ஹோர்மூஸ் நீரிணைக்கு மாற்றாக சிரியா முன் வைக்கும் திட்டம் - இந்தியாவுக்கு போட்டியா?

ஹோர்மூஸ், இந்தியா, சிரியா, சிரியா அதிபர் அஹமது அல்-ஷாரா, எரிசக்தி, போக்குவரத்து, இரான்

பட மூலாதாரம், Byron Smith/Getty Images

படக்குறிப்பு, எரிசக்தி மற்றும் பொருட்களின் போக்குவரத்திற்கான ஒரு மாற்றுப் பாதையாக சிரியாவை மாற்றுவதே தற்போது தனது குறிக்கோள் என்று சிரியா அதிபர் தெரிவித்துள்ளார்
வாசிக்கும் நேரம்: 5 நிமிடங்கள்

மத்திய கிழக்கில், போரின் பின்விளைவுகளையும் ஹோர்மூஸ் நீரிணை மூடப்படும் அபாயத்தையும் இரான் எதிர்கொண்டுள்ள நிலையில், சிரியா மாற்றுத் திட்டம் ஒன்றை முன்வைத்துள்ளது.

உலகளாவிய எரிசக்தி மற்றும் வர்த்தகப் போக்குவரத்திற்கான மைய வழித்தடமாகத் சிரியா செயல்பட முடியும் என்று அந்நாட்டு அதிபர் அகமது அல்-ஷாரா கூறுகிறார். ஏப்ரல் 17 அன்று துருக்கியில் நடைபெற்ற அன்டால்யா தூதரக மன்றத்திலும், அதைத் தொடர்ந்து சில நாட்களுக்குப் பிறகு சைப்ரஸில் நடைபெற்ற ஐரோப்பிய ஒன்றியத் தலைவர்களின் கூட்டத்திலும் அவர் தனது இந்தத் திட்டத்தை முன்வைத்தார்.

சிரியாவின் இந்தத் திட்டமானது, இந்தியாவின் முன்னோடித் திட்டமான இந்தியா-மத்திய கிழக்கு-ஐரோப்பா பொருளாதார வழித்தட (IMEC) திட்டம் உட்பட பல பிற திட்டங்களிடம் இருந்து போட்டியை எதிர்கொள்ளக்கூடும்.

இந்த திட்டத்தை முன்னோக்கி எடுத்துச் செல்ல, சிரியா அரசாங்கம் இரு பெரிய முன்முயற்சிகளை ஊக்குவித்து வருகிறது: 'நான்கு கடல்கள்' திட்டம் மற்றும் '4+1' திட்டம்.

இந்த இரண்டு முன்னெடுப்புகள் குறித்த நம்பிக்கை பரவலாக காணப்பட்டாலும், அவை பல பெரிய சவால்களையும் எதிர்கொள்கின்றன.

'ஃபோர் சீஸ்' (நான்கு கடல்கள்) முன்முயற்சி என்றால் என்ன?

ஹோர்மூஸ், இந்தியா, சிரியா, சிரியா அதிபர் அஹமது அல்-ஷாரா, எரிசக்தி, போக்குவரத்து, இரான்

பட மூலாதாரம், Bakr Al Kasem/Anadolu via Getty Images

படக்குறிப்பு, துருக்கியிலிருந்து சிரியாவிற்கான எரிவாயு விநியோகம் 2025 ஆகஸ்ட் 2 அன்று தொடங்கியது

'ஃபோர் சீஸ்' திட்டம் என்பது 'நைன் காரிடார் இனிஷியேட்டிவ்' அதாவது ஒன்பது வழித்தட முன்முயற்சி என்றும் அழைக்கப்படுகிறது. இது வளைகுடா, மத்திய தரைக்கடல், காஸ்பியன் கடல் மற்றும் கருங்கடல் என நான்கு கடல்களை இணைக்கும் ஒரு ஒருங்கிணைந்த போக்குவரத்து மற்றும் எரிசக்தி வலையமைப்பாகும்.

இந்தத் திட்டத்தின் முக்கிய நோக்கம், பிராந்திய வர்த்தகம் மற்றும் எரிசக்தி போக்குவரத்திற்கான முதன்மை மையங்களாக சிரியாவையும் துருக்கியையும் நிலைநிறுத்துவதாகும்.

ஏப்ரல் 24 அன்று சைப்ரஸில் நடைபெற்ற கூட்டத்தில் அதிபர் ஷரா இந்தத் திட்டத்தை ஆதரித்துப் பேசினார். அதே நேரத்தில், சிரியாவின் வெளியுறவு அமைச்சர் ஆசாத் அல்-ஷிபானி தனது துருக்கி பயணத்தின் போது, இது இருதரப்பு மூலோபாய ஒத்துழைப்பின் புதிய கட்டத்தின் ஆரம்பம் என குறிப்பிட்டார்.

வாட்ஸ்அப் விளம்பரம் - ஐ புறக்கணித்துவிட்டு தொடர்ந்து படிக்கவும்
வாட்ஸ்ஆப்பில்

பிபிசி தமிழ் செய்திகளை செல்போனிலேயே படிக்கலாம்

பின்தொடர கிளிக் செய்யவும்

வாட்ஸ்அப் விளம்பரம் - முடிவு

அரபு நாடுகளில் புகழ்பெற்ற 'அல்-மஜல்லா' ஊடகம் வெளியிட்டுள்ள ஓர் ஆவணத்தில், சிரியாவை உலகளாவிய எரிசக்தி போக்குவரத்தின் முக்கிய மையமாக மாற்றுவதற்கான அமெரிக்க முன்மொழிவின் வரைபடம் உள்ளது. இந்த வரைபடம் சிரியாவிற்கான அமெரிக்க தூதர் டாம் பராக்-ஆல் வழங்கப்பட்டதாகக் கூறப்படுகிறது.

வளைகுடா மற்றும் இராக்கின் எண்ணெய் வயல்களை மத்திய தரைக்கடல் துறைமுகங்களுடனும், அதைத் தொடர்ந்து ஐரோப்பாவுடனும் இணைப்பதற்காக, தற்போதுள்ள மற்றும் முன்மொழியப்பட்ட குழாய்களின் பரந்த வலையமைப்பிற்குப் புத்துயிர் அளித்து விரிவுபடுத்துவதை இந்தத் திட்டம் மையமாகக் கொண்டுள்ளது.

கிர்குக் - பனியாஸ் எண்ணெய் குழாய் இணைப்பை மீண்டும் செயல்பாட்டிற்குக் கொண்டுவர சுமார் 36 மாதங்கள் ஆகும் மற்றும் அதற்கு 4.5 பில்லியன் அமெரிக்க டாலர் செலவாகும். இதன் மூலம் சிரியாவிற்கு ஆண்டுதோறும் போக்குவரத்து கட்டணமாக சுமார் 200 மில்லியன் டாலர் வருமானம் கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

எகிப்திலிருந்து சிரியா வழியாக துருக்கி வரை அரபு எரிவாயு குழாய் திட்டத்தை விரிவாக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது.

கூடுதலாக, கத்தார் - துருக்கி எரிவாயு வழித்தடத் திட்டமும் உள்ளது. இதன்படி கத்தாரின் எரிவாயு ஜோர்டான் மற்றும் சிரியா வழியாக துருக்கிக்கும், அங்கிருந்து ஐரோப்பாவிற்கும் அனுப்பப்படும்.

தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தல் 2026, தொடர்பான செய்திகள், காணொளிகள், நேர்காணல்களை படிக்க, பார்க்க... https://www.bbc.com/tamil/topics/cx2r5pqvxy1t
படக்குறிப்பு, தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தல் 2026, தொடர்பான செய்திகள், காணொளிகள், நேர்காணல்களை படிக்க, பார்க்க...

4+1 முன்முயற்சி என்றால் என்ன?

பிராந்திய எரிசக்தி போக்குவரத்து மையமாகத் தன்னை மீண்டும் நிலைநிறுத்திக் கொள்ளும் சிரியாவின் முயற்சியின் ஒரு பகுதியாக, அந்நாட்டு அரசாங்கம் மார்ச் 2026-ல், 4+1 முன்முயற்சி திட்டத்தை முன்மொழிந்தது.

பாரம்பரிய கடல்வழிப் பாதைகளை சார்ந்திருப்பதைக் குறைக்கும் ஒருங்கிணைந்த மற்றும் பாதுகாப்பான தரைவழி எரிசக்தி வழித்தடங்களை உருவாக்குவதே இந்தத் திட்டத்தின் நோக்கமாகும்.

சிரியப் பொருளாதார விவகார அமைச்சகத்தின் ஆலோசகர் ஒசாமா அல் காதி, 'அல் அரபி அல் ஜதீத்' இணையதளத்திடம் பேசுகையில், "'ஃபோர் சீஸ்' திட்டம் பிராந்திய நீர்வழிகளை இணைக்கும் அதே வேளையில், '4+1' முன்முயற்சியானது பிராந்திய பொருளாதாரங்களை ஒன்றோடொன்று இணைக்கும்" என்று தெரிவித்தார்.

இந்தத் திட்டம் கடல்வழி, நிலவழி மற்றும் ரயில் பாதைகளைக் கொண்ட ஒரு பன்முகத் தன்மை கொண்ட வலையமைப்பின் மையப்புள்ளியாக சிரியாவை மாற்றும்.

பிராந்திய நிலைத்தன்மை மற்றும் மேம்பாடு ஆகிய பகிரப்பட்ட இலக்குகளை வலுப்படுத்த உதவும் இந்த இரண்டு திட்டங்களும் ஒன்றுக்கொன்று துணைபுரியும் என்று அவர் விவரித்தார்.

இந்த முன்முயற்சியானது, பல்வேறு போக்குவரத்து முறைகளைப் பயன்படுத்தும் ஒரு ஒருங்கிணைந்த அமைப்பை அறிமுகப்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.

அல் காதி உள்ளிட்ட பலரது மதிப்பீடுகளின்படி, '4+1' திட்டங்களின் மொத்தக் கூட்டுச் செலவு சுமார் 50 பில்லியன் டாலர் வரை இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

முக்கிய சவால்கள் என்ன?

ஹோர்மூஸ், இந்தியா, சிரியா, சிரியா அதிபர் அஹமது அல்-ஷாரா, எரிசக்தி, போக்குவரத்து, இரான்

பட மூலாதாரம், Izettin Kasim/Anadolu via Getty Images

படக்குறிப்பு, சிரிய தலைநகர் டமாஸ்கஸில் உள்ள கதேம் நிலையத்தின் இந்தப் புகைப்படம் 2025 பிப்ரவரி 8 அன்று எடுக்கப்பட்டது

இந்தத் திட்டங்கள் கவர்ச்சிகரமானதாகவும், நம்பிக்கையூட்டுவதாகவும் இருந்தாலும், இவற்றின் முன்னால் சில சிக்கலான சவால்கள் உள்ளன.

இத்திட்டங்களின் நடைமுறைச் சாத்தியம் என்பது சிரியா தனது அரசியல் மற்றும் நிறுவன ரீதியான பலவீனங்களை எவ்வாறு கையாளப்போகிறது என்பதையும், பல ஆண்டுகாலப் போரினால் சிதைந்துபோன உள்கட்டமைப்புகளை எவ்வாறு சீரமைக்கப்போகிறது என்பதையும் பொறுத்தே அமையும்.

மேலும், பெரும் நிதி நெருக்கடி, பாதுகாப்பு அச்சுறுத்தல்கள் மற்றும் புவிசார் அரசியல் தடைகளுக்கு மத்தியில் சிரியா எவ்வாறு வழிநடத்தப்போகிறது என்பதும் முக்கியமானது.

துருக்கி மற்றும் மத்திய கிழக்கு விவகாரங்களுக்கான மூத்த பத்திரிகையாளர் சார்க்கிஸ் காஸர்ஜியான் 'யூரோநியூஸ்' ஊடகத்திடம் கூறுகையில், "இத்தகைய திட்டங்கள் ஒன்றும் புதியவை அல்ல. செளதி அரேபியா, இஸ்ரேல், துருக்கி போன்ற நாடுகளிடம் உள்ள உள்கட்டமைப்பு, அரசியல் நிலைத்தன்மை மற்றும் புவியியல் ரீதியான நன்மைகள் சிரியாவிடம் இல்லை" என்று தெரிவித்தார்.

பாதுகாப்பு மற்றும் நிர்வாகக் குறைபாடுகள் இன்னும் பெரிய முட்டுக்கட்டைகளாகவே உள்ளன. சிரியாவின் அரசியல் மற்றும் நிறுவன ரீதியான பலவீனங்கள் அதன் மறுசீரமைப்பு மற்றும் வளர்ச்சிப் பாதையில் மிகப்பெரிய தடைகளாக இருக்கும் என்றும் அவர் குறிப்பிட்டார்.

உங்கள் பகுதியில் போதைப்பொருள் பிரச்னை உள்ளதா? கருத்துகள், அனுபவங்களை பகிர இங்கே கிளிக் செய்யவும்
படக்குறிப்பு, உங்கள் பகுதியில் போதைப்பொருள் பிரச்னை உள்ளதா? கருத்துகள், அனுபவங்களை பகிர இங்கே கிளிக் செய்யவும்

சிரிய பெட்ரோலியப் பொறியாளர் கசான் அல்-ராய் 'யூரோநியூஸ்' ஊடகத்திடம் கூறுகையில், 2011-ல் உள்நாட்டுப் போர் தொடங்குவதற்கு முன்பு பயன்பாட்டில் இருந்த குழாய் வழித்தடத்தின் பகுதிகளைச் சீரமைக்கவோ அல்லது விரிவாக்கம் செய்யவோ முடியும் என்று தெரிவித்தார்.

இருப்பினும், எந்தவொரு மறுசீரமைப்புப் பணியும் நிதி வசதி மற்றும் பாதுகாப்புச் சூழலைப் பொறுத்தே அமையும் என்றும் அவர் குறிப்பிட்டார். பல ஆண்டுகாலப் போர்ச் சூழலால், திறமையான தொழிலாளர்களுக்கு பெரும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதையும் அவர் சுட்டிக்காட்டினார்.

சிரியாவின் உள்நாட்டு எல்லைகளுக்கு அப்பால், பெரிய அளவிலான எல்லை தாண்டிய இரயில், சாலை மற்றும் குழாய் வழித்தடங்களை உருவாக்குவது நிதி மற்றும் அரசியல் ரீதியான சவால்களைச் சந்திக்க நேரிடும். மாறிவரும் பிராந்திய அரசியல் சமன்பாடுகள் இந்தச் சவால்களை மேலும் சிக்கலாக்குகின்றன.

சிரியப் பொருளாதார விவகார நிபுணர் சல்மான் அல் ஹக்கிம் லெபனான் நாட்டுச் செய்தித்தாளான 'அன்னஹர்'-இடம் கூறுகையில், "நிதி திரட்டுவதுதான் மிகப்பெரிய சவால், ஏனெனில் எந்தவொரு தனி நாடும் இந்த முழுச் செலவையும் ஒற்றையாகத் தாங்கிக்கொள்ள முடியாது," என்று தெரிவித்தார்.

ஹோர்மூஸ், இந்தியா, சிரியா, சிரியா அதிபர் அஹமது அல்-ஷாரா, எரிசக்தி, போக்குவரத்து, இரான்

பட மூலாதாரம், Bakr ALKASEM / AFP via Getty Images

படக்குறிப்பு, இந்த வழித்தடங்களை அமைப்பதற்கும் மேம்படுத்துவதற்கும் ஆகும் செலவு 10 முதல் 15 பில்லியன் டாலர்களைத் தாண்டும் என மதிப்பிடப்பட்டுள்ளது

இந்த வழித்தடங்களை அமைப்பதற்கும் மேம்படுத்துவதற்கும் ஆகும் செலவு 10 முதல் 15 பில்லியன் டாலர்களைத் தாண்டும் என்று சிரியப் பொருளாதார நிபுணர் ஜியாத் அர்பாஷ் மதிப்பிட்டுள்ளார்.

இதற்கு உயர்மட்ட பிராந்திய ஒருங்கிணைப்பு மற்றும் வழித்தடம் முழுவதும் பாதுகாப்பு அவசியமாகும், குறிப்பாக சிரியாவின் போர் பாதிப்புக்குள்ளான பகுதிகளில் பாதுகாப்பு உறுதி செய்யப்பட வேண்டும்.

இந்த எரிவாயு குழாய் திட்ட முன்மொழிவு குறித்துப் பேசிய அர்பாஷ், அதன் அதிகப்படியான செலவு, பாதையின் நீளம் மற்றும் அரபு-துருக்கி நாடுகளுக்கு இடையேயான ஒத்துழைப்பின் அவசியம் ஆகியவற்றைக் குறிப்பிட்டார். மேலும், ஏற்கனவே ஐரோப்பாவிற்கு எரிவாயு விநியோகம் செய்து வரும் ரஷ்யா, அஜர்பைஜான் மற்றும் அல்ஜீரியா ஆகிய நாடுகளின் எரிவாயுவுடன் இது கடுமையான போட்டியைச் சந்திக்க நேரிடும் என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.

இந்தியாவின் ஐஎம்இசி திட்டத்துடன் போட்டி

ஹோர்மூஸ், இந்தியா, சிரியா, சிரியா அதிபர் அஹமது அல்-ஷாரா, எரிசக்தி, போக்குவரத்து, இரான்

பட மூலாதாரம், IMEC

படக்குறிப்பு, செப்டம்பர் 2023-ல் இந்தியாவில் நடைபெற்ற ஜி-20 உச்சிமாநாட்டின் போது 'இந்தியா-மத்திய கிழக்கு-ஐரோப்பா பொருளாதார வழித்தடம்' திட்டமிடப்பட்டது

சிரியாவின் இந்தச் சிந்தனைக்கு, மாற்றுப் பொருளாதார வழித்தடங்களை உருவாக்கும் பிற திட்டங்களிடமிருந்து கடும் போட்டி நிலவுகிறது. இந்தத் திட்டங்கள் குறிப்பிடத்தக்க வகையில் சிரியாவைத் தவிர்க்கின்றன.

அவற்றுள் முதன்மையானது, முன்மொழியப்பட்ட இந்தியா–மத்திய கிழக்கு–ஐரோப்பா பொருளாதார வழித்தடம் (IMEC) ஆகும்.

இந்த முயற்சி தொடர்பான விவாதங்கள் செப்டம்பர் 2023-ல் நடைபெற்ற ஜி20 உச்சிமாநாட்டின் போது தொடங்கின. மேம்பட்ட போக்குவரத்து, டிஜிட்டல் மற்றும் எரிசக்தி உள்கட்டமைப்பு மூலம் இந்தியா, மத்திய கிழக்கு மற்றும் ஐரோப்பாவை இணைப்பது இதன் திட்டமாகும்.

இந்தியா, செளதி அரேபியா, ஐக்கிய அரபு அமீரகம், அமெரிக்கா மற்றும் முக்கிய ஐரோப்பிய நாடுகளின் ஆதரவுடன், இது சீனாவின் 'பெல்ட் அண்ட் ரோட்' திட்டத்திற்கு ஒரு மாற்றாக முன்வைக்கப்பட்டது.

முன்மொழியப்பட்ட இந்த வழித்தடம், இந்தியாவிலிருந்து ஐக்கிய அரபு அமீரகம் வரை ஒரு கடல்வழிப் பாதையையும், அங்கிருந்து சவுதி அரேபியா மற்றும் ஜோர்டான் வழியாக இஸ்ரேலின் ஹைஃபா துறைமுகத்தை அடையும் ஒரு இரயில் பாதையையும் இணைக்கிறது. அங்கிருந்து சரக்குகள் ஐரோப்பாவிற்கு அனுப்பப்படும்.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு