இரான் போர் விவகாரத்தில் அல்-கய்தா அமைதி காப்பது ஏன்? பின்னணியில் நடப்பது என்ன?

பட மூலாதாரம், Getty Images
- எழுதியவர், மினா அல்-லாமி
- பதவி, பிபிசி மானிட்டரிங்
- வாசிக்கும் நேரம்: 6 நிமிடங்கள்
பிப்ரவரி 28ஆம் தேதி தொடங்கிய, அமெரிக்கா, இஸ்ரேல் மற்றும் இரான் இடையிலான மோதல் குறித்தும், அதன் பரந்த தாக்கங்கள் குறித்தும் பயங்கரவாத அமைப்பான அல்-கய்தா பெரும்பாலும் மௌனம் காத்து வருகிறது.
இந்த மௌனம் வழக்கத்திற்கு மாறானது. கடந்த காலங்களில், மத்திய கிழக்கில் நிகழும் முக்கிய நிகழ்வுகளுக்கு அல்-கய்தாவும் அதனுடன் தொடர்புடைய குழுக்களும் வழக்கமாக எதிர்வினையாற்றி வந்துள்ளன. குறிப்பாக, தற்போதைய சூழலில் நிகழ்வது போல, இத்தகைய மோதல் ஜிஹாதி குழுக்களிடையே பரவலாக விவாதிக்கப்படும் நிலையில், அவை அறிக்கைகளை வெளியிடுவதும் வழக்கமாக நடக்கிறது.
இந்த ஆண்டில், அல்-கய்தாவின் மையத் தலைமையிடம் இருந்து ஒரேயொரு அறிக்கை மட்டுமே வெளியானது. அதுவும் பிப்ரவரி 4ஆம் தேதியன்று வெளியானது. இரானுடனான பதற்றங்கள் அதிகரித்து வந்ததன் காரணமாக, மத்திய கிழக்குப் பிராந்தியத்தில் அமெரிக்கா தனது ராணுவ இருப்பை அதிகரித்து வந்த காலகட்டத்தில் இந்த அறிக்கை வெளியானது.
அந்த அறிக்கையில், அமெரிக்க, இஸ்ரேலிய ராணுவ தளங்கள் மீது தாக்குதல்களை நடத்துமாறு அந்த அமைப்பு அறைகூவல் விடுத்திருந்தது. சில ஜிஹாதி போட்டி குழுக்கள் இதை இரானுக்கு அளிக்கப்பட்ட மறைமுக ஆதரவாகவே கருதின.
அல்-கொய்தா தற்போது மௌனம் காப்பதற்குத் தெளிவான காரணங்கள் இருக்கக்கூடும். அந்த அமைப்பு தற்போது ஒரு கடினமான, மிகவும் நுட்பமான சூழலில் சிக்கியுள்ளது.
அந்த அமைப்பின் தலைவர் சைஃப் அல்-அடெல், தனது நெருங்கிய கூட்டாளிகள் சிலருடன் இணைந்து இரானில் வசித்து வருவதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த மோதல் குறித்து வெளிப்படையாகப் பேசாமல், அந்த அமைப்பு மிகுந்த முன்னெச்சரிக்கையுடன் செயல்படுவதற்கு இதுவும் ஒரு காரணமாக இருக்கலாம்.
செப்டம்பர் 11 தாக்குதல்களுக்குப் பிறகு, அல்-கய்தாவின் பல முக்கியத் தலைவர்களும் அவர்களது குடும்பத்தினரும் ஆப்கானிஸ்தான் மற்றும் பாகிஸ்தானை விட்டு வெளியேறி இரானுக்கு சென்றனர்.
இன்றும்கூட, அமெரிக்காவின் ஃபெடரல் புலனாய்வுப் பணியகத்தின் (எஃப்.பி.ஐ) "மிகவும் தேடப்படும் பயங்கரவாதிகள்" பட்டியலில், சைஃப் அல்-அடெல் "இரானில் இருக்கிறார்" என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
ஒருபுறம், அல்-கய்தா இரானை அதிருப்தி அடையச் செய்ய விரும்பவில்லை. இதன் காரணமாக, ஷியா பெரும்பான்மை மக்களைக் கொண்ட இரானை ஆதரிக்க வேண்டாமென மக்களை எச்சரிக்கும் பிற ஜிஹாதி குழுக்களுடன் அது வெளிப்படையாக இணையவில்லை.
பல கடும்போக்கு குழுக்கள், இந்த மோதலில் எந்தப் பக்கமும் சேர வேண்டாமெனவும், குறிப்பாக இரானுக்கு ஆதரவோ அனுதாபமோ காட்ட வேண்டாமெனவும் சுன்னி முஸ்லிம்களிடம் கூறியுள்ளன.

பட மூலாதாரம், Getty Images
இந்த நிலையில், அல்-கய்தா அமைதியாக இருக்கவும், பிப்ரவரி 4ஆம் தேதி செய்ததைப் போல அமெரிக்கா அல்லது இஸ்ரேலுக்கு எதிராக வலுவான அறிக்கைகளை வெளியிடுவதைத் தவிர்க்கவும் விரும்பலாம்.
ஏனெனில், இப்போது அவர்களுக்கு எதிராக வலுவாகப் பேசுவது இரானை மறைமுகமாக ஆதரிப்பதாகக் கருதப்படலாம்.
அவ்வாறு நடந்தால், அது அல்-கய்தாவின் சொந்த ஆதரவாளர்களிடையே அதன் பிம்பத்தைச் சேதப்படுத்தக்கூடும்.
கடும்போக்கு ஜிஹாதி சிந்தனையில், ஷியா பெரும்பான்மை கொண்ட இரான் பெரும்பாலும் ஒரு முக்கிய எதிரியாகவும், சுன்னி இஸ்லாத்திற்கு ஒரு கடுமையான அச்சுறுத்தலாகவும் பார்க்கப்படுகிறது.
மேலும், ஜூன் 2025இல் அமெரிக்கா, இஸ்ரேல் மற்றும் இரான் இடையே நடந்த 12 நாள் போரின்போது அல்-கய்தா அமைதியாக இருந்தது.
இருப்பினும், அதன் முக்கியப் போட்டியாளரான ஐ.எஸ் என்ற குழு, மிகவும் தீவிரமாகச் செயல்பட்டு, இரு தரப்பினரையும் கடுமையாக விமர்சித்தது.
பிப்ரவரி 4 அன்று, ஐ.எஸ் அமைப்பு, அல்-கய்தா இரானின் ஒரு கருவியாக அல்லது பகடைக்காயாக மாறி வருவதாகக் கூறுவதற்கு, அமெரிக்காவுக்கு எதிரான ஜிஹாதுக்கான அல்-கய்தாவின் அழைப்பை "ஆதாரமாக" பயன்படுத்தியது.

பட மூலாதாரம், ISALMIC STATE
தலைமைகளில் நிலவும் அமைதியின் பின்னணி
இரான் மோதல் விவகாரத்தில் அல்-கய்தா கடைபிடிக்கும் மௌனமானது, மற்றொரு பிரச்னையுடன் தொடர்புடையதாக உள்ளது. அது, அந்த அமைப்பை யார் வழிநடத்துகிறார் என்பது குறித்த விஷயத்தில் அது நீண்டகாலமாகக் கடைபிடித்து வரும் மௌனமாகும்.
ஜூலை 2022 முதல் அல்-கய்தா வெளியிடும் பொது அறிக்கைகள் எதிலும், எந்தவொரு தலைவரின் பெயரும் குறிப்பிடப்படுவதில்லை. ஆப்கானிஸ்தானின் தலைநகரான காபூலில், அந்த அமைப்பின் தலைவர் அய்மான் அல்-ஜவாஹிரியை தாங்கள் கொன்றுவிட்டதாக அமெரிக்கா அறிவித்த பின்னரே இந்த நடைமுறை தொடங்கியது.
அந்நேரத்தில், அந்த அமைப்பின் துணைத் தலைவரான எகிப்தை சேர்ந்த சைஃப் அல்-அடெல் புதிய தலைவராகப் பொறுப்பேற்றுக் கொண்டதாக ஆரம்பக்கட்ட செய்திகள் வெளியாகின.
இருப்பினும், அல்-கய்தா இதை அதிகாரபூர்வமாக ஒருபோதும் உறுதி செய்யவோ அல்லது மறுக்கவோ இல்லை. அப்படியிருந்தும், ஜிஹாதி வட்டாரங்களில், அல்-கய்தாவின் ஆதரவாளர்கள் உள்பட, பெரும்பாலானோர், அல்-ஜவாஹிரி இறந்துவிட்டதாகவும், அல்-அடெல் பொறுப்பேற்றுக் கொண்டதாகவும் நம்புகின்றனர்.
தனது கூட்டாளியாகக் கருதப்படும் தாலிபன் அமைப்பை ஓர் இக்கட்டான சூழலில் சிக்க வைக்க அல்-கய்தா விரும்பாதது இந்த மௌனத்திற்கு ஒரு காரணமாக இருக்கலாம்.
மேலும் மற்றொரு காரணமாக அமைவது, இரானில் வசிப்பதாகக் கூறப்படும் அதன் புதிய தலைவர் குறித்த கேள்விகளைத் தவிர்ப்பதே ஆகும். இரான், பல சுன்னி பயங்கரவாத குழுக்களால் எதிரி நாடாகவே கருதப்படும் ஒரு நாடாகும்.
இதற்கு முன்னரும், அல்-கய்தா அமைப்புக்கு உள்ளேயே இருக்கும் சிலர், அதன் முக்கியத் தலைவர்கள் சிலர் இரானில் தங்கி இருப்பதாகக் குறிப்பிட்டிருந்தனர்.
கடந்த 2022 முதல் அல்-கய்தாவின் போட்டி அமைப்பான ஐ.எஸ்., இரானில் சைஃப் அல்-அடெல் இருப்பதைச் சுட்டிக்காட்டி, அல்-கய்தா இரானின் கட்டுப்பாட்டில் இயங்குவதாகப் பகிரங்கமாகவே குற்றம் சாட்டி வருகிறது.
அதே வேளையில், அல்-கய்தாவின் ஆதரவாளர்கள் இதற்கு மாறுபட்ட விளக்கங்களை அளிக்க முயன்று வருகின்றனர். அந்த அமைப்பு செயல்படுவதற்கான வாய்ப்புகள் மிகவும் கட்டுப்படுத்தப்பட்டு உள்ளதாகவும், அல்-அடெல் உண்மையில் வீட்டுக் காவலில் வைக்கப்பட்டு இருக்கலாம் அல்லது இரானை விட்டு வெளியேற அவருக்கு அனுமதி மறுக்கப்பட்டு இருக்கலாம் என்றும் அவர்கள் கூறுகின்றனர்.
ஆகவே, அல்-கய்தா ஒரு மிகவும் நுட்பமான சூழலைக் கையாள்வதற்கு முயன்று வருவதாகத் தோன்றுகிறது. ஒருபுறம் இரானை எதிர்ப்போரே பெரும்பான்மையாக உள்ள தனது ஆதரவாளர்களுக்கு ஒரு செய்தியை அது அனுப்ப விரும்புகிறது. மறுபுறம், இரானுடன் மோதலைத் தவிர்க்க விரும்புகிறது.
அல்-கய்தாவுக்குள் உள்ள சிலர், தங்களுக்குள் சித்தாந்த ரீதியான வேறுபாடுகள் இருந்தாலும், நடைமுறை சார்ந்த காரணங்களுக்காக இரானுடன் வரையறுக்கப்பட்ட அளவிலான ஒத்துழைப்பைக் கொடுப்பது சில நேரங்களில் பயனுள்ளதாக அமையக்கூடும் என்றும் நம்பக்கூடும்.
'முஸ்லிம் சகோதரத்துவம்' (Muslim Brotherhood) அமைப்புடன் தொடர்புகளைக் கொண்டுள்ள ஹமாஸ் அமைப்பிடமும் இதே போன்றதொரு அணுகுமுறையே காணப்படுகிறது.

பட மூலாதாரம், FBI
இரான் மோதல் குறித்த மௌனத்தின் பின்னணி
இந்த ஆண்டு, அல்-கய்தாவின் மத்திய தலைமையிடம் இருந்து, பிப்ரவரி 4ஆம் தேதியன்று ஒரேயோர் அறிக்கை மட்டுமே வந்தது.
அந்த அறிக்கையில், மத்திய கிழக்கில் அமெரிக்காவின் அதிகரித்து வரும் ராணுவ இருப்பை எதிர்ப்பதற்காக முஸ்லிம்கள் ஒன்றிணைய வேண்டுமென அந்த அமைப்பு கேட்டுக்கொண்டது.
இதுதவிர, அமெரிக்கா, இஸ்ரேல் மற்றும் இரான் இடையிலான போர் குறித்து அதன் பிராந்திய கிளைகளும் எந்த நேரடி பதிலையும் அளிக்கவில்லை.
சமீபத்திய ஆண்டுகளில் மத்திய தலைமை அவ்வளவாகச் செயல்படாதபோது, உலகளாவிய ஜிஹாதி செய்திகளைப் பரப்புவதில் மிகவும் தீவிரமாகச் செயல்பட்டு வந்த, ஏமனை தளமாகக் கொண்ட அதன் குழுவான 'அரேபிய தீபகற்பத்தில் அல்-கய்தா' கூட இந்தப் போர் குறித்து எதுவும் கூறவில்லை.
அதன் தெற்காசிய கிளையான 'இந்திய துணைக் கண்டத்தில் அல்-கய்தா' மட்டுமே ஒரு கருத்தைத் தெரிவித்தது.
இந்தக் கருத்து, இந்திய துணைக் கண்டத்தில் அல்-கய்தாவின் 'நவா-இ-கஸ்வத்-இ-ஹிந்த்' என்ற இதழில் மார்ச் 8ஆம் தேதியன்று வெளியான ஒரு கட்டுரையில் இடம்பெற்றிருந்தது. மேலும் அது இரான் மீது ஒரு மிதமான அனுதாபத்தைக் காட்டியது.
வழக்கமாக, இஸ்லாமிய உலகில் நடக்கும் முக்கிய நிகழ்வுகளுக்கு அல்-கய்தா கடுமையாக எதிர்வினையாற்றும்.
உதாரணமாக, அது சமீபத்திய காஸா மோதல் குறித்து உரக்கப் பேசியது. ஆனால் அதன் போட்டியாளரான ஐ.எஸ் அந்த விவகாரத்தில் அவ்வளவாகச் செயல்படவில்லை.
இருப்பினும், காஸா குறித்த அல்-கய்தாவின் சில அறிக்கைகள் ஹமாஸை ஆதரிப்பதாகக் கருதப்பட்டன. இதன் காரணமாக, அல்-கய்தாவின் நிலைப்பாடு இரானின் ஷியா தலைமையிலான "எதிர்ப்பு அச்சுடன்" தொடர்புடையது என மக்கள் நினைத்தனர்.
ஹமாஸ் தலைவர்களின் மரணங்களுக்கு இரங்கல் தெரிவித்து அல்-கய்தா அறிக்கைகளை வெளியிட்ட பிறகு, அதன் கருத்துகள் இரானால் செல்வாக்கு செலுத்தப்படுகின்றன என்ற குற்றச்சாட்டுகளை, குறிப்பாக ஐ.எஸ் அமைப்பிடம் இருந்து, எதிர்கொண்டது.
இந்த விவகாரம் எவ்வளவு உணர்திறன் வாய்ந்தது என்பதைப் புரிந்துகொண்டு, அல்-கய்தா பெரும்பாலும் ஹமாஸை வெளிப்படையாகப் புகழ்வதைத் தவிர்த்தது. அதற்குப் பதிலாக, அது பெரும்பாலும் "முஜாஹிதீன்" என்று அழைக்கப்படும் பாலத்தீனிய போராளிகள் அல்லது ஹமாஸின் ராணுவ பிரிவான இஸ் அத்-தின் அல்-கஸ்ஸாம் படைப் பிரிவுகள் பற்றிப் பேசுவதில் கவனம் செலுத்தியது.
இரானுக்கு நெருக்கமானதாகக் கருதப்படும் ஹமாஸின் அரசியல் தலைமையுடன் ஒப்பிடுகையில், இந்த ராணுவ பிரிவு ஜிஹாதி குழுக்களிடையே குறைவான அளவே சர்ச்சைகளைக் கொண்டிருப்பதாகக் கருதப்படுகிறது.
கடந்த 2025 ஜூன் மாதம், அமெரிக்கா, இஸ்ரேல் மற்றும் இரான் இடையே நடந்த 12 நாள் போரின்போதும், அல்-கய்தாவும் அதனுடன் தொடர்புடைய குழுக்களும் மௌனம் காத்தன. ஆனால் இந்த முறை, அவர்களின் மௌனம் இன்னும் அதிக கவனத்தை ஈர்க்கிறது.
ஏனெனில், தற்போதைய மோதல் மிகப் பெரியதாகவும், இஸ்லாமிய உலகுக்குள் நடக்கும் விவாதங்களில் வலுவான தாக்கத்தை ஏற்படுத்துவதாகவும் உள்ளது.
பெரும்பாலான கடும்போக்கு குழுக்கள், இரானை ஆதரிப்பதை அனுமதிப்பதில்லை என்று கூறுகின்றன. ஏனெனில், இரான் சுன்னி முஸ்லிம்களை ஒடுக்குவதாக அவை நம்புகின்றன.
அதேவேளையில், இரானை ஆதரிப்பது குறித்துப் பேசும் சில இஸ்லாமிய குழுக்களும் உள்ளன. ஆனால் அவற்றின் எண்ணிக்கை மிகக் குறைவாகவே உள்ளது.

பட மூலாதாரம், IS SUPPORTERS
போருக்கு முன்னதாக அல்-கொய்தா விடுத்த செய்தியின் விளைவு
அமெரிக்காவின் ராணுவ தயாரிப்புகளுக்கு மத்தியில், அல்-கய்தாவின் பிப்ரவரி 4 அறிக்கை, அப்பகுதியில் உள்ள அமெரிக்க, இஸ்ரேலிய ராணுவ தளங்கள் மீதும், கடற்படை கப்பல்கள் மீதும் தாக்குதல்களை நடத்துமாறு முஸ்லிம்களை கேட்டுக்கொண்டது.
இந்த வேண்டுகோளில், அது அரபு நாடுகளின் மக்களையும் அரசுகளையும் குறிப்பிட்டிருந்தது. அமெரிக்காவின் இருப்பு மற்றும் செல்வாக்கிற்கு எதிராக அவர்கள் கடுமையான நடவடிக்கையை எடுக்காவிட்டால், ஜனவரியில் அமெரிக்காவின் தலையீட்டால் நிக்கோலஸ் மதுரோவுக்கு ஏற்பட்டதைப் போன்ற சூழ்நிலையை அவர்கள் சந்திக்க நேரிடும் என்றும் எச்சரித்தது.
இருப்பினும், இந்த அறிக்கை இணையத்தில் உள்ள அல்-கய்தா ஆதரவாளர்களிடம் இருந்து வலுவான வரவேற்பைப் பெறவில்லை. இது அந்த அமைப்பின் உயர்மட்டத் தலைமையிடம் இருந்து வந்த ஒரு முக்கியமான செய்தியாக இருந்தபோதிலும், இது தீவிர இஸ்லாமிய குழுக்கள் மத்தியில் பரவலாகப் பகிரப்படவோ விவாதிக்கப்படவோ இல்லை.
இதுகுறித்துப் பலரும் சங்கடமாக உணர்ந்தனர் என்பதையே இது காட்டுகிறது. அமெரிக்கா, இரான் இடையே ஏற்கெனவே பதற்றம் அதிகமாக இருந்ததால், இந்த நேரம் சரியானதல்ல என்று சில ஆதரவாளர்கள் கருதினர். அந்த நேரத்தில் சுன்னி குழுக்கள் எடுக்கும் எந்தவொரு நடவடிக்கையும் இரானுக்கு உதவியாக முடிந்துவிடும் என்று அவர்கள் உணர்ந்தனர்.
அல்கய்தாவின் போட்டியாளரான ஐ.எஸ்-இன் ஆதரவாளர்கள், இந்த அறிக்கை இரானுக்கான மறைமுக ஆதரவு என்று உடனடியாகக் கூறினர். ஏனெனில், அமெரிக்காவின் ராணுவத் திட்டங்களின் முக்கிய இலக்குகளில் இரானும் ஒன்று.
அவர்கள், அல்-கய்தா இரானின் "எதிர்ப்பு அச்சு" என்று தாங்கள் அழைத்த ஒன்றின் ஒரு பகுதியாக மாறிவிட்டதாகக் குற்றம் சாட்டினர்.
இரானுடனான போர் தொடங்குவதற்கு இரண்டு நாட்களுக்கு முன், பிப்ரவரி 26ஆம் தேதி, இந்தக் கருத்து மேலும் வலுப்பெற்றது. அன்று, ஐ.எஸ்., அல்-கய்தாவின் பிப்ரவரி 4 அறிக்கையைக் கேலி செய்யும் ஒரு கட்டுரையை வெளியிட்டதுடன், அந்த அமைப்பு இரானை ஆதரிப்பதற்கான "ஆதாரம்" அது என்றும் கூறியது.
மேலும், அல்-கய்தாவின் கருத்துகளும் செய்திகளும் இப்போது இரானின் ராணுவப் படையான இஸ்லாமிய புரட்சிகர காவல் படையின் செல்வாக்கிற்கு உட்பட்டிருப்பதாக ஐ.எஸ் அமைப்பு கூறியது.
சைஃப் அல்-அடெல் இரானில் வசிப்பதாக நம்பப்படுவதால், அல்-கய்தா மெதுவாக இரானின் "ஷியா செல்வாக்கின்" கீழ் வந்துள்ளதாகவும் அவர்கள் கூறினர்.

பட மூலாதாரம், Getty Images
அல் கய்தா ஆதரவு அமைப்புகளின் எழுச்சி
இந்தப் புதிய குழுவின் தோற்றம், குறிப்பாக அதன் காலத்தின் காரணமாக முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படுகிறது. இரான் சம்பந்தப்பட்ட தற்போதைய மோதலின்போது இது தோன்றியுள்ளது. இருப்பினும், இந்தக் குழு உண்மையானதா அல்லது இது யாருடன் துல்லியமாகத் தொடர்புடையது என்பது இன்னும் தெளிவாகத் தெரியவில்லை.
ஐ.எஸ். அமைப்பின் ஆதரவாளர்கள், இது அல்-கய்தா மெதுவாக இரானை நெருங்கி வருவதற்கான அறிகுறியாக இருக்கலாம் என்கின்றனர்.
மார்ச் 1ஆம் தேதி, போர் தொடங்கிய இரண்டு நாட்களுக்குப் பிறகு, அஜ்னாத் பைத் அல்-மக்திஸ் ('ஜெருசலேமின் வீரர்கள்' என்பதே இதன் பொருள்) என்று தங்களை அழைத்துக்கொள்ளும் ஒரு புதிய மற்றும் மர்மமான ஜிஹாதி குழு தோன்றியது.
இந்தக் குழு சிரியாவில் செயல்படுவதாக நம்பப்படுகிறது. மேலும் இது அல்-கய்தாவை ஆதரிப்பதாக அல்லது அதற்கு விசுவாசமாக இருப்பதாகக் கூறியுள்ளது.
அல்-கய்தாவின் "படை திரட்டலுக்கான அழைப்பு"க்குப் பிறகு தாங்கள் உருவாக்கப்பட்டதாக இந்தக் குழு கூறியது. இது பெரும்பாலும் பிப்ரவரி 4 அறிக்கையைக் குறிக்கிறது.
பின்னர், சிரியாவிலும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளிலும் அமெரிக்க, இஸ்ரேலிய படைகள் மீது நடத்தப்பட்ட நான்கு சிறிய தாக்குதல்களுக்கு இந்தப் புதிய குழு பொறுப்பேற்றது.
ஆனால், இதுவரை அஜ்னத் பைத் அல்-மக்திஸ் முன்வைத்த கோரிக்கைகளையோ அல்லது விசுவாச அறிக்கைகளையோ அல்-கய்தா அதிகாரபூர்வமாக ஏற்கவோ ஆதரிக்கவோ இல்லை.
ஐ.எஸ் அமைப்பின் ஆதரவாளர்கள் இந்தப் புதிய குழுவை நிராகரித்து, அது இரானின் ஆதரவுடன் செயல்படக்கூடும் என்று கூறினர்.
அவர்களில் சிலர், இந்தக் குழு உண்மையிலேயே அல்-கய்தாவை ஆதரித்தால், அல்-கய்தா இப்போது இரானின் விருப்பங்களுக்கு ஏற்ப செயல்படுகிறது என்ற தங்கள் நம்பிக்கையை அது ஆதரிப்பதாகக் கூறினர்.
சிரியாவில் செயல்படும் உலி அல்-பாஸ் மற்றும் அஜ்னத் அல்-கரார் போன்ற இரான் ஆதரவு ஷியா குழுக்களும் அதே தாக்குதல்களில் சிலவற்றுக்குப் பொறுப்பேற்றபோது இந்த சந்தேகங்கள் மேலும் அதிகரித்தன.
இது குழப்பத்தை ஏற்படுத்தியது. ஒன்று வெவ்வேறு குழுக்கள் ஒரே தாக்குதல்களுக்குப் பொறுப்பேற்கின்றன அல்லது அவற்றுக்கிடையே ஒருவித ஒருங்கிணைப்பு அல்லது தொடர்பு இருக்கலாம் என்பதை இது உணர்த்துகிறது.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு
































