இந்திய எண்ணெய் நிறுவனங்கள் லாபமீட்டினாலும் பெட்ரோல், டீசல் விலையேற்றம் ஏன்?

பட மூலாதாரம், Nasir Kachroo/NurPhoto via Getty Images
- எழுதியவர், ராகவேந்திர ராவ்
- பதவி, பிபிசி நிருபர், டெல்லி
- பிரசுரிக்கப்பட்டது
- வாசிக்கும் நேரம்: 6 நிமிடங்கள்
இந்தியாவில் மே மாதத்தில் மட்டும் பெட்ரோல் மற்றும் டீசல் விலை நான்கு முறை உயர்த்தப்பட்டுள்ளது.
மே 15-ஆம் தேதி முதல் முறையாக ரூ.3 உயர்த்தப்பட்டது. அதன்பிறகு மே 19-ஆம் தேதி 87 முதல் 91 பைசா வரை உயர்த்தப்பட்டது.
மூன்றாவது முறையாக மே 23 அன்று மீண்டும் 87 முதல் 91 பைசா வரை உயர்த்தப்பட்டது. நான்காவது முறையாக மே 25 அன்று பெட்ரோல் லிட்டருக்கு ரூ.2.61 மற்றும் டீசல் லிட்டருக்கு ரூ.2.71 உயர்த்தப்பட்டது.
இதன் பொருள் மே 15 முதல் மே 25 இடையே பெட்ரோல் மற்றும் டீசலின் விலை லிட்டருக்கு ரூ.7 முதல் ரூ.7.5 வரை உயர்த்தப்பட்டுள்ளது.
அரசியல் விமர்சனங்கள்

பட மூலாதாரம், Getty Images
சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை உயர்வால் தான் எரிபொருள் விலை அதிகரிக்கப்பட்டதாக அரசாங்கம் கூறுகிறது.
அரசாங்கத்தின் கூற்றுப்படி, மத்திய கிழக்கில் நிலவும் பதற்றத்தால் எண்ணெய் விலை அதிகரித்துள்ளது, இதனால் இந்தியா போன்ற இறக்குமதியைச் சார்ந்துள்ள நாடுகள் விளைவுகளைச் சந்தித்து வருகின்றன.
அரசுக்குச் சொந்தமான எண்ணெய் நிறுவனங்கள் நீண்ட காலத்திற்கு எரிபொருளை குறைந்த விலைக்கு விற்று வந்ததாகவும் அதனால் தினசரி இழப்புகளைச் சந்தித்து வந்ததாகவும் அரசாங்கம் கூறுகிறது. அதனால் அந்த இழப்புகளைக் குறைக்க விலை உயர்வு அவசியமாவதாகவும் தெரிவிக்கிறது.
நுகர்வோருக்குப் பலன்களை வழங்க நீண்ட காலத்திற்கு விலை உயர்வை தடுத்து நிறுத்தியதாகவும் கலால் வரியைக் குறைத்ததன் மூலம் சுமையைக் குறைத்ததாகவும் அரசாங்கம் கூறுகிறது.
இந்த நடவடிக்கைகள் எடுக்கப்படவில்லை என்றால் எரிபொருள் விலை மேலும் அதிகரித்திருக்கும் என அரசாங்கம் தெரிவிக்கிறது. உலகளாவிய சூழ்நிலைகளுடன் ஒப்பிடுகையில் தற்போதைய விலை உயர்வு சமாளிக்கக் கூடியது தான் என்றும் அரசு கூறுகிறது.
ஆனால், இந்த விலை உயர்வுக்கு எதிர்க்கட்சிகள் கண்டனம் தெரிவித்துள்ளன.
மே 15-ஆம் தேதி எரிபொருள் விலை முதல் முறையாக உயர்த்தப்பட்ட பிறகு கருத்து தெரிவித்திருந்த மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி, "மோதி அரசாங்கம்தான் தவறு செய்துள்ளது, மக்கள் இதற்கான விலையைக் கொடுப்பார்கள். ரூ.3 விலை உயர்வின் பாதிப்பு ஏற்கெனவே உணரப்பட்டுள்ளது, மற்றவை அடுத்தடுத்து வரக்கூடும்." என்றார்.
பெட்ரோல் மற்றும் டீசல் விலையை உயர்த்துவது விலைவாசியை அதிகரித்து பொருளாதார வளர்ச்சியின் வேகத்தை தாமதப்படுத்தும் என காங்கிரஸ் பொதுச் செயலாளர் ஜெய்ராம் ரமேஷ் தெரிவித்துள்ளார்.
"பல ஆண்டுகளாக சர்வதேச எண்ணெய் விலை குறைந்த அல்லது சரிந்தபோது உள்ளூர் எரிவாயு, பெட்ரோல் மற்றும் டீசல் விலையைக் குறைப்பதன் மூலம் அதற்கான பலன்களை மக்களுக்குக் கடத்த வேண்டும் என காங்கிரஸ் தொடர்ந்து கோரிவந்தது. ஆனால் அது நடக்கவில்லை, வாடிக்கையாளர்கள் கொள்ளையடிக்கப்பட்டனர்," என்று அவர் தனது எக்ஸ் பதிவில் தெரிவித்துள்ளார்.
எண்ணெய் நிறுவனங்களுக்கு லாபமா நஷ்டமா?

பட மூலாதாரம், Getty Images
எரிபொருள் விலை உயர்த்தப்படுவதற்கு முன்பாக பேசிய மத்திய பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு துறை அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி, சர்வதேச கச்சா எண்ணெய் விலை உயர்வில் இருந்து வாடிக்கையாளர்களைப் பாதுகாக்க பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்கள் நாள் ஒன்றுக்கு ரூ.1,000 கோடி வரை இழப்புகளைச் சந்தித்து வருவதாக தெரிவித்தார்.
ஆனால் மே 13 மற்றும் மே 19-க்கு இடையே மூன்று முக்கிய எண்ணெய் நிறுவனங்களான இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன், பாரத் பெட்ரோலியம், ஹிந்துஸ்தான் பெட்ரோலியம் ஆகியவை ஜனவரி முதல் மார்ச் மாதம் வரையிலான காலாண்டு முடிவுகளை வெளியிட்டன.
அந்த முடிவுகளின்படி, இடைப்பட்ட காலத்தில் மூன்று நிறுவனங்களுமே லாபம் சம்பாதித்து சிறப்பாகவே செயல்பட்டுள்ளன. மூன்று நிறுவனங்களின் கூட்டு லாபம் தோராயமாக ரூ.19,000 கோடி வரை அதிகரித்தது.
எண்ணெய் நிறுவனங்கள் இழப்புகளைச் சந்தித்து வருவதாக முன்வைக்கப்படும் கூற்றின் மீது அஜய் ஶ்ரீவஸ்தவா கேள்வி எழுப்புகிறார். இவர் டெல்லியைச் சேர்ந்த ஆய்வு நிறுவனமான உலகளாவிய வர்த்தக ஆராய்ச்சி முன்னெடுப்பின் (குளோபல் டிரேட் ரிசர்ச் இனிஷியேடிவ்) இயக்குநராக உள்ளார்.
இது தொடர்பாக பேசிய அவர், "அரசாங்கம் விலையை உயர்த்தாததால் எண்ணெய் நிறுவனங்கள் தினசரி பல கோடி ரூபாய் இழப்புகளைச் சந்திப்பதாக செய்திகள் வரும் நிலையில் எண்ணெய் நிறுவனங்களின் அறிக்கைகள் பெரிய அளவிலான லாபத்தைக் காட்டுகின்றன. இது என்னது?" என்று கேள்வி எழுப்பி இருந்தார்.
இந்த அமைப்பில் வெளிப்படைத்தன்மை வேண்டும் என்று கூறும் அவர், "அப்போது தான் எண்ணெய் நிறுவனங்கள் எத்தனை சதவிகிதம் எடுத்துக் கொள்கின்றன, அரசாங்கம் எவ்வளவு வரியை எடுத்துக் கொள்கிறது என்பது தெரியும். இவை நம்முன் வெளிப்படையாக வைக்கப்பட்டால் அனைத்தும் சிறப்பாக இருக்கும்." என்றார்.
தொடர்ந்து பேசிய அவர், "2020-21 காலகட்டத்தில் எண்ணெய் விலை ஒரு பேரலுக்கு 25 - 30 டாலர் வரை இருந்தபோது உள்ளூர் எரிபொருள் விலையில் மாற்றம் இல்லை. அப்போது அதிக அளவில் லாபம் ஈட்டப்பட்டிருந்தால், அந்த லாபத்தை ஒரு பொது நிதியில் சேர்த்திருக்க வேண்டும் அல்லது பெட்ரோல் விலையைக் குறைத்திருக்க வேண்டும். அரசாங்கம் அதைச் செய்யவில்லை." என்று தெரிவித்தார்.
"லாபங்கள் ஒரு பொது நிதியில் வைக்கப்பட்டிருந்தால், விலைகள் அபரிமிதமாக உயரும்போது வாடிக்கையாளர்கள் பாதிக்கப்படாமல் இருக்க இந்த நிதியைப் பயன்படுத்தி இருக்கலாம். பெட்ரோல் மற்றும் டீசலின் விலை இவ்வளவு உயர்த்தப்பட வேண்டிய அவசியம் இருந்திருக்காது." என்றும் அவர் குறிப்பிட்டார்.
இந்த ஒட்டுமொத்த துறையும் வெளிப்படைத்தன்மை இல்லாமலே இயங்குகிறது என்று கூறும் அவர், இதில் வெளிப்படைத்தன்மை கொண்டு வருவது பல்வேறு பிரச்னைகளைத் தீர்க்கும் என்றும் தெரிவித்தார்.
எண்ணெய் நிறுவனங்களின் அறிக்கைகள் மார்ச் வரையிலான காலாண்டு காலத்திற்கு மட்டுமே உள்ளது. எனவே இந்த நிறுவனங்களின் லாபத்தில் ஏற்பட்ட எதிர்மறை தாக்கம் அடுத்தடுத்த காலாண்டு அறிக்கைகளில் வெளிப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
ரஷ்ய எண்ணெயின் பங்கு என்ன?

பட மூலாதாரம், Getty Images
2022-இல் யுக்ரேன் போர் தொடங்கியதில் இருந்து இந்தியாவின் எண்ணெய் இறக்குமதி கொள்கை மிகப்பெரிய மாற்றத்திற்கு உள்ளானது.
ரஷ்யா மீது மேற்கத்திய நாடுகள் பொருளாதார தடைகளை விதித்த நிலையில் ரஷ்ய எண்ணெய் சலுகை விலையில் கிடைத்தது. அதனை தனக்குச் சாதகமாக பயன்படுத்திக் கொண்ட இந்தியா இறக்குமதியை அதிகரித்தது.
அதற்கு முன்னதாக இந்திய எண்ணெய் இறக்குமதியில் ரஷ்ய எண்ணெயின் பங்கு குறைவாக இருந்த நிலையில் 2022-இன் சில மாதங்களிலே ரஷ்ய கச்சா எண்ணெயை வாங்குவதை பெரும் அளவில இந்தியா அதிகரித்தது. இந்தியாவின் மிகப்பெரிய எண்ணெய் விநியோகஸ்தராக ரஷ்யா மாறியது.
இந்த வளர்ச்சி 2022 - 2023 காலகட்டத்தில் மேலும் அதிகரித்தது. இந்தியாவின் ஒட்டுமொத்த எண்ணெய் இறக்குமதியின் ரஷ்யாவின் பங்கு 2 சதவிகிதத்தில் இருந்து 19 சதவிகிதமாக அதிகரித்தது. இதுவே 2023 - 2024 காலகட்டத்தில் 35 - 40% வரை ஆனது.
மலிவான எண்ணெய் இந்தியாவின் இறக்குமதி செலவுகளைக் குறைக்க உதவியது. மத்திய கிழக்கு நாடுகளின் இடத்தை ரஷ்யா பிடித்தது.
இங்கே எழுகின்ற மற்றுமொரு கேள்வி என்னவென்றால் ரஷ்ய எண்ணெயைச் சுத்திகரித்து மற்ற நாடுகளுக்கு விற்றுவந்த இந்தியா, இரான் போர் தொடங்கிய பிறகு ஏற்றுமதிக்கு தடை விதித்து தனது சொந்த தேவைகளுக்காக எண்ணெயைச் சேமித்திருக்க வேண்டுமா என்பது தான்.
இதற்குப் பதலளித்துப் பேசிய அஜய் ஶ்ரீவஸ்தவா, "இரான் போர் தொடங்கிய போது சீனா, சிங்கப்பூர் உள்ளிட்ட நாடுகள் சுத்திகரிக்கப்பட்ட பெட்ரோலிய பொருட்களின் ஏற்றுமதிக்கு தடை விதித்தன. போர் தொடங்கிய பிறகு எழும் தட்டுப்பாட்டைச் சமாளிக்க அந்த நாடுகள் இதைச் செய்தன.. இந்தியாவும் அதைச் செய்திருக்க வேண்டும்."
"இன்றைய தரவுகளை நாம் ஒப்பிட்டுப் பார்த்தால் சீனாவிடம் ஆறு மாத காலத்திற்கான கையிருப்பு இருந்தது. ஆனால் இந்தியாவிடம் மிக குறுகிய காலத்திற்கான கையிருப்பு மட்டுமே உள்ளது. எனவே இந்தியா கண்டிப்பாக எண்ணெய் ஏற்றுமதிக்கு தடை விதித்திருக்க வேண்டும்." என்றார்.
சீனாவிடம் அதிக அளவிலான கையிருப்பு இருந்த போதும் ஏற்றுமதிக்கு அந்நாடு தடை விதித்ததாகக் கூறும் அஜய், இந்தியாவும் தடை விதித்திருக்க வேண்டும் எனத் தெரிவிக்கிறார்.
"தற்போது கூட பெட்ரோல் மற்றும் டீசலின் ஏற்றுமதி தொடர்கிறது. இந்தியாவில் ஏற்றுமதி செய்யும் நிறுவனங்களில் பொதுத்துறை மற்றும் தனியார் நிறுவனங்களும் உள்ளன. ஆனால் தேச நலனைக் கருத்தில் கொண்டு அனைத்து தரப்பையும் கட்டுப்பாடுகளைப் பின்பற்ற நிர்பந்தித்து இருக்கலாம். ஏற்றுமதி செய்யும் நிறுவனங்கள், தங்களுக்கும் எண்ணெய் வாங்குபவர்களுக்கும் இடையே ஒப்பந்தம் இருப்பதாகவும் அதனை மீறினால் இழப்பீடு செலுத்த வேண்டியிருக்கும் என்றும் கூறுகின்றன." என்கிறார் அஜய்.
இது உண்மைதான் என்றாலும், தற்போதுள்ளதைப் போன்ற தேசிய நெருக்கடி சூழலில் அவை அனைத்தையும் புறந்தள்ளிவிட்டு இந்திய அரசு பெட்ரோல் மற்றும் டீசல் ஏற்றுமதியைத் தடுத்திருக்க வேண்டும் என்றும் அவர் தெரிவித்தார்.
ஐசிஆர்ஏ என்கிற நிறுவனம் இந்தியாவின் முதன்மை கடன் மதிப்பீடு முகமையாக உள்ளது. அந்த நிறுவனத்தின் துணைத் தலைவரான பிரசாந்த் வாசிஷ்ட், எண்ணெய் சேமிப்பதில் உள்ள போதாமைகளைச் சுட்டிக்காட்டுகிறார்.
ரஷ்ய கச்சா எண்ணெயைச் சேமிப்பது ஒரு செல்லுபடியாகும் வாதமாக இருக்கும் என தான் நினைக்கவில்லை என்றும் அவர் தெரிவிக்கிறார்.
"ஆனால் நமக்கு கூடுதல் சேமிப்பு வசதிகள் தேவை. அந்த நேரத்தில் மலிவாக கிடைத்ததால் இந்தியா எண்ணெயை ஏற்றுமதி செய்தது என அர்த்தமாகாது. தன்னால் எவ்வளவு முடியுமோ அவ்வளவு எண்ணெயை இந்தியா சேமித்து வைத்தது," என்றார்.
பல நாடுகள் பெட்ரோல் மற்றும் டீசல் வாங்குவதற்கு கட்டுப்பாடுகள் விதித்ததாக தெரிவிக்கிறார் பிரசாந்த்.
இது தொடர்பாக மேலும் பேசிய அவர், "நாம் தற்போது வரை தேசிய எரிபொருள் நெருக்கடியை அறிவிக்கவில்லை. ஏனெனில் நம்மால் கச்சா எண்ணெயைப் பெற முடிகிறது. உலகின் கச்சா எண்ணெய் அல்லது பெட்ரோலிய பொருட்களில் 20 சதவிகிதம் குறைந்தால் அது இறக்குமதி செய்யும் நாடுகளைக் கண்டிப்பாகப் பாதிக்கும் என நாம் சொல்லலாம்."
"இத்தகைய சூழ்நிலைகளைச் சமாளிக்க கூடுதல் எண்ணெய் சேமிப்பு வசதிகளை உருவாக்கி இருக்கலாமா என எப்போது வேண்டுமானாலும் விவாதிக்கலாம். பல நாடுகள் இதைவிட கூடுதலாக பாதிக்கப்பட்டுள்ளன. விலை கணிசமாக உயர்த்தப்பட்டுள்ளது. வளர்ந்த நாடுகளில் எரிபொருள் விலை 50% வரை அதிகரித்துள்ளது. இந்தியாவில் படிப்படியாக விலை உயர்த்தப்படுகிறது. இதைச் செய்தாக வேண்டும்." எனத் தெரிவித்தார்.
சீனா தயார் நிலையில் இருந்ததா?

பட மூலாதாரம், Getty Images
இரான் போரால் ஏற்படும் சூழலைச் சமாளிக்க சீனா சிறப்பான முறையில் தயாராகி இருந்ததா என்கிற கேள்வியும் எழுகிறது.
இந்தியா ரஷ்ய எண்ணெய் வாங்குவதற்கு அமெரிக்கா மறுப்பு தெரிவித்து வந்த சூழலில் ரஷ்யாவில் இருந்து அதிக அளவில் எண்ணெய் இறக்குமதி செய்த நாடாக சீனா உருவெடுத்தது.
"சீனாவை தடுத்து நிறுத்த அமெரிக்கா துணியவில்லை, சீனா அவர்களுக்குச் செவிமடுக்கவும் இல்லை. ரஷ்யாவில் இருந்து இந்தியா எண்ணெய் வாங்காததால் மீதமிருந்தவற்றை சீனா பெற்றது. சீனா சிறந்த விலையில் எண்ணெய் பெற்றது, ரஷ்யா அதன் மிகப்பெரிய விநியோகஸ்தராக மாறியது. இந்தியா வாங்குவதைக் குறைத்ததும், சீனா அதனை வாங்கத் தொடங்கியது," என்கிறார் அஜய்.
சீனா ஒரு சுதந்திரமான இறையாண்மை கொண்ட நாடாக தனது கொள்கையை வரையறுத்து வருவதாக அஜய் தெரிவிக்கிறார்.
"அதனால் ஏற்படும் நன்மை என்னவென்றால் நீங்கள் ஒரு நாட்டுடன் 10 அல்லது 20 ஆண்டுகளுக்கு நீண்டகால ஒப்பந்தம் மேற்கொண்டால் உங்களுக்கு மலிவான விலையில் எண்ணெய் கிடைக்கும். இரான் போருக்கு முன்பாக ரஷ்யாவில் இருந்து எண்ணெய் வாங்குவதன் மூலம் இந்தியா பெற்று வந்த பலன்களைச் சிறிது காலத்திற்கு சீனா அனுபவித்து வருகிறது. சீனா ஒரு இறையாண்மைக் கொண்ட நாட்டைப் போல நகர்வுகளை மேற்கொண்டு தனது எரிபொருள் பாதுகாப்பை பராமரித்தது. இந்தியா சில அழுத்தத்திற்கு உள்ளாகி இருக்கலாம்." என்றார் அவர்.
இந்தியா தனது எண்ணெயில் 88 முதல் 90 சதவிகிதம் வரை இறக்குமதி செய்வதாகக் கூறும் அஜய் ஶ்ரீவஸ்தவா, அதில் 80 சதவிகிதம் இரண்டே ஆதாரங்களில் இருந்து வருவதாக தெரிவிக்கிறார்.
இதனை விளக்கிப் பேசிய அவர், "எண்ணெய் இறக்குமதியில் 50% மேற்கு ஆசியாவில் இருந்து வந்தது. தற்போது அது பாதிக்கப்பட்டுள்ளது. மீதமுள்ள 30% கடந்த ஆண்டு ரஷ்யாவில் இருந்து வந்தது, இந்தியா அதை வாங்குவதற்கு அமெரிக்கா ஆட்சேபம் தெரிவித்து வருகிறது. எனவே தற்போது இந்தியாவின் எரிபொருள் பாதுகாப்பில் 80% ஆபத்தில் உள்ளது. இந்தியா அனைத்து அழுத்தங்களையும் நீக்கி இந்த பிரச்னையை எவ்வாறு தீர்ப்பது என்பதில் கவனம் செலுத்த வேண்டும்." எனத் தெரிவித்தார்.
இந்த நிலையில் தற்போதைய சூழலைச் சமாளிப்பதற்கான சீனாவின் முன் ஏற்பாடுகள் சிறப்பானதாக இருந்துள்ளது என்கிறார் பிரசாந்த்.
மேலும் பேசிய அவர், "கடந்த சில ஆண்டுகளில் சீனா புதுப்பிக்கத்தக்க ஆற்றலில் அதிக கவனம் செலுத்தி உள்ளது. நூற்றுக்கணக்கான கிகாவாட் திட்டங்கள் ஏற்படுத்தப்பட்டு உள்ளன. சீனா அதிக அளவிலான மின்மயமாக்கலைச் செய்துள்ளது. தனது உள்நாட்டு எண்ணெய் கையிருப்பை அதிகரித்ததோடு உள்நாட்டு எண்ணெய் உற்பத்தியையும் அதிகரித்துள்ளது."
"மலாக்கா நீரிணை தனது பலவீனமான புள்ளி என்பதை சீனா அறிந்திருந்தது. எனவே தனது கையிருப்பை அதிகரித்ததோடு மின்மயமாக்கல் மற்றும் புதுப்பிக்கத்தக்க ஆற்றல் மூலம் பெட்ரோல் மீதான தனது சார்பைக் குறைத்துள்ளது. அவர்கள் தங்களின் உள்நாட்டு உற்பத்தியை அதிகரிக்கவும் முயன்றுள்ளனர். எனவே சீனா சிறப்பான முறையில் தயாராகி உள்ளது." என்றார்.
எனவே தற்போதைய சூழலில் இந்தியா முன்நகரும் வழி என்ன என்கிற கேள்வி முன்வைக்கப்படுகிறது.
இந்தியா தன்னுடைய எரிபொருள் ஆதாரங்களைப் பன்மைப்படுத்துவதை தீவிரமாக எடுத்துக்கொள்ள வேண்டும் என பிரசாந்த் கூறுகிறார்.
"இந்தியா எப்போதும் பன்மைத்துவப்படுத்தி வருகிறது. தற்போது அதில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும். எத்தனால் எரிபொருளை 100 சதவிகிதம் ஆக்கும் பேச்சுகள் இருந்து வருகின்றன. இது மிகவும் நீண்டதொரு பயணமாக இருக்கும். இதற்கு பல ஆண்டுகள் ஆகும். நம்மால் பெட்ரோல் மற்றும் டீசலை பயன்பாட்டில் இருந்து முழுமையாக அகற்ற முடியாது. சிறந்த மாற்றுகளையும் நாம் யோசிக்க வேண்டும்." என்று அவர் தெரிவித்தார்.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு































