கிரிக்கெட் பிட்ச் அளவுக்கு நீளமான புதிய டைனோசர் இனம் தாய்லாந்தில் கண்டுபிடிப்பு

ஓவியம்: பாகோர்ன் சோட்சையாபார்ன்

பட மூலாதாரம், Artwork by Pakorn Chotchaiyaporn

படக்குறிப்பு, ஓவியம்: பாகோர்ன் சோட்சையாபார்ன்
    • எழுதியவர், ஏமி வாக்கர்
    • பதவி, பிபிசி
  • பிரசுரிக்கப்பட்டது
  • வாசிக்கும் நேரம்: 1 நிமிடங்கள்

தாய்லாந்தின் வடகிழக்குப் பகுதியில் உள்ள கலாசின் மாகாணத்தில் கண்டெடுக்கப்பட்ட புதைபடிவங்களின் அடிப்படையில், புதிய வகை டைனோசர் ஒன்றை கண்டுபிடித்துள்ளதாக தாய்லாந்து தொல்லுயிரியலாளர்கள் தெரிவித்துள்ளனர்.

'உராகாசாரஸ் கலாசினென்சிஸ்' என்று பெயரிடப்பட்டுள்ள இந்த தாவர உண்ணி டைனோசர், சுமார் 150 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்ததாகக் கருதப்படுகிறது.

இது வழக்கத்திற்கு மாறாக நீண்ட கழுத்தைக் கொண்டிருந்ததுடன், சுமார் 20 மீட்டர் (66 அடி) நீளம் வரை வளர்ந்திருந்தது. இது ஒரு கிரிக்கெட் பிட்சின் நீளத்திற்கு சமமாகும்.

தாய்லாந்தின் மகாசரகாம் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த ஆய்வின் முதன்மை ஆசிரியர் அபிருத் நில்பனபன் பிபிசி தாய் சேவையிடம், இந்த டைனோசரின் புதைபடிவங்கள் மிகப்பெரிய புதைபடிவத் தொகுப்பின் ஒரு பகுதியாக இருந்ததாக தெரிவித்தார்.

இந்தப் புதைபடிவங்கள் கிடைத்த இடமான பூ நொய் பகுதி, 2008ஆம் ஆண்டு முதலில் கண்டறியப்பட்டது. அப்போது அப்பகுதியைச் சேர்ந்த ஒருவர் பாம்பின் செதில்கள் போன்ற தோற்றம் கொண்ட சில துண்டுகளைக் கண்டுபிடித்தார்.

பூ நொய் பகுதியில் ஜுராசிக் காலத்தின் இறுதிப் பகுதியைச் சேர்ந்த பல்வேறு வகையான புதைபடிவங்கள் கிடைத்துள்ளன. அங்கு அகழாய்வு செய்யப்பட்ட புதைபடிவங்களில் 90 சதவீதத்துக்கும் அதிகமானவை டைனோசர் எச்சங்களாக இருந்தன.

ஆய்வுக் குழுவினர் அப்பகுதியை ஆய்வு செய்தபோது, டைனோசர் பற்கள் மற்றும் எலும்புகள் உள்ளிட்ட பல்வேறு புதைபடிவங்களைக் கண்டுபிடித்தனர்.

புதிய இனத்தை அடையாளம் காண உதவிய முக்கியமான புதைபடிவம், ஒரு முதுகெலும்பு ஆகும். இதில் தனித்துவமான அம்சங்கள் காணப்பட்டன.

வாட்ஸ்அப் விளம்பரம் - ஐ புறக்கணித்துவிட்டு தொடர்ந்து படிக்கவும்
வாட்ஸ்ஆப்பில்

பிபிசி தமிழ் செய்திகளை செல்போனிலேயே படிக்கலாம்

பின்தொடர கிளிக் செய்யவும்

வாட்ஸ்அப் விளம்பரம் - முடிவு

சிடி ஸ்கேன் சோதனையில், இந்த டைனோசர் 'மமென்சிசொரிடே' குடும்பத்தைச் சேர்ந்த சௌரோபாட் வகை டைனோசர் என்பது தெரியவந்தது. இவை மிக நீண்ட கழுத்துகளைக் கொண்டவை, இது பல்வேறு உயரங்களில் உள்ள தாவரங்களை உண்பதற்கு உதவியிருக்கலாம்.

'மமென்சிசொரிடே' குடும்பத்தைச் சேர்ந்த பெரும்பாலான படிமங்கள் சீனாவில் கண்டெடுக்கப்பட்டாலும், தாய்லாந்தில் இத்தகைய கண்டுபிடிப்பு நிகழ்வது இதுவே முதல்முறை.

இந்த ஸ்கேன் சோதனையில், 'லேமினே' எனப்படும் எலும்புகளைத் தாங்கும் 'Y' வடிவ அமைப்பு உள்ளிட்ட பல தனித்துவமான அம்சங்கள் தெரியவந்தன.

இந்த டைனோசரின் சில தனித்துவமான அம்சங்கள், குறிப்பாக அதன் எலும்புகளில் இருந்த வித்தியாசமான காற்று அறை அமைப்பு, உலகில் வேறு எந்த டைனோசரிலும் காணப்படவில்லை என்று நில்பனபன் தெரிவித்தார்.

புதிய டைனோசர் இனத்தை கண்டுபிடித்ததை அறிந்தபோது ஏற்பட்ட உற்சாகத்தில் தனது கணினியை உடைத்ததாகவும், அதே நேரத்தில் மிகுந்த மகிழ்ச்சியும் நிம்மதியும் ஏற்பட்டதாகவும் அவர் கூறினார்.

இந்த ஆய்வு, இந்த வாரம் நேச்சர் அறிவியல் இதழில் வெளியிடப்பட்டது.

இதற்கு முன்பு, கடந்த மே மாதம், தாய்லாந்தில் கண்டுபிடிக்கப்பட்ட புதைபடிவங்களில் இருந்து மற்றொரு நீண்ட கழுத்து கொண்ட தாவர உண்ணி டைனோசரான நாகடைட்டன் அடையாளம் காணப்பட்டதாக விஞ்ஞானிகள் தெரிவித்திருந்தனர்

'நாகடைட்டன்' என்பது தென்கிழக்கு ஆசியாவில் கண்டறியப்பட்ட மிகப்பெரிய டைனோசர் ஆகும். இது 27 டன் எடை கொண்டது - அதாவது ஒன்பது ஆசிய யானைகளின் எடைக்கு சமம். மேலும் இது 27 மீட்டர் (88 அடி) நீளம் கொண்டது.

கூடுதல் தகவல்களை வழங்கியவர் ஜிராபார்ன் ஸ்ரீசாம்.

-இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு