவுண்டரியோ, சிக்ஸரோவாவது வரும் வகையில் அவர் பார்த்துக்கொண்டார். அதனால், சூப்பர் கிங்ஸால் ரன்ரேட் நெருக்கடியையும் ஏற்படுத்த முடியவில்லை. 33 பந்துகளில் அரைசதம் அடித்த சாய் சுதர்ஷன், 46 பந்துகளில் 87 ரன்கள் எடுத்து வெளியேறினார்.

கடைசி கட்டத்தில் ஜாஸ் பட்லர் ஆட்டமிழக்காமல் 39 ரன்கள் எடுத்து அணியின் வெற்றியை உறூதி செய்தார். 16.4 ஓவர்களிலேயே இலக்கை எட்டி, 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது குஜராத் டைட்டன்ஸ்.

எட்டாவது லீக் போட்டியில் விளையாடிய அந்த அணிக்கு இது நான்காவது வெற்றி. இதன்மூலம் புள்ளிப் பட்டியலில் அந்த அணி 5வது இடத்துக்கு முன்னேறியது. சிஎஸ்கே 6 புள்ளிகளுடன் 6வது இடத்தில் இருக்கிறது.

ருதுராஜ் கெய்க்வாட் என்ன சொன்னார்?

போட்டி முடிந்த பிறகு பேசிய சிஎஸ்கே கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட், "சில நேரங்களில் ஆட்டத்தை இப்படி ஆராய்வது எனக்குப் பிடிக்காது, ஆனால் முதல் இன்னிங்ஸில் ஆடுவது சவாலாக இருந்தது. மிதவேகப் பந்துவீச்சாளர்களுக்கு பந்து ஆடுகளத்தில் தங்கி வந்தது. அதேபோல் பவுன்ஸ் சீராக இல்லாமல் ஏறியும் இறங்கியும் இருந்தது. அதனால் நாங்கள் அதிக விக்கெட்டுகளை இழந்தோம், சில ஷாட்களை ஆடுவது கடினமாக இருந்தது.

ஆடுகளம் இப்படி இருக்கும் என்று நாங்கள் எதிர்பார்க்கவில்லை. அது எப்படிச் செயல்படும் என்று கணிப்பது கடினமாக இருந்தது. இந்தப் போட்டியில் அதைப் பற்றி எங்களுக்கு எந்த யோசனையும் இல்லை. நாங்கள் அந்தச் சூழலுக்கு ஏற்ப மாற நினைப்பதற்குள் நேரம் கடந்துவிட்டது. முதல் 'டைம்-அவுட்' சமயத்தில் ஃபிளெமிங் உள்ளே வந்தபோது, நான் அதிரடியாக ஆட முயற்சிப்பதாக அவரிடம் சொன்னேன், ஆனால் அது கடினமாக இருந்தது. சில பந்துகள் அதிகமாக எழும்பின, சில பந்துகள் எழும்பவே இல்லை. அதனால் எனது ஆட்டத்தை மாற்ற முயற்சிப்பதாக அவரிடம் கூறினேன். ஆனால் அது சரியாக அமையவில்லை. இன்று எங்களுக்கு ஒரு மோசமான நாள், பீல்டிங்கிலும் நாங்கள் மந்தமாகவே செயல்பட்டோம்." என்று கூறினார்.

தன்னுடைய இன்னிங்ஸ் பற்றி மேலும் பேசிய ருதுராஜ், " நான் ஒரு நல்ல தொடக்கத்தைப் பெற்றேன். 6 பந்துகளில் 10 ரன்கள் அடித்திருந்தேன். அந்த வேகத்தைத் தொடர நினைத்தேன். ஆனால் விக்கெட்டுகள் விழுந்த பிறகு, ஒரு பார்ட்னர்ஷிப் அமைக்க எண்ணினேன். அதனால் நிதானமாக ஆடி ஸ்டிரைக்கை மாற்ற முயன்றேன். வேறு எந்த ஆடுகளமாகவோ அல்லது வேறு நாளாகவோ இருந்திருந்தால், நான் எளிதாக ரன்களை மாற்றியிருப்பேன். ஒருமுறை பந்து என் மேல் பட்ட பிறகு, 'சரி, அப்படியே தொடர்ந்து ஆடுவோம்' என்று முடிவு செய்தேன்." என்றார்.

சிஎஸ்கேவின் எழுச்சிப் பயணம் தொடருமா?

சஞ்சு சாம்சனின் பேட்டிங் சிஎஸ்கேவுக்கு பெரிய மாற்றத்தை கொண்டு வந்துள்ளது. தொடக்கத்தில் மூன்று முறை ஒற்றை இலக்கத்தில் அவுட்டான அவர், கடந்த நான்கு போட்டிகளில் இரண்டு சதங்கள் மற்றும் ஒரு 48 ரன்கள் அடித்து அணியின் நம்பிக்கையை உயர்த்தியுள்ளார்.

அதே நேரத்தில், நூர் அகமது தனது பந்துவீச்சு ஃபார்மை மீண்டும் கண்டுபிடித்துள்ளார். கடைசி மூன்று போட்டிகளில் 6.50 என்ற எகானமி ரேட்டில் ஐந்து விக்கெட்டுகளை எடுத்துள்ளார்.

எம்எஸ் தோனி அணியில் பங்கேற்பது குறித்து தெளிவு இல்லை என்ற போதிலும், அணியின் சமநிலை மேம்பட்டு வருகிறது. அகீல் ஹொசைன் போன்றவர்கள் புதிய பந்தை சிறப்பாக கையாளுவதில் முக்கிய பங்கு வகிப்பதும் சிஎஸ்கேவுக்கு பலமாக உள்ளது.

ஆனால், ருத்துராஜ் கெய்க்வாட் மற்றும் ஷிவம் துபே ஆகியோரின் ஃபார்ம் இன்னும் கவலைக்குரியதாகவே உள்ளது.

தடுமாறும் குஜராத் அணி

குஜராத் அணியின் ஓபனர்கள் டிஃபென்சிவ் அணுகுமுறையுடன் விளையாடுவதாக சில விமர்சகர்கள் கூறுகின்றனர். ஓபனிங் பேட்டர்கள் பலமாக இருந்த போதிலும் பின்வரிசை வீரர்கள் இதுவரை தாக்கத்தை ஏற்படுத்தாமல் இருப்பதும் பிரச்னையாக உள்ளது.

பேட்டிங்கில் உள்ள பிரச்னை ரஷீத் கான், ரபாடா, போன்ற பந்து வீச்சாளர்களுக்கு கூடுதல் அழுத்தத்தை தரக்கூடும்.

டாஸில் நடந்தது என்ன?

டாஸ் வென்ற ஷுப்மன் கில், "நாங்கள் பல விஷயங்களைச் சரியாகச் செய்து வருகிறோம். சிறிய தருணங்களில் வெற்றி பெறுவதுதான் இப்போது முக்கியம். பந்துவீச்சில் நாங்கள் ரன்களை விட்டுக் கொடுக்கும்போது, அந்த மூன்று முதல் நான்கு ஓவர் இடைவெளியில் மிக அதிகமான ரன்களைக் கொடுத்து விடுகிறோம். எனவே, மிடில் ஓவர்களில் சரியான லென்த்தில் தொடர்ந்து பந்து வீசுவதே இப்போதைய தேவை. அதைப்பற்றித்தான் நாங்கள் ஆலோசித்து வருகிறோம்." என்று கூறினார்.

பவர்பிளேவில் அதிரடியாக ஆடுவது பற்றிய கேள்விக்கு பதிலளித்த கில், "ஆடுகளம் சாதகமாக இருந்தால் பவர்பிளேயில் 70-80 ரன்கள் அல்லது எவ்வளவு முடியுமோ அவ்வளவு ரன்களை எடுக்க வேண்டும். ஆனால் சூழ்நிலையை கணிப்பது மிகவும் முக்கியம். ஒருவேளை அது 170-180 ரன்கள் எடுக்கக்கூடிய ஆடுகளமாக இருந்தால், அதற்கேற்ப விளையாட வேண்டும். இறுதியில், நடக்காத ஒன்றைப் பற்றி யோசிப்பதை விட, அப்போதைய சூழலுக்கு ஏற்றவாறு விளையாடுவதுதான் முக்கியம் என்று நான் நினைக்கிறேன்." என்றார்.

சிஎஸ்கே கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட், "ஆடுகளம் சற்று காய்ந்த நிலையில் உள்ளது, பெரும்பாலும் ஆட்டம் முடியும் வரை இது மாற்றமில்லாமல் அப்படியேதான் இருக்கும். எனவே, நாங்கள் முதலில் பேட்டிங் செய்வதை விரும்புகிறோம். ஒரு நல்ல ஸ்கோரை நிர்ணயித்து, அதைத் தற்காத்துக் கொள்ள முயற்சிப்போம். கடந்த போட்டியில் நாங்கள் வெற்றி பெற்ற ரன் வித்தியாசம் எங்கள் நம்பிக்கையை அதிகரித்துள்ளது." என்று கூறினார்.

தன்னுடைய ஃபார்ம் குறித்துப் பேசிய அவர், "நான் பேட்டிங்கை நன்றாகத் தொடங்கினாலும், அதை பெரிய ஸ்கோராக மாற்ற முடியாமல் போகிறது. உண்மையைச் சொன்னால், இது எனக்கு அபூர்வமாக நடக்கும் ஒன்றுதான், அடிக்கடி இப்படி நடப்பதில்லை. நான் சொன்னது போல, எனக்கு ஒரு நல்ல தொடக்கம் கிடைக்கும் வரை அல்லது மற்ற வீரர்கள் சிறப்பாகச் செயல்பட்டு அணி வெற்றி பெறும் வரை எனக்குக் கவலையில்லை. ஆனால் எப்போது நான் களத்தில் நிலைத்து நின்று விளையாடுகிறேனோ, அன்று என்னுடைய நாள் என்று உணர்ந்தால், அந்த வாய்ப்பைச் சரியாகப் பயன்படுத்திக் கொள்வேன் என்பதில் எனக்கு உறுதியான நம்பிக்கை உள்ளது." என்றார்.

பிளேயிங் லெவனில் யார்?

சென்னை சூப்பர் கிங்ஸ்

இந்தப் போட்டிக்கான சிஎஸ்கே பிளேயிங் லெவனில் உர்வில் பட்டேல் சேர்க்கப்பட்டிருக்கிறார்.

பிளேயிங் லெவன்: சஞ்சு சாம்சன் (விக்கெட் கீப்பர்), ருதுராஜ் கெய்க்வாட் (கேப்டன்), உர்வில் பட்டேல், டெவால் பிரெவிஸ், ஷிவம் துபே, கார்த்திக் ஷர்மா, ஜேமி ஓவர்டன், அகீல் ஹொசைன், நூர் அஹமது, அன்ஷுல் கம்போஜ், குர்ஜப்னீத் சிங்.

சப்ஸ்டிட்யூட் வீரர்கள்: சர்ஃபராஸ் கான், முகேஷ் சவுத்ரி, பிரஷாந்த் வீர், ராமகிருஷ்ணா கோஷ், மேத்யூ ஷார்ட்.

குஜராத் டைட்டன்ஸ்

இந்தப் போட்டிக்கான டைட்டன்ஸ் பிளேயிங் லெவனில் பிரசித் கிருஷ்ணாவுக்குப் பதிலாக அர்ஷத் கான் இடம்பெற்றிருக்கிறார்.

பிளேயிங் லெவன்: சாய் சுதர்ஷன், ஷுப்மன் கில் (கேப்டன்), ஜாஸ் பட்லர் (விக்கெட் கீப்பர்), வாஷிங்டன் சுந்தர், ஷாரூக் கான், ஜேசன் ஹோல்டர், ரஷித் கான், அர்ஷத் கான், மானவ் சூதர், ககிஸோ ரபாடா, மொஹம்மது சிராஜ்.

சப்ஸ்டிட்யூட் வீரர்கள்: குல்வந்த் கெஜ்ரொலியா, ராகுல் திவேதியா, கிளென் ஃபிலிப்ஸ், நிஷாந்த் சிந்து, அனுஜ் ராவத்.

இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு