பஞ்சாப்: 300 அடி உயர செல்போன் டவரில் 18 மாதங்கள் இவர் ஏன் தங்கியிருந்தார்? எப்படி மீட்கப்பட்டார்?

43 வயதான குர்ஜித் சிங், அக்டோபர் 12, 2024 முதல் ஒரு மொபைல் போன் கோபுரத்தின் மீது அமர்ந்திருந்தார்; தற்போது அவர் கீழே இறக்கப்பட்டுள்ளார்.
படக்குறிப்பு, 43 வயதான குர்ஜித் சிங், அக்டோபர் 12, 2024 முதல் ஒரு மொபைல் போன் கோபுரத்தின் மீது அமர்ந்திருந்தார், தற்போது அவர் கீழே இறக்கப்பட்டுள்ளார்.
    • எழுதியவர், சரப்ஜித் சிங் தாலிவால்
    • பதவி, பிபிசி செய்தியாளர்
  • வாசிக்கும் நேரம்: 4 நிமிடங்கள்

எச்சரிக்கை: இந்தக் கட்டுரையில் இடம்பெற்றுள்ள விவரங்கள் அதிர்ச்சியூட்டும் அல்லது ஆபத்தான தன்மையைக் கொண்டவை.

"18 மாதங்கள் மற்றும் 12 நாட்களுக்குப் பிறகு நான் பாதுகாப்பாகத் தரைக்குத் திரும்பியுள்ளேன்." இவை பஞ்சாபின் பட்டியாலா மாவட்டம், சமானா நகரின் கேரி நாகியான் கிராமத்தைச் சேர்ந்த குர்ஜித் சிங்கின் வார்த்தைகள்.

43 வயதான குர்ஜித் சிங், கடந்த 2024 அக்டோபர் 12-ஆம் தேதி முதல் சமானா நகரின் மையப்பகுதியில் அமைந்துள்ள மொபைல் போன் கோபுரம் ஒன்றின் மீது ஏறி அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வந்தார்.

அவர் வெள்ளிக்கிழமை (2026 ஏப்ரல் 24) காலை சுமார் 7.45 மணி அளவில் கோபுரத்திலிருந்து கீழே இறக்கப்பட்டார்.

'புனித நூல் அவமதிப்புச் சம்பவங்களை' மிகக் கடுமையாகக் கையாளும் வகையில் புதிய சட்டம் இயற்றப்பட வேண்டும் என்று அவர் கோரிக்கை விடுத்து வந்தார்.

தரைக்குத் திரும்புவதற்கு ஒரு நாள் முன்னதாகப் பேசிய அவர், "2024 அக்டோபர் 12 முதல் 2026 ஏப்ரல் 23 வரை, கடுமையான கோடை வெயில், மழை, காற்று, நடுங்கும் குளிர் மற்றும் பல்வேறு இன்னல்களை நான் எதிர்கொண்டேன். ஆனால் இன்று எனது கோரிக்கை ஏற்கப்பட்டிருப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன்," என்றார்.

'ஜகத் ஜோத் ஸ்ரீ குரு கிரந்த் சாஹிப் சத்கார் (திருத்தச்) சட்டம், 2026' பஞ்சாப் சட்டப்பேரவையில் கடந்த 2026 ஏப்ரல் 13 அன்று நிறைவேற்றப்பட்டது. பின்னர், ஏப்ரல் 17-ஆம் தேதி ஆளுநர் இதில் கையெழுத்திட்டதைத் தொடர்ந்து இது சட்டமானது.

இருப்பினும், இந்தப் புதிய சட்டம் மதச்சார்பின்மைக்கு எதிரானது என்றும், இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் 14-வது பிரிவை மீறுவதாகவும் கூறி, பஞ்சாப் மற்றும் ஹரியாணா உயர் நீதிமன்றத்தில் இதனை எதிர்த்து மனுத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

பட்டியாலா மாவட்ட நிர்வாகம், சிவில் பாதுகாப்புப் படை மற்றும் இந்திய ராணுவம் ஆகியவை இணைந்து நடத்திய கூட்டு நடவடிக்கையின் மூலம் குர்ஜித் சிங் கோபுரத்திலிருந்து கீழே இறக்கப்பட்டார்.

குர்ஜித் சிங் 24-ஆம் தேதி காலை கைது செய்யப்படுவார் என்று சமானா டிஎஸ்பி ஃபதே சிங் பிரார் பிபிசி பஞ்சாபி-யிடம் தெரிவித்திருந்தார். அதன்படி, தற்போது அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

அவரைப் பாதுகாப்பாகக் கீழே இறக்கிய மீட்புக் குழுவில் இருந்த தீயணைப்பு வீரர் கிருஷ்ண குமார், "நான் அவரைப் பிடித்தேன், கட்டப்பட்டிருந்த கயிறுகளை அவிழ்த்து அவரைப் பாதுகாப்புக் கூண்டுக்குள் ஏற்றினேன். இதற்காக நாங்கள் கடந்த பல நாட்களாகப் பயிற்சி பெற்று வந்தோம்," என்றார்.

கோபுரத்திலிருந்து கீழே இறக்கப்பட்ட பிறகு, குர்ஜித் சிங் மருத்துவப் பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார்.

பாட்டியாலா மாவட்ட நிர்வாகம், சிவில் பாதுகாப்புப் படை மற்றும் இந்திய ராணுவம் ஆகியவை இணைந்து இந்த மீட்பு நடவடிக்கையை மேற்கொண்டன.

கோபுரத்தின் மீது குர்ஜித் பல மாதங்களைக் கழித்தது எப்படி?

வாட்ஸ்அப் விளம்பரம் - ஐ புறக்கணித்துவிட்டு தொடர்ந்து படிக்கவும்
வாட்ஸ்ஆப்பில்

பிபிசி தமிழ் செய்திகளை செல்போனிலேயே படிக்கலாம்

பின்தொடர கிளிக் செய்யவும்

வாட்ஸ்அப் விளம்பரம் - முடிவு

சமானா நகரின் மையப்பகுதியில் உள்ள குழந்தைகள் பூங்கா அருகே அமைந்துள்ள அந்த செல்போன் கோபுரம், கடந்த 18 மாதங்களுக்கும் மேலாகப் பேசுபொருளாக இருந்து வருகிறது.

கோபுரத்தின் உச்சியில் அமர்ந்திருந்த குர்ஜித் சிங்கை, பிபிசி பஞ்சாபியுடன் வியாழக்கிழமை மதியம் 2 மணியளவில் தொலைபேசி வாயிலாக பேசினார்.

அப்போது பேசிய குர்ஜித் சிங், "கடந்த காலங்களில் நான் பல சிரமங்களை எதிர்கொண்டேன், ஆனால் இறுதியில் எனக்கு வெற்றி கிடைத்துள்ளது," என்றார்.

முன்னாள் ராணுவ வீரரான குர்ஜித் சிங், தற்போது விவசாயம் செய்து வருகிறார். அக்டோபர் 12, 2024 அன்று கோபுரத்தின் மீது ஏறியபோது, ஆரம்பத்தில் தான் பல சவால்களை எதிர்கொண்டதாக அவர் கூறினார்.

குறிப்பாகப் புறாக்களும் பிற பறவைகளும் தனக்கு மிகுந்த தொந்தரவு கொடுத்ததாக அவர் தெரிவித்தார்.

"சுமார் 100 அடி உயரத்தை அடைந்த பிறகு சிறிது நேரம் ஓய்வெடுத்தேன். பின்னர் 200 அடி உயரத்திற்குச் சென்றேன். இறுதியாகச் சுமார் 300 அடி உயரத்தை அடைந்தேன், ஏனெனில் அந்த இடம் பாதுகாப்பானதாகத் தோன்றியது," என்று அவர் விவரித்தார்.

முதலில் கோபுரத்தின் மீதிருந்த இடைவெளியில் தங்கியதாகவும், பின்னர் மெல்ல மெல்லத் தரையிலிருந்து பொருட்களை மேலே கொண்டு சென்று அங்கு ஒரு கூடாரம் அமைத்துக் கொண்டதாகவும் குர்ஜித் கூறினார்.

அவர் மேலும், "சில சிறிய தண்ணீர் பாட்டில்கள், சிற்றுண்டி மற்றும் சில அத்தியாவசியப் பொருட்களை எடுத்துச் சென்றேன். ஆனால் அவை விரைவில் தீர்ந்துவிட்டன. ஐந்து நாட்களுக்குப் பிறகு நிர்வாகம் சில பொருட்களை அனுப்பி வைத்தது, அது எனக்குப் போதுமானதாக இருந்தது," என்றார்.

சுமார் 18 மாதங்களாக கோபுரத்தின் மீது வசித்த குர்ஜித் சிங்
படக்குறிப்பு, சுமார் 18 மாதங்களாக கோபுரத்தின் மீது வசித்த குர்ஜித் சிங்

தான் இரவு முழுவதும் விழித்திருப்பதாகவும், சூரிய உதயத்திற்குப் பிறகுதான் உறங்குவதாகவும் அவர் தெரிவித்தார்.

இதற்கான காரணத்தைக் குறிப்பிட்ட குர்ஜித் சிங், "இரவு நேரங்களில் பாதுகாப்பு அச்சுறுத்தல் இருப்பதாக நான் உணர்ந்தேன். அதனால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இரவு முழுவதும் விழித்திருந்துவிட்டு, விடிந்தபிறகு காலை 9 மணி வரை உறங்குவேன்," என்றார்.

நிர்வாகம் தன்னை கீழே இறக்கப் பலமுறை முயற்சி செய்ததாகவும், ஆனால் கோபுரத்தின் உயரம் காரணமாக அவர்களால் தன்னை நெருங்க முடியவில்லை என்றும், தான் தனது கோரிக்கையில் உறுதியாக இருந்ததாகவும் அவர் கூறினார்.

"எனக்குத் தெரிந்த ஒருவர் தினமும் எனக்கு சிற்றுண்டி, மருந்துகள் மற்றும் தண்ணீர் ஆகியவற்றை அனுப்பி வைப்பார். அதுவே எனது நேரத்தைக் மெல்லக் கடத்த உதவியாக இருந்தது," என்றார் அவர்.

தொடர்ந்து பேசிய குர்ஜித், "பலத்த காற்று வீசும் நேரங்களிலும், இருட்டிலும் மிகவும் கடினமான சூழலை எதிர்கொண்டேன். அந்தச் சமயங்களில் கோபுரம் ஆடும், அது பெரும் பதற்றத்தை ஏற்படுத்தும். அதுமட்டுமின்றி, குளிர்காலத்தில் எதையும் பார்க்க முடியாது, கடும் குளிரும் பெரும் சிரமத்தை உண்டாக்கியது," என விவரித்தார்.

மழைக்காலத்தில் ஆடைகள் நனைந்துவிடும் என்றும், காற்றில் தானாகவே காய்வதைத் தவிர வேறு வழியில்லை என்றும் அவர் தெரிவித்தார்.

பகலில் ஒருவேளை மட்டும் தான் உணவு (ரொட்டி) உட்கொள்வதாகவும், பெரும்பாலும் திரவ உணவுகளைக் கொண்டே உயிர் வாழ்ந்ததாகவும் கூறிய அவர், அன்றாடத் தேவைகளை நிறைவேற்றுவதில் பெரும் சிரமத்தைச் சந்தித்ததாகக் குறிப்பிட்டார்.

நீண்ட காலம் ஒரே இடத்தில் இருந்ததால் தனது கால்கள் வீங்கிவிட்டதாகவும், பல உடல்நலக் குறைபாடுகள் ஏற்பட்டுள்ளதாகவும் குர்ஜித் தெரிவித்தார். இருப்பினும், புனித நூல் அவமதிப்புக்கு எதிராகச் சட்டம் இயற்றப்பட்டிருப்பது தமக்கு மகிழ்ச்சி அளிப்பதாக அவர் கூறினார்.

குர்ஜித் சிங்கிற்கு மனைவியும் ஒரு மகனும் உள்ளனர். தனது தாயை நினைவு கூர்ந்த அவர், தனது இதயத்திற்கு நெருக்கமானவர் அவர்தான் என்றும், அவரிடம் தான் தொடர்ந்து பேசிக் கொண்டிருப்பதாகவும் தெரிவித்தார்.

கோபுரத்திலிருந்து கீழே இறங்கிய பிறகு ஊடகங்களிடம் பேசும் குர்ஜித் சிங்.
படக்குறிப்பு, கோபுரத்திலிருந்து கீழே இறங்கிய பிறகு ஊடகங்களிடம் பேசும் குர்ஜித் சிங்.

தேவையான பொருட்கள் எப்படிச் சென்றடைந்தன?

சுமார் 300 அடி உயரமுள்ள கோபுரத்தின் உச்சியில் குர்ஜித் சிங் இருந்தார். அவருக்குத் தினமும் உணவு மற்றும் பிற அத்தியாவசியப் பொருட்களைக் கொண்டு சேர்ப்பதுதான் மிகப் பெரிய சவாலாக இருந்தது.

குர்ஜித் சிங்கிற்குத் தினமும் தேவையான பொருட்களைக் கொண்டு செல்லும் பொறுப்பைக் குர்ஜந்த் சிங் என்ற இளைஞர் ஏற்றுக்கொண்டார்.

குர்ஜந்த் சிங் ஒரு தனியார் நிறுவனத்தில் டவர் அமைக்கும் பணியில் ஈடுபட்டு வந்தவர். இதனால் கோபுரங்களின் உயரம் மற்றும் அதன் நுணுக்கங்களை அவர் நன்கு அறிந்திருந்தார்.

இதன் காரணமாக, அவர் தினமும் மதியம் ஒரு மணி அளவில் கோபுரத்தின் மீது ஏறி, ரொட்டி, ஆடைகள், மருந்துகள் மற்றும் பேட்டரி உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்களை எடுத்துச் செல்வார்.

"கோபுரத்தின் உச்சியில் இருக்கும் குர்ஜித் சிங்கிடம் செல்வதற்கு எனக்குத் தினமும் சுமார் 40 நிமிடங்கள் ஆகும். ஒவ்வொரு 100 அடி உயரத்தைக் கடந்த பின்பும், நான் அமர்ந்து சிறிது நேரம் ஓய்வெடுத்துவிட்டு, மீண்டும் ஏறுவேன்," என்றார் குர்ஜந்த் சிங்.

"குர்ஜித் சிங்கிடம் சென்றடைந்ததும், நான் சிறிது நேரம் ஓய்வெடுப்பேன். பின்னர் நாங்கள் பேசிக்கொண்டிருப்போம். சுமார் நான்கு மணி நேரத்திற்குப் பிறகு நான் கீழே இறங்கிவிடுவேன்."

மழை மற்றும் குளிர் நாட்களில் கோபுரத்தின் மீது ஏறுவது மிகவும் கடினமாக இருக்கும் என்றும் அவர் கூறினார்.

சுமார் 300 அடி உயர கோபுரத்தின் உச்சியில் குர்ஜித் சிங் தங்குவதற்காக ஒரு கூடாரத்தை அமைத்திருந்தார்.
படக்குறிப்பு, சுமார் 300 அடி உயர கோபுரத்தின் உச்சியில் குர்ஜித் சிங் தங்குவதற்காக ஒரு கூடாரத்தை அமைத்திருந்தார்.

குர்ஜித் சிங் கோபுரத்தின் மீது அமர்ந்து தனது கோரிக்கைகளை முன்வைத்துக் கொண்டிருந்தபோது, மக்கள் கீழே திரண்டு இத்தகவலை அரசுக்குத் தெரிவித்தனர்.

இதில் சில தொலைக்காட்சி செய்தியாளர்கள், திரைத்துறையினர், உளவியலாளர்கள் மற்றும் விவசாய சங்கத் தலைவர்கள் உள்ளிட்டோர் அடங்குவர்.

53 வயதான தொலைக்காட்சி செய்தியாளர் குர்பிரீத் சிங், ஒருங்கிணைப்புப் பணிகளை மேற்கொண்டு வந்தார்.

பிபிசி பஞ்சாபி-யிடம் பேசிய அவர், "பிப்ரவரி 24 அன்று பெருந்திரளான மக்கள் இந்தப் போராட்டத்தில் கலந்துகொள்ளத் திரண்டனர். ஆரம்பத்தில் பஞ்சாப் அரசு இந்தப் போராட்டத்தை ஒடுக்க அனைத்து முயற்சிகளையும் மேற்கொண்டது. ஆனால் மக்கள் பின்வாங்கவில்லை, இறுதியாக பாபா பண்டா சிங் பகதூர் சௌக் பகுதியில் போராட்டத்தை வெற்றிகரமாகத் தொடங்கினர்," என்றார்.

குறிப்பிடத்தக்க விஷயம் என்னவென்றால், ஏப்ரல் 13-ஆம் தேதி சட்டப்பேரவையில் மசோதா நிறைவேற்றப்பட்ட பிறகு, பஞ்சாப் சட்டப்பேரவைத் தலைவர் குல்தார் சிங் சந்த்வான் ஏப்ரல் 14 அன்று போராட்ட இடத்திற்கு நேரில் சென்றார்.

அங்கு குழுமியிருந்த போராட்ட ஒருங்கிணைப்பாளர்களிடம் 'ஜகத் ஜோத் ஸ்ரீ குரு கிரந்த் சாஹிப் சத்கார் திருத்த மசோதா-2026'-இன் நகலை அவர் ஒப்படைத்தார்,

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு