You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
தொடர்ந்து 4வது தோல்வியை சந்தித்தது லக்னௌ - ராஜஸ்தான் வென்றது எப்படி?
ஐபிஎல் 2026 தொடரின் 32வது போட்டியில் லக்னௌ சூப்பர் ஜெயின்ட்ஸ் அணி, ராஜஸ்தான் ராயல்ஸை இன்று (ஏப்ரல் 22) எதிர்கொண்டது. இந்தப் போட்டியில் 40 ரன்கள் வித்தியாசத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி வெற்றி பெற்றது.
லக்னௌ அணி தங்களின் முந்தைய 3 போட்டிகளிலும், ராஜஸ்தான் தங்களின் முந்தைய 2 போட்டிகளிலும் தோற்றிருந்ததால் இரு அணிகளுக்குமே இந்தப் போட்டியில் வெற்றி பெறுவது முக்கியமாக இருந்தது. இந்நிலையில், ராயல்ஸ் அணி வெற்றி பெற்று புள்ளிப் பட்டியலில் இரண்டாவது இடத்துக்கு முன்னேறியது.
இந்தப் போட்டியில் எல்எஸ்ஜி அணி டாஸ் வென்று பந்துவீச்சை தேர்வு செய்தது. அந்த அணியில் மயாங்க் யாதவ் மற்றும் திக்வேஷ் ராத்தி பிளேயிங் லெவனில் இடம்பெற்றனர். இந்த சீசனில் மயாங்க் யாதவ் விளையாடும் முதல் போட்டி இது. ராஜஸ்தான் ராயல்ஸ் அணியில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை.
முதலில் பேட்டிங் செய்த ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 20 ஓவர்களில் 6 விக்கெட்டுகள் இழப்புக்கு 159 ரன்கள் எடுத்தது. அந்த அணிக்கு அதிகபட்சமாக ரவீந்திர ஜடேஜா ஆட்டமிழக்காமல் 43 ரன்கள் எடுத்தார். லக்னௌ பந்துவீச்சாளர்களில் அதிகபட்சமாக மொஹம்மது ஷமி, பிரின்ஸ் யாதவ், மோசின் கான் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகள் வீழ்த்தினார்கள்.
அடுத்து விளையாடிய லக்னௌ அணி 119 ரன்களில் ஆல் அவுட் ஆனது. ஓப்பனர் மிட்செல் மார்ஷ் 55 ரன்கள் அடித்தார். ராஜஸ்தான் ராயல்ஸ் பௌலர்களில் அதிகபட்சமாக ஜோஃப்ரா ஆர்ச்சர் 3 விக்கெட்டுகள் கைப்பற்றினார்.
மிரட்டிய லக்னௌ வேகப்பந்துவீச்சாளர்கள்
ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் அதிரடி ஓப்பனர்கள் ஜெய்ஸ்வால், சூர்யவன்ஷி ஆகியோரால் இந்தப் போட்டியில் பெரிய தொடக்கத்தைக் கொடுக்க முடியவில்லை. ஓரளவு நல்லபடியாக இன்னிங்ஸ் தொடங்கியிருக்க, மூன்றாவது ஓவரில் அந்த பார்ட்னர்ஷிப்பை உடைத்தார் மொஹம்மது ஷமி.
அடுத்தடுத்து பவுண்டரிகள் அடித்திருந்த ஜெய்ஸ்வால், ஷமி வீசிய பவுன்சரையும் பவுண்டரியாக்க முயற்சித்து கீப்பரிடம் கேட்சாகி ஆட்டமிழந்தார். அவர் 22 ரன்கள் எடுத்தார். ஜெய்ஸ்வால் ஆட்டமிழந்த அடுத்த பந்திலேயே ஜுரெல் விக்கெட்டையும் கைப்பற்றினார் ஷமி. அவர் வீசிய அவுட் ஸ்விங் பந்தால் ஜுரெல் போல்ட் ஆனார்.
இரண்டு சீனியர் வீரர்கள் அடுத்தடுத்து ஆட்டமிழந்ததால், அந்த நெருக்கடியை உணர்ந்தார் இளம் சூர்யவன்ஷி. மோசின் கான் வீசிய நான்காவது ஓவரின் முதல் ஐந்து பந்துகளையுமே டாட் பால்களாக ஆடினார். ஆறாவது பந்தை தூக்கி அடித்து திக்வேஷ் ராத்தியின் அட்டகாசமான கேட்சால் அவர் வெளியேறினார். அதனால் 4 ஓவர்கள் முடிவில் 32/3 என்ற நிலைக்குச் சென்றது ராயல்ஸ்.
அதன்பிறகு வந்த ராஜஸ்தான் ராயல்ஸ் பேட்டர்கள் விக்கெட் வீழ்ச்சியைத் தடுக்க நிதானமாக ஆடினார்கள். அதனால் அந்த அணியின் ரன்ரேட் மெல்ல சரிந்துகொண்டே இருந்தது. ரியான் பராக் (20 ரன்கள்), ஷிம்ரன் ஹிட்மெயர் (22 ரன்கள்), டானவன் ஃபெரீரா (20 ரன்கள்) என ஓரளவு நிலைத்து நின்று ஆடிய வீரர்கள், அதை பெரிய ஸ்கோராக மாற்றத் தவறினார்கள். அதனால் ராயல்ஸ் அணி தங்களின் இம்பேக்ட் வீரரை முதல் இன்னிங்ஸிலேயே பயன்படுத்தவேண்டிய நிலை ஏற்பட்டது.
இம்பேக்ட் வீரராக வந்த ஷுபம் துபே, ரவீந்திர ஜடேஜாவுடன் இணைந்து 7வது விக்கெட்டுக்கு 49 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தார். அதனால் ராயல்ஸ் அணி 159 ரன்கள் எடுத்தது. ஜடேஜா 43 ரன்களுடனும், துபே 19 ரன்களுடனும் ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தனர்.
சிறப்பாகப் பந்துவீசிய மொஹம்மது ஷமி, பிரின்ஸ் யாதவ், மோசின் கான் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகள் வீழ்த்தினார்கள். இந்த சீசனில் தன்னுடைய முதல் போட்டியில் விளையாடிய மயாங்க் யாதவ் 4 ஓவர்களில் 56 ரன்கள் விட்டுக்கொடுத்தார். அவர் விக்கெட் ஏதும் வீழ்த்தவில்லை.
ராஜஸ்தான் ராயல்ஸ் வெற்றி
ராஜஸ்தான் ராயல்ஸுக்கு தொடக்கம் எப்படி இருந்ததோ, அப்படித்தான் எல்எஸ்ஜி அணிக்கும் தொடக்கம் அமைந்தது. முதல் ஓவரில் படோனி, அடுத்த ஓவரில் பன்ட், அதற்கடுத்த ஓவரில் மார்க்ரம் என முதல் 3 ஓவர்களில் 3 விக்கெட்டுகளை இழந்தது லக்னௌ. அவர்கள் மூவருமே டக் அவுட் ஆனார்கள்.
அந்த சரிவில் இருந்து லக்னௌ சூப்பர் ஜெயின்ட்ஸ் அணியால் மீண்டு வரவே முடியவில்லை. உள்ளே வரும் பேட்டர்கள் சில பந்துகள் ஆடுவது, பின்னர் அவுட்டாவது என்றே இருந்தார்கள். ஆனால், ஓப்பனர் மிட்செல் மார்ஷ் மட்டும் ஒருபக்கம் தனியாகப் போராடி 55 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். இந்த சீசனில் அவர் அடிக்கும் முதல் அரைசதம் இது.
ராஜஸ்தான் பௌலர்கள் தொடர்ந்து சிறப்பான லைன் மற்றும் லென்த்தில் பந்துவீசினார்கள். முதல் இன்னிங்ஸிலேயே இம்பேக்ட் வீரராக ஷுபம் துபேவைப் பயன்படுத்தியதால் அவர்களால் ஒரு கூடுதல் பௌலரை எடுத்துவர முடியவில்லை. இருந்தாலும் பந்துவீசிய 5 பேருமே சிறப்பாகப் பந்துவீசி லக்னௌ பௌலர்களுக்கு தொடர்ந்து நெருக்கடியை ஏற்படுத்தினார்கள்.
மிட்செல் மார்ஷ் தவிர்த்து வேறு எந்த பேட்டருமே தாக்குப்பிடிக்காததால் எல்எஸ்ஜி அணி 119 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. அதனால் ராயல்ஸ் 40 ரன்களில் வெற்றி பெற்றது. அந்த அணி பௌலர்களில் ஆர்ச்சர் 3 விக்கெட்டுகள் கைப்பற்றினார்.
இந்த வெற்றியின் மூலம் 10 புள்ளிகளுடன் புள்ளிப் பட்டியலில் இரண்டாவது இடத்துக்கு ராஜஸ்தான் ராயல்ஸ் முன்னேறியது. லக்னௌ சூப்பர் ஜெயின்ட்ஸ் 9வது இடத்தில் இருக்கிறது.
"தோற்றது எங்கே?"
லக்னௌ அணி எங்கே தோற்றது என்பது பற்றி போட்டி முடிந்ததும் பேசிய ரிஷப் பன்ட், "என்னிடம் இதற்கான பதில்கள் இல்லை. எங்களின் பேட்டிங் எங்களைக் கைவிட்டுவிட்டது. ஒரு அணியாகவும், ஒரு குழுவாகவும் நாங்கள் ஏமாற்றமடைந்துள்ளோம். இதற்கான பதில்களை நாம் வெளியிலிருந்து தேடாமல், நமக்குள்ளேயே தேட வேண்டும். பேட்டிங் செய்யும்போது நாங்கள் இன்னும் கொஞ்சம் நேரம் எடுத்துக்கொண்டிருக்கலாம். இதற்குக் காரணங்கள் எதுவும் சொல்ல முடியாது. என்னையும் சேர்த்துச் சொல்கிறேன், ஆட்டத்தை கடைசி வரை எடுத்துச் சென்றிருக்க வேண்டும். ஒரு பேட்டிங் குழுவாக, இந்தத் தோல்விக்கு நாங்கள் பொறுப்பேற்க வேண்டும்." என்று கூறினார்.
தங்கள் அணியின் பந்துவீச்சு சிறப்பாகச் செயல்பட்டது குறித்துப் பேசிய அவர், "நாங்கள் நேர்மறையான விஷயங்களைக் கவனிக்க வேண்டும். எப்போதுமே தலை நிமிர்ந்து நின்று, நமக்குள்ளேயே தீர்வுகளைத் தேட வேண்டும். இந்தத் தொடரின் போக்கையே மாற்றக்கூடிய திறமை எங்களிடம் உள்ளது." என்றார்.