You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
டைனோசர்கள் காலத்தில் வாழ்ந்த 19 மீட்டர் நீள ஆக்டோபஸ் – அறிவியல் நம்பிக்கைக்கு விடுக்கும் சவால் என்ன?
- எழுதியவர், ஹெலன் பிரிக்ஸ்
- பதவி, அறிவியல் செய்தியாளர், பிபிசி நியூஸ்
- வாசிக்கும் நேரம்: 2 நிமிடங்கள்
புதிய ஆராய்ச்சியின்படி, டைனோசர்கள் பூமியில் சுற்றித் திரிந்த 100 மில்லியன் ஆண்டுகளுக்கு முந்தைய காலகட்டத்தில், ராட்சத ஆக்டோபஸ்கள் பண்டைய பெருங்கடல்களில் ஆதிக்கம் செலுத்தியிருக்கலாம்.
ஆரம்பகால ஆக்டோபஸ்களில் சில அநேகமாக வலிமைமிக்க வேட்டையாடிகளாக இருந்திருக்கலாம். அவை இரையைப் பிடிப்பதற்கான வலுவான கரங்களையும், மற்ற விலங்குகளின் ஓடுகள் மற்றும் எலும்புகளை நசுக்குவதற்கான பறவையின் அலகு போன்ற தாடைகளையும் கொண்டிருந்தன.
'சயின்ஸ்' இதழில் வெளியிடப்பட்ட, நன்கு பாதுகாக்கப்பட்ட தாடைகள் குறித்த புதிய ஆய்வு, இந்த விலங்குகள் 19 மீட்டர் நீளம் வரை வளர்ந்திருக்கலாம் என்று தெரிவிக்கிறது. இது அறிவியலாளர்களுக்கு தெரிந்தவரை, இவற்றை இதுவரை இல்லாத மிகப்பெரிய முதுகெலும்பற்ற உயிரினங்களாக மாற்றக்கூடும்.
பல தசாப்தங்களாக, கடல்சார் தொல்லுயிரியலாளர்கள் மீன்கள் மற்றும் ஊர்வன போன்ற முதுகெலும்புள்ள விலங்குகளே கடலின் மிகப்பெரிய வேட்டையாடிகளாக இருந்தன என்றும், ஆக்டோபஸ் மற்றும் ஸ்க்விட் போன்ற முதுகெலும்பற்ற உயிரினங்கள் சிறியதாக இருந்தன என்றும் நம்பி வந்தனர்.
'மேம்பட்ட மூளை செயல்பாடு'
ஜப்பானில் உள்ள ஹொக்கைடோ பல்கலைக்கழக விஞ்ஞானிகளின் புதிய ஆராய்ச்சி, பண்டைய ஆக்டோபஸ்கள் குறித்த விஞ்ஞானிகளின் முந்தைய புரிதலுக்கு சவால் விடுகிறது.
புதைபடிவ தாடைகள் குறித்த அவர்களின் பகுப்பாய்வு, இந்த ராட்சத ஆக்டோபஸ்கள் பெரிய மீன்கள் மற்றும் கடல் ஊர்வனவற்றின் கடினமான ஓடுகள் மற்றும் எலும்புக்கூடுகளை மென்று தின்னும் திறனுடன் கடல்களில் ஊர்ந்து சென்றதாகக் கூறுகிறது.
இந்த ஆய்வு அதன் உடல் நீளம் சுமார் 1.5 முதல் 4.5 மீட்டர் வரை இருக்கும் என்று மதிப்பிடுகிறது. அதன் நீண்ட கரங்களையும் சேர்த்தால், மொத்த நீளம் சுமார் 7 முதல் 19 மீட்டர் வரை இருக்கும்.
அந்த வரம்பின் மிகக் குறைந்த அளவில் இருந்தாலும் கூட, இன்றைய தரநிலைகளுடன் ஒப்பிடும்போது அந்த விலங்கு மிகப்பெரியதாக இருந்திருக்கும்.
மற்றொரு குறிப்பிடத்தக்க அம்சம் என்னவென்றால், புதைபடிவ தாடைகளில் உள்ள தேய்மானம் இடமிருந்து வலமாக சீரற்றதாக உள்ளது. இது அந்த விலங்குகள் உணவருந்தும்போது ஒரு பக்கத்தை அதிகமாகப் பயன்படுத்தியிருக்கலாம் என்று அறிவுறுத்துகிறது.
வாழும் விலங்குகளில், உடலின் ஒரு பக்கத்தை விட மற்றொரு பக்கத்தை விரும்புவது மேம்பட்ட மூளை செயல்பாடுகளுடன் தொடர்புடையது.
நவீன ஆக்டோபஸ்கள் அவற்றின் புத்திசாலித்தனம், சிக்கல்களைத் தீர்க்கும் திறன் மற்றும் சிக்கலான வேட்டை உத்திகளுக்காக அறியப்படுகின்றன.
இன்று வாழும் இனங்களில் மிகப்பெரியதான ராட்சத பசிபிக் ஆக்டோபஸ், 5.5 மீட்டருக்கும் அதிகமான கர விட்டத்தை கொண்டிருக்கக்கூடும்.
இந்த விலங்குகள் ஒரு மீட்டருக்கும் அதிகமான நீளமுள்ள சுறாக்களை எதிர்கொள்வதை வீடியோ காட்சிகள் காட்டுகின்றன.
"அவற்றின் உணர்நீட்சிகள் மற்றும் உறிஞ்சும் உறுப்புகள் மூலம் அத்தகைய விலங்கை அவை கச்சிதமாகப் பிடித்துக்கொள்ள முடியும், அங்கிருந்து தப்பிக்கவே முடியாது," என்று இந்த ஆராய்ச்சியை ஆய்வு செய்த சூரிச் பல்கலைக்கழகத்தின் தொல்லுயிரியலாளர் கிறிஸ்டியன் க்ளக் கூறினார்.
இருப்பினும், பல கேள்விகள் எஞ்சியுள்ளன. இந்த விலங்குகளின் சரியான வடிவம், அவற்றின் துடுப்புகளின் அளவு அல்லது அவை எவ்வளவு வேகமாக நீந்தக்கூடும் என்பது பற்றி விஞ்ஞானிகள் யூகிக்க மட்டுமே முடியும்.
மேலும், அவை எதை உண்டன என்பதற்கான நேரடி ஆதாரங்களை வழங்கும் வயிற்றுப் பகுதிகள் கொண்ட புதைபடிவங்கள் எதுவும் இதுவரை கண்டறியப்படவில்லை.
பிரிட்டனில் உள்ள பாத் பல்கலைக்கழகத்தின் தொல்லுயிரியலாளர் நிக் லாங்ரிச், அவை முக்கியமாக 'அம்மோனைட்டுகளை' உணவாகக் கொண்டிருக்கலாம் என்பது தனது உள்ளுணர்வு என்று கூறினார்.
ஆனால், நவீன ஆக்டோபஸைப் போலவே, அவையும் வாய்ப்பு கிடைக்கும்போது எதையும் வேட்டையாடும் வேட்டையாடிகளாக இருந்திருக்கும். வாய்ப்பு கிடைத்தால் மற்ற இரைகளையும் அவை தப்பிக்க விட்டிருக்காது.
"இதைப் புரிந்துகொள்ள இன்னும் காலம் எடுக்கும்," என்று அவர் கூறினார். "இது ஒரு சிறிய மர்மம்."
தற்போதைக்கு, இந்த புதைபடிவங்கள் பண்டைய கடல்களில் சுற்றித் திரிந்த ஆழ்கடலின் ராட்சத உயிரினம் பற்றிய ஒரு தூண்டக்கூடிய பார்வையை வழங்குகின்றன. இது நசுக்கும் தாடை, வலிமையான கரங்கள் மற்றும் பிற பெரிய வேட்டையாடிகளுடன் போட்டியிட அனுமதிக்கும் ஒரு மூளையையும் ஆயுதமாகக் கொண்டிருந்திருக்கலாம்.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு