வாக்குச்சீட்டு தேர்தலில் காங்கிரஸை கிண்டல் செய்த பிரதமர் மோதி - நாக்பூர், வாரணாசியில் பாஜகவுக்கு என்ன நடந்தது?

பட மூலாதாரம், ANI
- எழுதியவர், தில்நவாஸ் பாஷா
- பதவி, பிபிசி ஹிந்தி
- பிரசுரிக்கப்பட்டது
- வாசிக்கும் நேரம்: 6 நிமிடங்கள்
நான்கு மாநிலங்களில் நடந்த 28 சட்ட மேலவை தொகுதிகளுக்கான தேர்தலில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி பெரும்பாலான இடங்களைக் கைப்பற்றியதைத் தொடர்ந்து, பிரதமர் நரேந்திர மோதி புதன்கிழமை சமூக ஊடகமான எக்ஸ் பக்கத்தில் காங்கிரஸ் கட்சியை கிண்டல் செய்து பதிவிட்டுள்ளார்.
நரேந்திர மோதி தனது பதிவில், "தேர்தல் வாக்குச்சீட்டு முறையில் நடைபெற்றது. காங்கிரஸ் எத்தனை இடங்களில் வெற்றி பெற்றிருக்கும் என்று நீங்களே கணித்துக்கொள்ளுங்கள்" என்று குறிப்பிட்டிருந்தார்.
புதன்கிழமை மாலை பிரதமர் நரேந்திர மோதி இந்தப் பதிவை வெளியிட்டபோது, சட்ட மேலவைத் தேர்தலில் காங்கிரஸ் ஓர் இடத்தில்கூட வெற்றி பெற்றிருக்கவில்லை. ஆனால், பின்னர் மகாராஷ்டிராவின் நாக்பூர் தொகுதியில் காங்கிரஸ் வெற்றி பெற்றது.
உத்தர பிரதேசம், கர்நாடகா, மகாராஷ்டிரா, பிகார் ஆகிய மாநிலங்களில் நடைபெற்ற சட்ட மேலவைத் தேர்தல்களில், பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி 28 இடங்களில் 16 இடங்களைக் கைப்பற்றியுள்ளது. உத்தர பிரதேசத்தில் சமாஜ்வாதி கட்சி ஐந்து இடங்களில் வெற்றி பெற்றுள்ளது. அவற்றில் வாரணாசியும் அடங்கும். மகாராஷ்டிராவில் மொத்தமுள்ள ஐந்து இடங்களில் பாஜக தலைமையிலான கூட்டணி இரண்டு இடங்களையும், இந்தியா கூட்டணி மூன்று இடங்களையும் கைப்பற்றியுள்ளன. இந்த முறை நாக்பூர் தொகுதியை பாஜகவிடம் இருந்து காங்கிரஸ் கைப்பற்றியுள்ளது. நாக்பூரில்தான் ஆர்எஸ்எஸ் தலைமையகம் அமைந்துள்ளது.
இருப்பினும், கர்நாடகாவில் காங்கிரஸுக்கு பின்னடைவு ஏற்பட்டுள்ளது. அங்கு நான்கு தொகுதிகளிலும் பாஜக தலைமையிலான கூட்டணி வெற்றி பெற்றுள்ளது. சட்ட மேலவை தேர்தல்கள் வாக்குச் சீட்டுகள் மூலமாக நடத்தப்பட்டன. வாக்குச் சீட்டு முறையில் பொதுத் தேர்தல்களை நடத்த வேண்டுமென காங்கிரஸும் அதன் தலைமையிலான இந்தியா கூட்டணியும் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றன.

பட மூலாதாரம், AFP via Getty Images
அரசியல் கட்சிகளின் வார்த்தைப் போர்
தேர்தல் நடைமுறையின் வெளிப்படைத்தன்மை குறித்து விவாதங்கள் எழுந்துள்ளதுடன், தேர்தல் ஆணையத்தின் செயல்பாடுகள் குறித்தும் கேள்விகள் எழுப்பப்பட்டு வருகின்றன. இந்தச் சூழலில் பிரதமர் மோதியின் எக்ஸ் தளப் பதிவு காங்கிரஸுக்கு எதிரான நேரடித் தாக்குதலாகப் பார்க்கப்படுகிறது.
மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, புதன்கிழமை இரவு சுமார் ஒன்பது மணிக்கு வெளியிட்ட பதிவில், "28 இடங்களில் காங்கிரஸ் எத்தனை இடங்களில் வெற்றி பெற்றது? பூஜ்ஜியம் (0)" என்று குறிப்பிட்டிருந்தார். அத்துடன், ஒருவர் கையில் பதாகை வைத்திருப்பது போன்ற படத்தையும் அவர் பகிர்ந்திருந்தார். அந்தப் பதாகையில், "வாக்குப்பெட்டியே பதவி விலகு" என்று எழுதப்பட்டிருந்தது.
பாஜகவின் முன்னாள் தலைவரான ஜே.பி. நட்டா, "வாக்குச்சீட்டு முறையில் தேர்தல் நடத்த வேண்டுமெனக் கேட்டவர்களுக்கு, வாக்குச்சீட்டே பதில் அளித்துவிட்டது" என்று பதிவிட்டார்.
தற்போதைய பாஜக தலைவர் நிதின் நபீன், "பிரச்னை ஒருபோதும் மின்னணு வாக்குப் பதிவு இயந்திரத்தில் இருந்ததில்லை. மக்கள் காங்கிரஸை நிராகரிப்பதில்தான் பிரச்னை இருக்கிறது. ஒவ்வொரு தோல்விக்குப் பிறகும் ஒரு புதிய காரணத்தை அவர்கள் கூறுகிறார்கள். ஆனால், எந்தப் பிரசாரத்தாலும் மக்களின் தீர்ப்பை மாற்ற முடியாது." என்று குறிப்பிட்டார்.
பிரதமரின் பதிவைத் தொடர்ந்து, சமூக ஊடகங்களில் 'பூஜ்ஜியத்தை சரிபார்த்துக் கொள்ளுங்கள்' என்று கிண்டலாக பதிவுகள் வெளியிடப்பட்டன. எனினும், பாஜகவின் கேலிக்கும் விமர்சனங்களுக்கும் காங்கிரஸ் பதிலளித்துள்ளது.
காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் பவன் கேரா, "தேர்தல் முடிவுகளில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களுக்கு எந்தப் பங்கும் இல்லை என்று நரேந்திர மோதி நம்பினால், வெறும் வார்த்தைகளால் அல்லாமல் செயல்பாட்டின் மூலம் பாஜகவின் தேர்தல் பலத்தை அவர் நிரூபிக்க வேண்டும். இனி நடைபெறவுள்ள அனைத்து மக்களவை மற்றும் சட்டப்பேரவைத் தேர்தல்களும் வாக்குச்சீட்டு முறையிலேயே நடத்தப்படும் என்று அவர் உறுதியளிக்க வேண்டும். மேலும், வாக்காளர் பட்டியலின் சிறப்புத் தீவிரத் திருத்தப் பணியை ரத்து செய்து, அதில் நீக்கப்பட்ட 13.3 கோடி வாக்காளர்களின் பெயர்களை மீண்டும் சேர்க்க வேண்டும்." எனக் கூறினார்.
"ஞானேஷ் குமாரை பதவி விலகச் செய்ய வேண்டும். அவருக்கு வாழ்நாள் பாதுகாப்பு வழங்கும் சட்டத்தையும் திரும்பப் பெற வேண்டும். இதைச் செய்யாதவரை, மோதியின் வார்த்தைகளை யாரும் ஒரு பொருட்டாக எடுத்துக் கொள்ள மாட்டார்கள்," என்றார்.

பட மூலாதாரம், Getty Images
காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் சுப்ரியா ஸ்ரீநடே வெளியிட்ட அறிக்கையில், "வாரணாசி பிரதமர் நரேந்திர மோதியின் மக்களவைத் தொகுதி. பாட்னா பாஜக தலைவர் நிதின் நபீனின் சொந்தத் தொகுதி. நாக்பூர் ஆர்எஸ்எஸ் தலைமையகம் அமைந்துள்ள இடம். அதேபோல, மகாராஷ்டிரா முதலமைச்சர் தேவேந்திர ஃபட்னாவிஸின் கோட்டையாகவும் நாக்பூர் உள்ளது.
"வாக்குச் சீட்டு முறையில் தேர்தல் நடைபெற்றபோது, பாஜகவின் கோட்டைகள் அனைத்தும் தகர்ந்துவிட்டன. அவர்களின் ஆணவப் பேச்சுகள் அனைத்தும் அடங்கிவிட்டன" என்று குறிப்பிட்டிருந்தார்.
மேலும், "தொடர்ந்து பதிவுகளை வெளியிட்டு விளையாடிக் கொண்டிருக்கிறீர்கள். உங்களுக்கு ஒரு சவால் விடுக்கிறோம். வாக்குச் சீட்டு முறையில் தேர்தல் நடத்திப் பாருங்கள். இப்போது சில கோட்டைகளில் தோல்வியடைந்துள்ளீர்கள். நாட்டில் உங்களுக்கான அரசியல் முடிவு இன்னும் காத்திருக்கிறது" என்றும் அவர் கூறினார்.
சமூக ஊடகங்களில் எழுந்த விவாதம்
பிரதமரின் பதிவைத் தொடர்ந்து சமூக ஊடகங்களிலும் விவாதம் எழுந்தது.
பிரதமரின் பதிவுக்குப் பதிலளித்த கன்டென்ட் கிரியேட்டரான துருவ் ரத்தி, "போலி வாக்காளர் பட்டியலில்தான் முறைகேடு நடைபெறுகிறது. அந்த முறைகேடுகள் நடந்தபோதிலும், உங்கள் சொந்தத் தொகுதியான வாரணாசியில்கூட நீங்கள் தோல்வியடைந்துள்ளீர்கள்" என்று பதிவிட்டார்.
மேலும், "இதை வாக்குச்சீட்டு முறைக்கும் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்துக்கும் இடையிலான பிரச்னையாக மாற்றி, மக்களை முட்டாளாக்க முயல்கிறீர்கள். இது ஒரு நல்ல அரசியல் முழக்கம்," என்றும் அவர் குறிப்பிட்டார்.
பிரதமர் நரேந்திர மோதி வாரணாசி மக்களவைத் தொகுதியின் நாடாளுமன்ற உறுப்பினராக உள்ளார். அந்தத் தொகுதியை உள்ளடக்கிய பகுதியில் நடைபெற்ற சட்ட மேலவைத் தேர்தலில் பாஜக தோல்வியடைந்துள்ளது.
மூத்த பத்திரிகையாளர் ராஜ்தீப் சர்தேசாய், "காங்கிரஸ் நாக்பூர் பட்டதாரி சட்ட மேலவைத் தொகுதியைக் கைப்பற்றியுள்ளது. மகாராஷ்டிராவில் மகா விகாஸ் அகாடி கூட்டணி ஐந்து இடங்களில் மூன்று இடங்களைக் கைப்பற்றியுள்ளது. இது ஒரு முக்கியமான வெற்றி. ஏனெனில், நாக்பூர் முதலமைச்சர் தேவேந்திர ஃபட்னவிஸின் கோட்டையாகும். மத்திய அமைச்சர் நிதின் கட்கரி இதே தொகுதியிலிருந்து 24 ஆண்டுகள் சட்ட மேலவை உறுப்பினராக இருந்துள்ளார்," என்று பதிவிட்டார்.

பட மூலாதாரம், Getty Images
மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் மீது பாஜகவும் கேள்விகளை எழுப்பியுள்ளது
இந்தியாவில் 2004-ஆம் ஆண்டுக்குப் பிறகு நடைபெற்ற பொதுத் தேர்தல்கள் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் மூலமாகவே நடத்தப்பட்டு வருகின்றன. எனினும், அதற்கு முன்பும் சோதனை அடிப்படையில் இந்த இயந்திரங்கள் பயன்படுத்தப்பட்டுள்ளன.
இந்திய பொதுத் தேர்தல்களில் வாக்குச்சீட்டுகளைப் பயன்படுத்துவதை எந்தச் சட்டமும் தடை செய்யவில்லை. இருப்பினும், மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்களைப் பயன்படுத்துவதற்கு அனுமதி அளிக்கும் வகையில் சட்டத்தில் திருத்தம் செய்யப்பட்டது. 1951-ஆம் ஆண்டு மக்கள் பிரதிநிதித்துவ சட்டத்தின் 61ஏ பிரிவு, குறிப்பிட்ட தேர்தல் தொகுதிகளில் வாக்குப் பதிவுக்காக இயந்திரங்களைப் பயன்படுத்தத் தேர்தல் ஆணையத்துக்கு அனுமதி அளிக்கிறது.
மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களுக்கு எதிர்ப்பு புதிதல்ல. இருப்பினும், 2009-ஆம் ஆண்டுக்கு முன்பு இந்த எதிர்ப்பு குறைவாகவே இருந்தது. மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் சோதனை அடிப்படையில் பயன்படுத்தப்பட்ட காலத்தில், 1989-ஆம் ஆண்டு முன்னாள் பிரதமர் வி.பி. சிங் உள்ளிட்ட தலைவர்கள் அவற்றின் பயன்பாட்டை வெளிப்படையாக எதிர்த்தனர்.
கடந்த 1980களிலேயே மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்கள் தொடர்பான விவகாரம் நீதிமன்றங்களிலும் எழுப்பப்பட்டது. எனினும், அவற்றுக்கு எதிராகத் தொடர்ச்சியான அரசியல் இயக்கம் எதுவும் அப்போது முன்னெடுக்கப்படவில்லை. 2009-ஆம் ஆண்டு மக்களவைத் தேர்தலில் காங்கிரஸ் வெற்றி பெற்ற பிறகு, பாஜக தலைவர் எல்.கே. அத்வானி மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் குறித்துக் கேள்வி எழுப்பினார். அவை 'முழுமையாகப் பாதுகாப்பானவையா?' என்று அவர் கேள்வி எழுப்பினார்.
மீண்டும் வாக்குச்சீட்டு முறைக்குத் திரும்ப வேண்டும் என்றும் அவர் கோரிக்கை விடுத்தார். அப்போது பல்வேறு அரசியல் கட்சிகளும் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் குறித்த சந்தேகங்களுக்கு ஆதரவு தெரிவித்தன. இந்த விவகாரம் குறித்து விவாதிக்க அனைத்துக் கட்சிக் கூட்டத்தைக் கூட்ட வேண்டும் என்றும் பாஜக கோரிக்கை விடுத்தது.
கடந்த 2010ஆம் ஆண்டு பாஜக தலைவர் ஜி.வி.எல். நரசிம்ம ராவ், 'ஜனநாயகம் ஆபத்தில்! மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களை நாம் நம்பலாமா?' (Democracy at Risk! Can We Trust EVM) என்ற தலைப்பில் ஒரு புத்தகத்தை எழுதினார். 2013-ஆம் ஆண்டு பாஜக தலைவர் சுப்பிரமணியன் சுவாமி தாக்கல் செய்த மனுவைத் தொடர்ந்து, விவிபேட் எனப்படும் வாக்காளர் தாம் அளித்த வாக்கினை உறுதி செய்யும் கருவியைப் பயன்படுத்தும் முறையை அறிமுகப்படுத்த உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது.
மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்களுக்கு எதிரான ஆரம்பக்கால எதிர்ப்பு பாஜகவிடம் இருந்தே வந்தது. ஆனால், 2014-ஆம் ஆண்டு பாஜக ஆட்சிக்கு வந்த பிறகு, காங்கிரஸும் அதன் தலைமையிலான கூட்டணியும் மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்களின் செயல்பாடு மற்றும் வெளிப்படைத்தன்மை குறித்து கேள்விகளை எழுப்பி வருகின்றன.
கடந்த ஆண்டு தேர்தல் ஆணையம் வாக்காளர் பட்டியல்களின் சிறப்புத் தீவிரத் திருத்தப் பணியைத் தொடங்கிய பிறகு, தேர்தல்களின் நம்பகத்தன்மை குறித்து எதிர்க்கட்சிகள் எழுப்பும் கேள்விகள் மேலும் தீவிரமடைந்துள்ளன. காங்கிரஸ் தலைமையிலான எதிர்க்கட்சிகள் தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் பதவி விலக வேண்டுமெனக் கோரி வருகின்றன. மேலும், தேர்தல்களை மீண்டும் வாக்குச்சீட்டு முறையில் நடத்த வேண்டும் என்றும் வலியுறுத்தி வருகின்றன.

பட மூலாதாரம், Getty Images
ஆய்வாளர்கள் கூறுவது என்ன?
இருப்பினும், வாக்குச்சீட்டு முறைக்கு மீண்டும் மாற வேண்டுமென்ற கோரிக்கையை நடைமுறைப்படுத்துவதில் உள்ள சாத்தியக்கூறுகள் குறித்தும் ஆய்வாளர்கள் கேள்வி எழுப்புகின்றனர்.
மூத்த பத்திரிகையாளர் ஷரத் குப்தா கூறுகையில், "மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் குறித்து கேள்விகள் எழுப்பப்படலாம். ஆனால், சட்ட மேலவைத் தேர்தல்களையும் பொதுத் தேர்தல்களையும் ஒப்பிடுவது நடைமுறைக்கு உகந்ததல்ல. பட்டதாரிகளுக்கான தேர்தல் அல்லது ஆசிரியர் தொகுதிகளுக்கான தேர்தலை நாடாளுமன்றத் தொகுதிக்கான தேர்தலுடன் ஒப்பிட முடியாது. இவ்விரண்டுக்கும் இடையிலான அளவில் மிகப்பெரிய வேறுபாடு உள்ளது" என்றார்.
"ஆசிரியர் அல்லது பட்டதாரி தொகுதிகளில் வாக்காளர்களின் எண்ணிக்கை மிகவும் குறைவாக இருக்கும். சில தொகுதிகளில் அது ஆயிரக்கணக்கிலும், சில தொகுதிகளில் சில லட்சங்களாகவும் இருக்கலாம். ஆனால், ஒரு நாடாளுமன்றத் தொகுதியில் 15 லட்சம் முதல் 18 லட்சம் வரை வாக்காளர்கள் இருப்பார்கள். 18 லட்சம் வாக்காளர்களின் வாக்குகளையும் வாக்குச்சீட்டு முறையில் எண்ண வேண்டியிருந்தால், அதற்கு எவ்வளவு நேரம் தேவைப்படும் என்பதை நாம் கணித்துக்கொள்ளலாம். வாக்குச்சீட்டு முறையில் தேர்தல் நடத்த அதிக நேரம் ஆகும்," என்று ஷரத் குப்தா கூறுகிறார்.
வாக்குச்சீட்டு முறையில் தேர்தல் நடத்துவதில் உள்ள சவால்களை வலியுறுத்திய ஷரத் குப்தா, "முன்பு வாக்குச்சீட்டு முறையில் தேர்தல் நடைபெற்றபோது, வாக்கு எண்ணிக்கை முடிவதற்கு இரண்டு முதல் மூன்று நாள்கள் ஆகும்.
"வாக்குச்சீட்டுகளைப் பறித்துச் செல்வது, அவற்றைக் கிழிப்பது, வாக்குப்பெட்டிகளில் தண்ணீரை ஊற்றுவது, வாக்குப்பெட்டிகளையே தூக்கிக்கொண்டு ஓடுவது போன்ற சம்பவங்களும் நடந்துள்ளன. வன்முறைச் சம்பவங்களும் நிகழ்ந்துள்ளன" என்று தெரிவித்தார்.
இருப்பினும், தேர்தல் நடைமுறை மீதான மக்களின் நம்பிக்கையை மீட்டெடுப்பது இந்தச் சவால்களைவிட முக்கியமானது என்றும் அவர் கருதுகிறார். "மக்கள் கோரிக்கை விடுக்கிறார்கள் என்றால், ஒருமுறை வாக்குச்சீட்டு முறையில் தேர்தல் நடத்திப் பார்ப்பதில் தவறில்லை. இந்த விவகாரத்தில் மீண்டும் மீண்டும் விவாதம் எழாமல் இருப்பதற்காக இதையும் செய்து பார்க்கலாம்." என்றார்.
மூத்த பத்திரிகையாளர் ஹேமந்த் அத்ரி கூறுகையில், மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்களின் நம்பகத்தன்மை குறித்து இப்போது மட்டுமல்ல, ஏற்கெனவே பலமுறை கேள்விகள் எழுப்பப்பட்டுள்ளன என்றார்.
அவர் கூறுகையில், "உலக நாடுகளின் அனுபவங்களைக் கருத்தில் கொண்டால், வாக்குச்சீட்டு முறையில் தேர்தல் நடத்த வேண்டும் என்ற கோரிக்கையை முற்றிலும் நடைமுறைக்கு ஒவ்வாதது என்று கூறிவிட முடியாது. மனிதர்களால் உருவாக்கப்பட்ட ஒரு இயந்திரத்தில் கோளாறு ஏற்படவோ, அதில் முறைகேடு செய்யப்படவோ வாய்ப்பில்லை என்று எப்படிக் கூற முடியும்? அந்த இயந்திரத்தை உருவாக்கிய மனிதரால் அதில் மாற்றங்களைச் செய்ய முடியாதா என்பதுதான் கேள்வி." என்றார்.
தற்போதைய சூழலில், தேர்தல் நடைமுறை மீதும் தேர்தல் ஆணையத்தின் மீதும் மக்களின் நம்பிக்கையை மீட்டெடுப்பதே மிக முக்கியமான பிரச்னை என்றும் ஹேமந்த் அத்ரி கூறுகிறார்.
அவர் மேலும் கூறுகையில், "நாட்டின் தேர்தல் ஜனநாயக அமைப்பின் நம்பகத்தன்மை குறித்து கேள்விகள் எழும்போது, அவை மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் தொடர்பானதாக இருந்தாலும் சரி, வாக்காளர் பட்டியல் தொடர்பானதாக இருந்தாலும் சரி, இந்தக் கவலைகள் அனைத்துக்கும் ஒரே நேரத்தில் தீர்வு காணப்பட வேண்டாமா?" என்றார்.
தற்போது உலகம் முழுவதும் 30க்கும் மேற்பட்ட நாடுகள் வாக்குப்பதிவுக்கு இயந்திரங்களைப் பயன்படுத்துகின்றன. இந்தியாவும் பிரேசிலும் இந்த நடைமுறையைப் பயன்படுத்தும் மிகப்பெரிய ஜனநாயக நாடுகளாக உள்ளன. இருப்பினும், ஜெர்மனி, நெதர்லாந்து, அயர்லாந்து போன்ற நாடுகள் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களின் பயன்பாட்டைக் கைவிட்டு மீண்டும் வாக்குச்சீட்டு முறைக்குத் திரும்பியுள்ளன. ஆனால், இந்தியாவில் பயன்படுத்தப்படும் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களின் தொழில்நுட்பமும், அந்த நாடுகளில் பயன்படுத்தப்பட்ட இயந்திரங்களின் தொழில்நுட்பமும் ஒன்றல்ல.
இந்திய தேர்தல் ஆணையம், மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களில் முறைகேடு நடைபெறுவதாக முன்வைக்கப்படும் குற்றச்சாட்டுகளைத் தொடர்ந்து மறுத்து வருகிறது. இந்த இயந்திரங்கள் பாதுகாப்பானவை என்றும், அவற்றில் முறைகேடு செய்ய முடியாது என்றும் தேர்தல் ஆணையம் வலியுறுத்தி வருகிறது.
இந்த இயந்திரங்கள் இணையத்துடனோ அல்லது வேறு எந்தத் தகவல் தொடர்பு வலையமைப்புடனோ இணைக்கப்படுவதில்லை என்பதால் அவற்றை ஊடுருவி மாற்ற முடியாது என்றும் தேர்தல் ஆணையம் கூறுகிறது.
சட்ட மேலவைத் தேர்தல்களுக்குப் பிறகு பிரதமர் நரேந்திர மோதி சமூக ஊடகத்தில் வெளியிட்ட பதிவு, இந்தியாவில் மீண்டும் வாக்குச்சீட்டு முறைக்குத் திரும்ப வேண்டுமா என்ற விவாதத்தைத் தீவிரப்படுத்தியுள்ளது.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு
































