You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
சொந்த மைதானத்தில் வெற்றிகரமாக வலம் வரும் ஆர்சிபி - 2013 முதலான வரலாற்றை மாற்றியது எப்படி?
- எழுதியவர், பிரதீப் கிருஷ்ணா
- பதவி, பிபிசி தமிழ்
- வாசிக்கும் நேரம்: 5 நிமிடங்கள்
குஜராத் டைட்டன்ஸ் அணிக்கெதிராக நேற்று (ஏப்ரல் 24) நடந்த ஐபிஎல் போட்டியில் 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு. இந்த சீசனில் தங்களுடைய ஐந்தாவது வெற்றியைப் பதிவு செய்த ஆர்சிபி புள்ளிப் பட்டியலில் இரண்டாவது இடத்துக்கு முன்னேறியது.
முதலில் பேட்டிங் செய்த குஜராத் டைட்டன்ஸ் அணி 3 விக்கெட்டுகள் இழப்புக்கு 205 ரன்கள் எடுத்தது. தமிழ்நாட்டைச் சேர்ந்த பேட்டர் சாய் சுதர்ஷன் சதமடித்தார். அடுத்து விளையாடிய ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு 7 பந்துகள் மீதமிருக்கையில் இலக்கை எட்டியது. விராட் கோலி 81 ரன்கள் எடுத்து ஆர்சிபி அணியின் வெற்றிக்கு உதவினார். இந்த வெற்றியின் மூலம் புள்ளிப் பட்டியலில் இரண்டாவது இடத்துக்கு முன்னேறியது அந்த அணி.
இந்த சீசன் சின்னசாமி மைதானத்தில் ஆர்சிபி ஆடிய கடைசி ஹோம் லீக் போட்டி இது. அந்த அணியின் 7 ஹோம் ஆட்டங்களில் 5 சின்னசாமியிலும், 2 ராய்ப்பூரிலும் நடக்குமாறு இந்த சீசன் திட்டமிடப்பட்டிருந்தது. இந்நிலையில், சின்னசாமியில் இந்த சீசனை வெற்றியோடு முடித்திருக்கிறது ஆர்சிபி. இது இந்த சீசன் அவர்கள் ஹோம் கிரவுண்டில் பெறும் நான்காவது வெற்றி.
வழக்கமாக சின்னசாமி ஸ்டேடியத்தில் வெற்றி பெறவே ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி தடுமாறும். அந்த சிறிய மைதானத்தில் எதிரணிகளைக் கட்டுப்படுத்த தடுமாறும். தாங்கள் பெரிய ஸ்கோர்கள் எடுத்தாலும், எதிரணியைக் கட்டுப்படுத்த முடியாமல் அந்த அணி பலமுறை தோற்றதைப் பார்த்திருக்கிறோம். அது இந்த சீசன் பெரும் மாற்றத்தை சந்தித்திருக்கிறது.
கடந்த ஆண்டு சாம்பியன்ஷிப் பட்டம் வென்றபோதும் கூட ஆர்சிபி அணி சின்னசாமி மைதானத்தில் தடுமாறவே செய்தது. 2025 சீசனில் அங்கு விளையாடிய 5 லீக் ஆட்டங்களில் இரண்டில் மட்டுமே வெற்றி பெற்றது. ஒரு ஆட்டம் மழையால் கைவிடப்பட்ட நிலையில், 3 போட்டிகளில் தோல்வியை சந்தித்தது ஆர்சிபி. 7 'அவே' லீக் ஆட்டங்களையும் வென்று சாதனை படைத்ததே அந்த அணி பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறவும், அதன்பின் கோப்பை வெல்லவும் காரணமாக அமைந்தது.
அப்படியொரு இடத்தில் இந்த முறை எப்படி தங்கள் வரலாற்றை ஆர்சிபி மாற்றியது?
2013 முதல் தொடரும் மோசமான வரலாறு
கடைசியாக 2013ம் ஆண்டு தான் சின்னசாமி மைதானத்தில் சிறப்பான செயல்பாட்டைக் கண்டிருந்தது ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு. அந்த சீசன் அங்கு ஆடிய 8 லீக் போட்டிகளில் 7 வெற்றிகளைப் பெற்றது ஆர்சிபி. அதில் ஒரு போட்டி டை ஆகியிருந்த நிலையில், சூப்பர் ஓவரில் ஆர்சிபி 2 புள்ளிகளைப் பெற்றது. அந்த மொத்த சீசனிலுமே ஒரேயொரு ஹோம் லீக் போட்டியை மட்டுமே தோற்றது ராயல் சேலஞ்சர்ஸ்.
அதன்பிறகு நடந்த ஒவ்வொரு சீசனிலுமே தங்கள் ஹோம் கிரவுண்டான சின்னசாமி மைதானத்தில் ஆர்சிபி அணிக்கு நல்ல முடிவுகள் கிடைக்கவில்லை.
- 2014ல் 5 போட்டிகள் மட்டுமே சின்னசாமி மைதானத்தில் நடந்தன. அதில் 2 வெற்றிகளும், 3 தோல்விகளும் சந்தித்தது ஆர்சிபி.
- 2015ல் 2 வெற்றிகள், 3 தோல்விகள். 2 போட்டிகளுக்கு முடிவு எட்டப்படவில்லை.
- 2016ல் ஆடிய 7 லீக் போட்டிகளில் 4 வெற்றிகள், 3 தோல்விகள். அதன்பிறகு விளையாடிய குவாலிஃபயர் 1 மற்றும் இறுதிப் போட்டிகளிலுமே சின்னசாமி மைதானத்தில் ஆர்சிபி தோற்றது.
- 2017 சீசனில் ஆடிய 7 லீக் ஆட்டங்களில் 1 வெற்றி, 5 தோல்விகள். ஒரு போட்டி மழையால் கைவிடப்பட்டது.
- 2018ம் ஆண்டு 7 லீக் ஆட்டங்களை அங்கு ஆடிய ஆர்சிபி 4 வெற்றிகள், 3 தோல்விகள்.
- 2019ல் 3 வெற்றிகள், 3 தோல்விகள், ஒரு போட்டியில் முடிவு இல்லை.
- 2020 - 2022 ஐபிஎல் சீசன் வரை சின்னசாமி மைதானத்தில் ஐபிஎல் போட்டிகள் விளையாடப்படவில்லை.
- 2023ம் ஆண்டு அங்கு விளையாடிய 7 லீக் போட்டிகளில் மூன்றில் மட்டுமே வென்றது. 4 போட்டிகளில் தோற்றது.
- 2024 சீசனில் சின்னசாமியில் விளையாடிய 7 லீக் போட்டிகளில் 4 போட்டிகளை வென்ற ராயல் சேலஞ்சர்ஸ்.
ஆர்சிபி அணி இப்படி சின்னசாமி மைதானத்தில் தோற்றதற்கான முக்கியமான காரணம் அவர்களின் பந்துவீச்சு பலவீனமாக இருந்தது. பலமான பேட்டர்களை ஏலத்தில் வாங்கும் அந்த அணியின் பந்துவீச்சு முழுமையானதாக இருக்கவில்லை. மிட்செல் ஸ்டார்க், யுஸ்வேந்திர சஹல் போன்ற ஒருசில பௌலர்கள் மட்டுமே அந்த அணிக்காக சீராக செயல்பட்டனர். ஹர்ஷல் பட்டேல், மொஹம்மது சிராஜ் போன்ற வீரர்கள் சிறப்பாக செயல்பட்டிருந்தாலும் அதிக ரன்கள் விட்டுக்கொடுத்திருக்கிறார்கள்.
ஒவ்வொரு போட்டியிலும் 2-3 வீரர்கள் தாக்கம் ஏற்படுத்தினாலும், சிறிதான பவுண்டரி எல்லைகள் கொண்ட அந்த மைதானத்தில், மற்ற பௌலர்கள் ரன்கள் விட்டுக்கொடுத்து ஆர்சிபி பின்னடைவைக்கு வழிவகுப்பார்கள். அதனால், ஆர்சிபி தொடர்ச்சியாக ஹோம் ஆட்டங்களில் தாக்கம் ஏற்படுத்தத் தவறியது.
2025 சீசனிலும் வரலாறு மாறவில்லை
கடந்த ஆண்டு ஆர்சிபி அணி சாம்பியன் ஆனதற்கான முக்கியமான காரணம் அவர்களின் பந்துவீச்சு. புவனேஷ்வர் குமார், ஜாஷ் ஹேசில்வுட், சுயாஷ் ஷர்மா, குருனால் பாண்டியா, யஷ் தயால் ஆகியோர் அடங்கிய அவர்களின் பௌலிங் யூனிட் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது. ஹேசில்வுட், அந்த சீசனின் மிகச் சிறந்த பௌலர்களாகத் திகழ்ந்தார். அப்படியிருந்தும் கூட ஆர்சிபி அணியால் சின்னசாமியில் 2 போட்டிகளை மட்டுமே வெல்ல முடிந்தது.
அதற்கு சில முக்கியக் காரணங்கள் இருக்கின்றன. கடந்த ஆண்டு சின்னசாமியில் முழுமையாக நடந்த 5 போட்டிகளிலுமே டாஸை தோற்றது ஆர்சிபி. அதனால் அந்த 5 போட்டிகளிலுமே அவர்கள் முதலில் பேட்டிங் செய்யவேண்டிய நிலை ஏற்பட்டது. பல போட்டிகளில் அது அவர்களுக்குப் பாதகமாக அமைந்தது.
சின்னசாமி ஸ்டேடியம் பேட்டர்களின் சொர்க்கபூமி என்பது அனைவருக்குமே தெரிந்த பொதுக்கருத்து. அது உண்மைதான் என்றாலும், முழு 40 ஓவர்களுமே ஆடுகளம் அப்படி இருக்காது. போட்டி தொடங்கியதும் ஆரம்ப கட்ட ஓவர்களில் ஆடுகளம் வேகப்பந்துவீச்சுக்கு சாதகமாக இருக்கும். நல்ல ஸ்விங் மற்றும் சீம் மூவ்மென்ட் இருக்கும். கடந்த 2025 சீசன், ராயல் சேலஞ்சர்ஸ் இங்குதான் மாட்டிக்கொண்டது.
குஜராத் டைட்டன்ஸ் அணிக்கெதிரான 2025 சீசன் போட்டியின்போது முதல் 5 ஓவர்களிலேயே 3 விக்கெட்டுகளை இழந்தது ஆர்சிபி. அதிலிருந்து மீண்ட அவர்களால் 169 ரன்களே எடுக்க முடிந்தது. டெல்லிக்கு எதிராக முதல் 7 ஓவர்களில் 3 விக்கெட்டுகளை இழந்தவர்கள், 163 ரன்கள் மட்டுமே எடுத்தார்கள். பஞ்சாப் கிங்ஸுக்கு எதிரான ஆட்டம் மழை காரணமாக 14 ஓவர்கள் கொண்ட போட்டியாக மாற்றப்பட, அந்த 14 ஓவர்களில் 9 விக்கெட்டுகளை இழந்து 95 ரன்கள் எடுத்தது.
இந்த மோசமான பேட்டிங் செயல்பாடுக்கு அந்த அணியின் அணுகுமுறையுமே ஒரு வகையில் காரணமாக அமைந்தது. ஆரம்பத்தில் விக்கெட்டை இழந்ததும் உடனடியாக அவர்களின் வேகத்தைக் குறைப்பார்கள். அது ரன்ரேட் நெருக்கடியை ஏற்படுத்தும். அது பின்னர் விக்கெட் வீழ்ச்சிக்கு வழிவகுக்கும்.
அதனால் கடந்த சீசன் சின்னசாமியில் விளையாடிய முதல் 3 போட்டிகளிலுமே குறைவான ஸ்கோரை பதிவு செய்து தோல்வியடைந்தது ஆர்சிபி. அடுத்த 2 போட்டிகளிலும் 200+ ரன்கள் எடுத்ததால், அந்தப் போட்டிகளை ராயல் சேலஞ்சர்ஸ் வென்றது.
முடிவுகள் மாறியதற்குக் காரணம் என்ன?
ஒரு விக்கெட் போனாலும் எந்த விதத்திலும் அதிரடியைக் குறைப்பதில்லை என்பதை தங்களின் தாரக மந்திரமாக மாற்றியிருக்கிறது ஆர்சிபி. விக்கெட்டுகள் வீழ்ந்தாலும் பவுண்டரிகள்/சிக்ஸர்கள் அடிக்கும் இலக்கோடு தான் ஆர்சிபி பேட்டர்கள் விளையாடுகிறார்கள். அது எதிரணி பௌலர்களுக்கு தொடர்ச்சியாக நெருக்கடியை ஏற்படுத்திக்கொண்டே இருக்கிறது.
உதாரணமாக, நேற்று (ஏப்ரல் 24, 2026) 24/1 என்ற நிலையில் களமிறங்கிய படிக்கல், தான் சந்தித்த முதல் பந்திலேயே சிக்ஸர் அடித்துத்தான் இன்னிங்ஸைத் தொடங்கினார். 20 பந்துகளில் அரைசதம் கடந்தார் அவர். ஒருகட்டத்துக்கு மேல் படிக்கல் உடன் சேர்ந்து கோலியும் அதையே செய்ய, ஆர்சிபி எளிதாக வெற்றியை நோக்கி முன்னேறியது.
சன்ரைசர்ஸுக்கு எதிரான இந்த சீசனின் முதல் போட்டியிலுமே படிக்கல் கிட்டத்தட்ட இதையே தான் செய்தார். 202 என்ற இலக்கை சேஸ் செய்த ஆர்சிபி 2வது ஓவரின் முதல் பந்தில் சால்ட் விக்கெட்டை இழந்தது. முதல் பந்தில் சிக்ஸர் அடித்துத்தான் அந்தப் போட்டியிலும் தன் இன்னிங்ஸைத் தொடக்கினார் படிக்கல். அந்தப் போட்டியிலும் 21 பந்துகளிலேயே அரைசதம் அடித்தார் படிக்கல். ஒருபக்கம் கோலி நிலைத்து நிற்க, 16வது ஓவரிலேயே இலக்கை சேஸ் செய்தது ஆர்சிபி.
இதை படிக்கல் மட்டுமல்ல, அடுத்து வரும் கேப்டன் ரஜத் பட்டிதாரும் அதையே செய்கிறார். டிம் டேவிட் போன்ற சீனியர் வீரரும் அதையே செய்கிறார். அது எதிரணிகளுக்கு நெருக்கடியை ஏற்படுத்தி அவர்களைப் பின்தங்க வைக்கிறது.
நேற்றைய போட்டி முடிந்த பிறகு பேசிய ஆட்ட நாயகன் விராட் கோலி, "படிக்கல் மிகச் சிறப்பாக விளையாடிக்கொண்டிருந்தார். பந்துவீச்சாளர்களுக்குத் தொடர்ந்து அழுத்தம் கொடுக்க வேண்டும் என்பதே எங்களது திட்டமாக இருந்தது. எங்களிடையே ஆட்டத்தைப் பற்றிய தெளிவும், ஆலோசனைகளும் இருந்தன. எங்களது பார்ட்னர்ஷிப் மீது எங்களுக்கு எந்த சந்தேகமும் இருக்கவில்லை, அதுதான் எங்களுக்கு கைகொடுத்தது.
எங்களிடம் ஒரு அபாரமான பேட்டிங் வரிசை உள்ளது. எங்களிடம் நல்ல கிரிக்கெட் ஷாட்களை விளையாடக்கூடிய வீரர்கள் உள்ளனர்; டிம் டேவிட் மற்றும் ஷெப்பர்ட் போன்ற பலமான வீரர்கள் உள்ளனர், அதோடு குருனாலின் புத்திசாலித்தனமான ஆட்டமும் உள்ளது. எனவே, செய்தி மிகவும் எளிது - உங்களுக்கு அடிக்கக்கூடிய பந்து கிடைத்தால், தயங்காமல் அடியுங்கள். ஏனெனில் பின்வரிசையில் எங்களுக்கு நல்ல பலம் இருக்கிறது." என்று கூறினார்.
இதுதான் இந்த சீசன் ஆர்சிபி அணியில் பெரிய மாற்றத்தை ஏற்படுத்தியிருக்கிறது. கடந்த சீசன் இதேபோல் பலமான பேட்டிங் யூனிட் இருந்திருந்தாலும், அவர்கள் மீது முழு நம்பிக்கை இருக்கவில்லை. பட்டிதார் சிறப்பான ஃபார்மில் இருக்கவில்லை. லிவிங்ஸ்டன் சரியாக ஆடவில்லை. படிக்கல் கூட ஆரம்பத்தில் சீராக ஆடவில்லை. அதனால் சிலபல மாற்றங்கள் இருந்துகொண்டிருந்தன.
ஆனால், இம்முறை எல்லாம் சரியாக நடக்கிறது. அதைவிட, அனைத்து பேட்டர்களுக்கும் மற்ற வீரர்கள் மீது நம்பிக்கை ஏற்பட்டிருக்கிறது. இது அவர்களை இந்த அச்சம் இல்லாத அணுகுமுறையைப் பின்பற்ற உதவுகிறது. கடந்த சீசன் கோப்பையை வென்றதும் இதற்குப் பெரிய அளவு உதவுகிறது.
அதனால் தான் முதலில் பேட்டிங் செய்யும் போட்டிகளில் மிகப் பெரிய ஸ்கோரை அந்த அணியால் பதிவு செய்ய முடிகிறது, 200+ இலக்கையும் சேஸ் செய்ய முடிகிறது. சின்னசாமி மைதானத்தில் சிறப்பான கிரிக்கெட்டை வெளிப்படுத்தி வெற்றியும் பெற முடிகிறது.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு