ஐபிஎல் 'எல் கிளாசிகோ'- சாம்சன் மீண்டும் சதம் - 207 ரன்கள் எடுத்தது சென்னை சூப்பர் கிங்ஸ்

வாசிக்கும் நேரம்: 3 நிமிடங்கள்

ஐபிஎல் 2026 சீசனின் 33வது போட்டியில் இன்று (ஏப்ரல் 23) மும்பை இந்தியன்ஸ் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகள் மோதுகின்றன.

ஐபிஎல் தொடரின் எல் கிளாசிகோ எனப்படும் இந்தப் போட்டி மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெறுகிறது.

5 முறை ஐபிஎல் சாம்பியன்களாக இந்த இரு அணிகளும், இந்த சீசனில் இதற்கு முன் 6 போட்டிகளில் விளையாடி இரண்டில் மட்டுமே வெற்றி பெற்றிருக்கின்றன. அதனால் இந்தப் போட்டியில் வெற்றி பெறுவது இரு அணிகளுக்குமே முக்கியமானதாக இருக்கிறது.

இந்தப் போட்டியில் டாஸ் வென்ற மும்பை இந்தியன்ஸ் பந்துவீச்சை தேர்வு செய்தது.

முதலில் பேட்டிங் செய்த சென்னை சூப்பர் கிங்ஸ் 20 ஓவர்களில் 6 விக்கெட்டுகள் இழப்புக்கு 207 ரன்கள் எடுத்தது. சஞ்சு சாம்சன் ஆட்டமிழக்காமல் 101 ரன்கள் எடுத்தார்.

சிஎஸ்கே அதிரடி தொடக்கம்

சூப்பர் கிங்ஸ் அணிக்கு இந்தப் போட்டியில் நல்ல தொடக்கம் கிடைத்தது. ஹர்திக் பாண்டியா வீசிய 2வது ஓவரில் 19 ரன்கள் கிடைத்தது. சிஎஸ்கே கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட் அந்த ஓவரில் தலா 1 பவுண்டரியும், 1 சிக்ஸரும் அடித்தார்.

இந்தத் தொடரில் பெரிய ஸ்கோர் எடுக்க ருதுராஜ் கெய்க்வாட் தவறிவரும் நிலையில், இந்த தொடக்கம் அதை மாற்றும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், மூன்றாவது ஓவரில் அல்லா கசன்ஃபர் வீசிய பந்தை தூக்கி அடித்து திலக் வர்மாவிடம் கேட்ச் ஆனார் கெய்க்வாட். அவர் 14 பந்துகளில் 22 ரன்கள் எடுத்தார்.

கெய்க்வாட் அவுட் ஆனாலும், சாம்சன் தன் அதிரடியைக் குறைக்கவில்லை. ஹர்திக் வீசிய ஆட்டத்தின் நான்காவது ஓவரிலும் 19 ரன்கள் வந்தது. அதன்பிறகு பும்ரா வீசிய 5வது ஓவரிலும் 13 ரன்கள் எடுக்கப்பட்டன. அதனால் 5 ஓவர்களிலேயே 64 ரன்கள் எடுத்துவிட்டது சிஎஸ்கே.

இந்நிலையில், மீண்டும் ஒரு ஸ்பின்னரை எடுத்துவந்து விக்கெட்டை வீழ்த்தியது மும்பை இந்தியன்ஸ். ஆறாவது ஓவரில் சர்ஃபராஸ் கான் விக்கெட்டை வீழ்த்தினார் சான்ட்னர். பவர்பிளேவை 73/2 என முடித்தது சிஎஸ்கே.

மும்பை கம்பேக்கும், சாம்சன் சதமும்

அந்த பவர்பிளேவுக்குப் பிறகு மெல்ல கம்பேக் கொடுக்கத் தொடங்கியது மும்பை இந்தியன்ஸ். மிடில் ஓவர்களில் வழக்கம்போல் விக்கெட்டுகளை இழந்து ரன்ரேட் சரிவதையும் கண்டது சூப்பர் கிங்ஸ். ஷிவம் துபே 5 ரன்களில் கசன்ஃபர் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார்.

அடுத்து களமிறங்கிய டெவால் பிரெவிஸ் அதிரடியாகவே தன் இன்னிங்ஸை தொடங்கினார். சான்ட்னர் ஓவரில் இரண்டு சிக்ஸர்கள் விளாசிய அவர், அஷ்வனி குமார் வீசிய பவுன்சர்களையும் பவுண்டரிகளுக்கு அனுப்ப முயற்சி செய்தார். ஒரு பவுன்சரில் கேட்ச் வாய்ப்பு சென்றது. அதை நமன் தீர் பயன்படுத்திக்கொள்ளத் தவறினார். அடுத்த பவுன்சரை பவுண்டரியாக்கினார் பிரெவிஸ். ஆனால், அந்த ஓவரின் கடைசி பந்தில் 'ஸ்லோயர் பவுன்சர்' வீசி பிரெவிஸை வெளியேற்றினார் அஷ்வனி. பிரெவிஸ் 11 பந்துகளில் 21 ரன்கள் எடுத்தார்.

இதற்கு மத்தியில் 26 பந்துகளில் தன் அரைசதத்தை நிறைவு செய்தார் சாம்சன். வேகப்பந்துவீச்சாளர்களுக்கு எதிராக அதிரடி காட்டிய சாம்சன், மும்பை ஸ்பின்னர்கள் சற்று ஆதிக்கம் செலுத்தியம் சற்று நிதானம் காட்டினார். கடைசி வரை தான் ஆடுவது முக்கியம் என்பதை உணர்ந்து அவர் ஒரு முணையில் நிலைத்து நின்றார்.

சூப்பர் கிங்ஸின் மிடில் ஆர்டர் சற்று அனுபவம் குறைவாக இருந்த்தால் சாம்சன் நிலைத்து நிற்பது முக்கியமானதாக இருந்தது. அதை உணர்ந்து ஆடியவர், வேகப்பந்துவீச்சாளர்கள் மீண்டும் பந்துவீச வந்ததும் அதிரடியைக் கையில் எடுத்தார். கடைசி கட்டத்தில் கிரிஷ் பகத் வீசிய 2 ஓவர்களில் தலா 3 பவுண்டரிகளும், 3 சிக்ஸர்களும் விளாசிய அவர், கடைசிப் பந்தில் சதத்தை நிறைவு செய்தார். 54 பந்துகளில் ஆட்டமிழக்காமல் 101 ரன்கள் எடுத்தார் அவர்.

ஐபிஎல் தொடரில் சாம்சன் அடிக்கும் இரண்டாவது சதம் இது. இந்த சீசனில் விளையாடிய 7 போட்டிகளிலேயே 2 சதங்கள் அடித்துவிட்டார் அவர்.

டாஸில் நடந்தது என்ன?

டாஸ் வென்ற மும்பை இந்தியன்ஸ் கேப்டன் ஹர்திக் பாண்டியா, "கடந்த போட்டியில் பல விஷயங்கள் சரியாக அமைந்ததாக நான் நினைக்கிறேன். ஆட்டத்தில் தீவிரம் இருந்தது. ஒவ்வொரு வீரரும் பங்களிப்பை வழங்கும் இது போன்ற ஒரு போட்டி எங்களுக்குத் தேவைப்பட்டது என்று கருதுகிறேன். ஆம், அது ஒரு முழுமையான ஆட்டமாக அமைந்தது. என்ன நடந்தாலும் ஆட்டத்தின் தீவிரத்தைக் குறைப்பதில்லை என்பது எங்களின் திட்டமிட்ட முயற்சியாகும். நாங்கள் போட்டியை ரசித்து விளையாடுவதை உறுதி செய்ய விரும்பினேன். நிலைமை சற்று தீவிரமாகிக் கொண்டிருந்ததாக உணர்ந்தேன். விளையாட்டை ரசித்து விளையாடும்போதுதான் கிரிக்கெட் சிறப்பாக அமையும். எனவே நாங்கள் மகிழ்ச்சியாக விளையாட விரும்பினோம். அனைத்தும் எங்களுக்குச் சாதகமாக அமைந்தன, அது ஒரு நல்ல ஆட்டமாக இருந்தது." என்றார்.

இந்தப் போட்டி நடக்கும் ஆடுகளம் பற்றிப் பேசிய அவர், "இந்த ஆடுகளம் பச்சையாகத் தெரிகிறது, கே.கே.ஆர் அணிக்கு எதிரான போட்டியிலும் இப்படித்தான் இருந்தது, ஆனால் அது விளையாடுவதற்கு மிக நன்றாக இருந்தது. இது ஒரு நல்ல ஆடுகளமாக இருக்கும். எதிரணி எவ்வளவு ரன்கள் எடுக்கிறார்கள் என்பதைப் பார்த்து அதைத் துரத்த விரும்புகிறோம். அதே அணிதான் இன்றும் விளையாடுகிறது." என்று கூறினார்.

சென்னை சூப்பர் கிங்ஸ் கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட், "நாங்களும் முதலில் பந்துவீசவே நினைத்தோம், ஆனால் அது ஒரு 50-50 முடிவாகவே இருந்தது. ஆடுகளம் நன்றாகத் தெரிகிறது. வான்கடே மைதானத்தைப் பொறுத்தவரை, நீங்கள் முதலில் பேட்டிங் செய்தாலும் சரி அல்லது பந்துவீசினாலும் சரி, சிறப்பாக விளையாடுவது அவசியம். எனவே, முதலில் பேட்டிங் செய்தாலும் ஒரு சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்துவதே எங்கள் நோக்கம்.

நாங்கள் மிக நன்றாகவே விளையாடி வருகிறோம். ஒரு சில முக்கியமான தருணங்களை மட்டும் எங்களால் சாதகமாகப் பயன்படுத்திக் கொள்ள முடியவில்லை. ஆனால் கடந்த போட்டியில் பந்துவீச்சின் போது ஆட்டத்தை நன்றாக மீட்டெடுத்தோம் என்று நினைக்கிறேன். பேட்டிங்கிலும் கூட நாங்கள் சிறப்பான தொடக்கத்தையே தந்தோம். ஆனால் நான் சொன்னது போல, ஒரு சில தருணங்களைச் சரியாகப் பயன்படுத்தி வெற்றியைப் பெறுவதை நாங்கள் உறுதி செய்ய வேண்டும். அனைவரும் நம்பிக்கையுடனும் விளையாடத் தயார் நிலையிலும் உள்ளனர்." என்று கூறினார்.

பிளேயிங் லெவனில் யார்?

மும்பை இந்தியன்ஸ்

இந்தப் போட்டிக்கான மும்பை இந்தியன்ஸ் அணியில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை என்று கேப்டன் ஹர்திக் பாண்டியா டாஸில் தெரிவித்தார்.

பிளேயிங் லெவன்: குவின்டன் டி காக் (விக்கெட் கீப்பர்), நமன் திர், சூர்யகுமார் யாதவ், திலக் வர்மா, ஹர்திக் பாண்டியா (கேப்டன்), ஷெர்ஃபேன் ரதர்ஃபோர்ட், மிட்செல் சான்ட்னர், அஷ்வனி குமார், ஜஸ்ப்ரித் பும்ரா, கிரிஷ் பகத், அல்லா கசன்ஃபர்.

சப்ஸ்டிட்யூட் வீரர்கள்: வில் ஜேக்ஸ், ராஜ் பவா, ஷார்துல் தாக்கூர், டேனிஷ் மலேவார், மயங்க் ராவத்

சென்னை சூப்பர் கிங்ஸ்

கடந்த போட்டியில் காயமடைந்த ஆயுஷ் மாத்ரே இந்தத் தொடரிலிருந்தே விலகியிருக்கிறார். அந்த ஆட்டத்தில் விளையாடியிருந்த மேத்யூ ஷார்ட்டுக்குப் பதிலாக கார்த்திக் ஷர்மா சிஎஸ்கே பிளேயிங் லெவனில் சேர்க்கபப்ட்டிருக்கிறார்.

பிளேயிங் லெவன்: ருதுராஜ் கெய்க்வாட் (கேப்டன்), சஞ்சு சாம்சன் (விக்கெட் கீப்பர்), டெவால் பிரெவிஸ், ஷிவம் துபே, சர்ஃபராஸ் கான், கார்த்திக் ஷர்மா ஜேமி ஓவர்டன், அன்ஷுல் கம்போஜ், குர்ஜப்னீத் சிங், நூர் அஹமது, முகேஷ் சவுத்ரி

சப்ஸ்டிட்யூட் வீரர்கள்: அகீல் ஹொசைன், பிரஷாந்த் வீர், மேத்யூ ஷார்ட், மேட் ஹென்றி

நேருக்கு நேர்

கிரிக்பஸ் தரவுகளின்படி, 2025 சீசன் வரையில் இவ்விரு அணிகளும் மோதிய போட்டிகளில் மும்பை இந்தியன்ஸ் 21 வெற்றிகளும், சென்னை சூப்பர் கிங்ஸ் 18 வெற்றிகளும் பெற்றிருந்தன.

அதே காலகட்டத்தில் வான்கடேவில் நடந்த போட்டிகளில் மும்பை 8 வெற்றிகளும், சென்னை 5 வெற்றிகளும் பதிவு செய்தன.