You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
முதலமைச்சராக இருந்தும் கொளத்தூரில் ஸ்டாலின் ஏன் தோற்றார்?
- எழுதியவர், மோகன்
- பதவி, பிபிசி தமிழ்
- வாசிக்கும் நேரம்: 4 நிமிடங்கள்
தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தல் முடிவுகள் வெளியாகியுள்ள நிலையில் தமிழக வெற்றிக் கழகம் தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்து 100-க்கும் மேற்பட்ட தொகுதிகளில் முன்னிலை வகித்து வருகிறது.
திமுக 50-க்கும் மேற்பட்ட இடங்களில் முன்னிலை வகித்து வரும் நிலையில் திமுக தலைவர் ஸ்டாலின் அவரது கொளத்தூர் தொகுதியில் தோல்வியைச் சந்தித்துள்ளார்.
அவரை எதிர்த்து போட்டியிட்ட தவெக வேட்பாளர் வி.எஸ். பாபு 82,997 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றுள்ளார்.
இதற்கு முன்னதாக மு.க.ஸ்டாலின் 1984 மற்றும் 1991 சட்டப்பேரவைத் தேர்தல்களில் ஆயிரம் விளக்கு தொகுதியில் தோல்வியைச் சந்தித்திருந்தார். அவர் சந்திக்கும் மூன்றாவது தேர்தல் தோல்வி இது.
கடந்த 2011-ஆம் ஆண்டு முதல் ஸ்டாலின் கொளத்தூர் தொகுதி சட்டமன்ற உறுப்பினராக இருந்து வந்தார். இந்த முறை கொளத்தூர் தொகுதியில் சுயேச்சைகள் உள்பட மொத்தம் 35 வேட்பாளர்கள் களத்தில் இருந்தனர்.
சட்டப்பேரவைத் தேர்தலுக்கு முன்பாக நடைபெற்ற வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணிகளில் அதிக அளவிலான வாக்காளர்கள் எண்ணிக்கை மாற்றம் கண்ட தொகுதிகளில் ஒன்றாக கொளத்தூரும் இருந்தது.
இந்த தொகுதியில் 2021இல் 70,000க்கும் அதிகமான வாக்குகள் வித்தியாசத்தில் வென்றிருந்தார் ஸ்டாலின். தற்போது 8,795 வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வியைச் சந்தித்திருக்கிறார்.
யார் இந்த வி.எஸ்.பாபு?
தவெக வேட்பாளர் வி.எஸ்.பாபு 2006 - 2011 காலகட்டத்தில் திமுக சார்பில் அப்போதைய புரசைவாக்கம் தொகுதியில் சட்டப்பேரவை உறுப்பினராக இருந்தவர். அதன் பிறகு அதிமுகவில் இணைந்தார். 2026 சட்டப்பேரவைத் தேர்தலுக்கு முன்பாக தவெகவில் இணைந்த நிலையில் கொளத்தூர் தொகுதி வேட்பாளராக அறிவிக்கப்பட்டார்.
வெற்றி சான்றிதழைப் பெற்ற பிறகு செய்தியாளர்களிடம் பேசிய வி.எஸ். பாபு, "விஜய் எந்த வழியில் செல்கிறாரோ அந்த வழியில் நாங்கள் தொண்டனாக இருந்து செயல்படுவோம்." என்றார்.
அதிக இடங்களில் தவெக முன்னிலை பெற்றுள்ளது குறித்த கேள்விக்கு, "எல்லா புகழும் தளபதிக்கே (விஜய்). வெற்றி பெற்றது நான் அல்ல, தளபதிதான். முழு வெற்றிக்கும் அவர்தான் காரணம். என் தொகுதியில் மக்களிடம் இருந்து லஞ்சம் பெறாமல் திட்டங்களை செயல்படுத்துவோம்." என்றார்.
திமுகவிலிருந்து விலகியது குறித்த கேள்விக்குப் பதிலளித்தவர், "கட்சியிலிருந்து யாரும் வெளியேற்றவில்லை. நானாக தான் வெளியேறினேன்." எனத் தெரிவித்தார்.
'முதலமைச்சரின் செல்வாக்கையும் மிஞ்சிய அடிப்படை பிரச்னைகள்'
முதலமைச்சரின் தொகுதி என்பதால் இயல்பாகவே நட்சத்திர தொகுதி என்கிற அந்தஸ்தை கொளத்தூர் பெற்றிருந்தது.
ஆனால் நட்சத்திர தொகுதிக்கு உரிய பரபரப்பு கொளத்தூர் தேர்தல் பிரசாரத்தில் தென்படவில்லை. இந்த முறை வட சென்னையில் தவெக மற்றும் விஜயின் வருகையால் கொளத்தூர், பெரம்பூர், திரு வி.க நகர், வில்லிவாக்கம் உள்ளிட்ட பல தொகுதிகள் நட்சத்திர தொகுதிகளாக ஊடக வெளிச்சம் பெற்று வந்தன.
ஆனால் பெரம்பூர், திரு வி க நகர் போன்ற தொகுதிகளில் தென்பட்ட தேர்தல் தீவிரம் கொளத்தூரில் இருக்கவில்லை. பிபிசி தமிழ் களத்துக்குச் சென்றபோது அரசியல் கட்சிகளின் தேர்தல் பணிமனைகள் பரபரப்பின்றி காணப்பட்டன.
மற்ற தொகுதிகளில் கட்சிக் கொடிகள் மற்றும் போஸ்டர்கள் அதிக அளவில் இருந்த நிலையில் கொளத்தூர் தொகுதியில் மிகப்பெரிய அளவிலான பதாகைகளையோ விளம்பரங்களையோ பார்க்க முடியவில்லை.
"கொளத்தூர் தொகுதியில் எந்தக் கட்சிகளுமே தீவிரமான பிரசாரத்தில் ஈடுபடவில்லை. மாறாக தெருவோர பிரசாரங்கள், வீடு வீடாகச் சென்று மேற்கொள்ளும் பிரசாரங்களிலே அதிகம் கவனம் செலுத்தின. முதலமைச்சருக்குச் செல்வாக்கு இருந்தாலும் அதையும் மீறிய அடிப்படை பிரச்னைகள் தேர்தலில் முக்கியமான இடம் வகித்தன. இங்கு தொழில் வாய்ப்புகள் குறைவாக இருப்பதால் இளைஞர்கள் வேலைக்காக அதிக தூரம் பயணிக்க வேண்டியிருக்கிறது. ," என்கிறார் கொளத்தூர் தொகுதியைச் சேர்ந்த ஆலன்.
வட சென்னை வளர்ச்சித் திட்டத்தின் கீழ் கொளத்தூரில் பொழுதுபோக்கு அம்சங்கள் மற்றும் பொதுமக்களுக்கான கட்டமைப்புகள் உள்ளிட்ட பல்வேறு பணிகள் மேற்கொள்ளப்பட்டிருந்தாலும் சாலை வசதி, போக்குவரத்து நெரிசல், ஆக்கிரமிப்புகள் மற்றும் குடியிருப்பு பட்டா போன்ற பல அடிப்படைத் தேவைகளையும் மக்கள் முன்வைத்தனர்.
கொளத்தூர் தொகுதியில் மட்டும் 4,000-க்கும் மேற்பட்ட குடும்பங்கள், 40 ஆண்டுகளுக்கும் மேலாக வீட்டுமனை பட்டாவுக்காக காத்திருக்கிறார்கள் என சிவ சக்தி நகரைச் சேர்ந்த மெர்லின் பிபிசி தமிழிடம் தெரிவித்திருந்தார்.
'முதலமைச்சராகப் பார்த்தார்கள், எம்.எல்.ஏவாக பார்க்கவில்லை'
கொளத்தூர் தொகுதியில் திமுகவின் தோல்விக்கு மக்கள் மத்தியில் நிலவிய அதிருப்தியே காரணம் என்கிறார் கொளத்தூரைச் சேர்ந்தவரும் மாநில குடியிருப்போர் நல சங்கங்களின் கூட்டமைப்பின் தலைவருமான நீலகண்ணன்.
தவெக வேட்பாளர் வி.எஸ்.பாபு உள்ளூர் மக்களுக்கு அறியப்பட்டவராக இருந்தாலும் இது விஜய்க்காக விழுந்த வாக்குகள் என்று அவர் தெரிவித்தார்.
"இங்கு திமுகவும் அதிமுகவும் தொடர்ந்து வெற்றி பெற்று வந்துள்ளன. அதனால் மக்களுக்கு ஒரு மாற்றம் தேவைப்பட்டது. முதல்முறையாக அவர்களின் எதிர்பார்ப்புக்கு இணங்க தவெக ஒரு மாற்றாக அமைந்தது. இந்த தேர்தலை தங்களின் ஆதங்கத்தை வெளிப்படுத்தும் வாய்ப்பாக மக்கள் பார்த்தனர். வி.எஸ்.பாபு உள்ளூர் மக்களுக்கு அறியப்பட்டவர் தான் என்றாலும் இங்கு வேறு யார் நின்றிருந்தாலும் வென்றிருப்பார்கள்," என்றார் அவர்.
"விஜய் பேசிய மொழி மக்களை எளிதில் சென்றடைந்தது. வேட்பாளர்களைவிடவும் உள்ளாட்சி கவுன்சிலர்கள் மீதிருந்த அதிருப்தியே இந்த தேர்தல் முடிவுகளுக்கு காரணமாக இருந்தது. முதலமைச்சர் ஸ்டாலின் அவ்வப்போது தொகுதிக்கு வந்திருக்கிறார். மழைநீர் வடிகால் பணிகள் உட்பட பல திட்டங்களை நிறைவேற்றி இருக்கிறார். அதைத் தாண்டியும் பல உள்கட்டமைப்பு தேவைகள் மற்றும் அதிருப்தி இருந்துள்ளது. மக்கள் அவரை முதலமைச்சராகவே பார்த்தனர், எம்.எல்.ஏ-வாக பார்க்கவில்லை." எனத் தெரிவித்தார்.
தேர்தல் முடிவுகள் பற்றி பிபிசி தமிழிடம் பேசிய தவெக வட சென்னை (வடக்கு) மாவட்ட செயலாளர் சிவா, "இந்த முடிவு நாங்கள் எதிர்பார்த்த ஒன்றுதான். மக்கள் ஒரு புதிய முடிவை எடுத்திருக்கிறார்கள். உள்ளூர் பிரச்னைகளை நாங்கள் தொடர்ந்து பேசி வந்தோம். அதுவே எங்களின் வெற்றிக்கு காரணமாகவும் அமைந்துள்ளது. இதுநாள் வரையில் கண்டு கொள்ளப்படாத மக்களின் கோரிக்கைகளுக்கு முக்கியத்துவம் கொடுத்து நிறைவேற்றுவோம்." என்றார்.
தேர்தல் முடிவுகள் பற்றி பேசிய நாதக வேட்பாளர் சௌந்தர பாண்டியன், "மக்களின் முடிவை ஏற்றுக்கொள்கிறோம். மக்கள் பிரச்னைகளைத் தொடர்ந்து எழுப்புவோம்." எனத் தெரிவித்தார்.
ஆனால் உள்ளூர் பிரச்னைகளையும் கடந்து மாநிலம் தழுவிய ஆட்சி மீதான அதிருப்தி மற்றும் விஜயைக் குறைத்து மதிப்பிட்டு திமுகவினர் அதீத நம்பிக்கையில் இருந்தது ஆகிய இரண்டும்தான் கொளத்தூர் தொகுதியில் ஸ்டாலின் தோற்றதற்கு காரணம் என்கிறார் பத்திரிகையாளர் சிவப்பிரியன்.
பிபிசி தமிழிடம் பேசிய அவர், "உள்ளூர் பிரச்னைகள் என்பது ஒரு பகுதி தான். ஆட்சி மீதான அதிருப்தியை முதலமைச்சர் மீது மக்கள் காட்டியிருக்கிறார்கள். அதோடு விஜய் வட சென்னையில் பெரம்பூரில் போட்டியிட்டது, பெரம்பூரைக் கடந்தும் தாக்கத்தை ஏற்படுத்தியிருக்கிறது. அதை தடுப்பதற்கும் கணிப்பதற்கும் திமுக தவறிவிட்டது. அதுவும்தான் தோல்விக்கு காரணம்." எனத் தெரிவித்தார்.
தேர்தல் முடிவுகள் பற்றி பிபிசி தமிழிடம் பேசிய திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ். பாரதி, இந்த முடிவுகளை தான் ஒரு மௌன புரட்சியாக பார்ப்பதாக தெரிவித்தார்.
மேலும் அவர், "திமுக தன் கடமையை முழுமையாக செய்தது, மக்கள் தங்கள் கடமையை செய்ய தவறிவிட்டனர். இந்த முடிவுகளின் பின்னணி குறித்து இனிமேல் தான் ஆராய வேண்டும்." என்றார்.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு